
இனி இந்தியாவிற்காக விளையாட போவதில்லை.. டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோகித் சர்மா..!!
இந்திய அணியின் கேப்டனாக பதவி வகித்து வரும் ரோகித் சர்மா, கடந்த 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகு அப்போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். பின்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக சிறப்பாக விளையாடி வந்தார். இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான அணி, பார்டர் – கவாஸ்கர் தொடரையும், நியூசிலாந்துக்கு எதிரான தொடரையும் இழந்தது. இதனால், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியாமல் போனது. இதை தொடர்ந்து, இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இத்தொடருக்கான டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படலாம் என தகவல் வெளியானது.
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பதிவில் ரோஹித் சர்மா கூறியதாவது, “நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். வெள்ளை நிற ஜெர்ஸியில் இந்தியாவுக்காக விளையாடியது எப்போதும் பெருமையானது. இவ்வளவு ஆண்டுகளாக எனக்குக் கிடைத்த அன்பு, ஆதரவுக்கு நன்றிகள். ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக தொடர்ந்து விளையாடுவேன்” எனக் கூறியுள்ளார். இதுவரை இந்திய அணிக்காக 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,301 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

























