
“இந்தியாவில் கட்டுமானங்கள் மேற்கொள்ள வேண்டாம்”.. மீண்டும் சர்ச்சைக்கு உள்ளன அதிபர் ட்ரம்பின் பேச்சு..!!
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக நாடுகளிடையே அமெரிக்காவை முன்னிலை படுத்த பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்க அரசாங்கத்தை மேம்படுத்த பல லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் திரட்டும் நோக்கத்துடன் சவுதி அரேபியா சென்று, அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமெரிக்கா – சவுதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.
அதில் பேசிய டிரம்ப், “இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வர்த்தகத்தை பெருமளவில் பயன்படுத்தினேன். என் தலையீட்டால் தான் தாக்குதல் நிறுத்தப்பட்டது. ஒப்பந்தம் செய்வோம், வர்த்தகம் செய்வோம் என அழைத்தேன் உடனே தாக்குதலை நிறுத்திவிட்டார்கள்” என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, தற்போது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்வதற்கு தயாராக இருக்கும் நிலையில் “உலகிலேயே அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக்கூறி இந்தியாவில் கட்டுமானங்கள் மேற்கொள்ள வேண்டாம் என்று ஆப்பிள் CEO டிம் குக்கிடம் கூறினேன்” என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

























