தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தும் கண்காட்சி.. எங்கு நடக்கவிருக்கிறது என்று தெரியுமா..?
மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், மகளிர் தயாரிக்கும் பொருட்கள் உரிய விலைக்கு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் மாநில,மாவட்ட, வட்டார அளவில் “மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் விற்பனைக் கண்காட்சிகளை” நடத்தி வருகிறது.
அதாவது, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் கண்காட்சியால் சுய உதவிக் குழுக்கள் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகின்றனர். மேலும், மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறையானது கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்த ஏற்றவாறு மாநில அரசுகளுடன் இணைந்து ‘சரஸ்’ (SARAS) எனப்படும் விற்பனை கண்காட்சி ஒன்றை தற்போது நடத்தவுள்ளது. இந்த கண்காட்சி நாளை (27-12-2024) மாலை 4 மணியளவில் “சென்னை, நந்தனம், YMCA மைதானத்தில்” நடக்கவுள்ளது.
இதை தொடர்ந்து, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புப் பொருட்களான சிவகங்கை பாரம்பரிய அரிசி வகைகள். திருவண்ணாமலை ஜவ்வாது மலை தேன், தூத்துக்குடி பனை பொருட்கள், விழுப்புரம் சுடுமண் சிற்பங்கள், விருதுநகர் செட்டிநாடு புடவைகள், அரியலூர் முந்திரி பருப்பு, கோயமுத்தூர் மூலிகை சோப்புகள், திண்டுக்கல் சின்னாளப்பட்டி சேலைகள், திருச்சி செயற்கை ஆபரணங்கள், தேனி சானிடரி நாப்கின், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், நாச்சியார் கோவில் குத்து விளக்குகள், தர்மபுரி சிறுதானிய தின்பண்டங்கள், ஈரோடு தரை விரிப்புகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிசம்பர் 27,2024 ஆம் தேதி முதல் ஜனவரி 09, 2025 ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 10.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























