கர்னல் சோபியா குரேஷி பற்றிய பாஜக அமைச்சர் கருத்து.. கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம்..!!
ஜம்மு காஷ்மீர் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்டது. இந்த ராணுவ நடவடிக்கை தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஷ்ரி, ராணுவ கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வயோமிகா சிங் ஆகியோர் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். இந்நிலையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷா “தீவிரவாதிகளுக்கு அவர்களின் சொந்த சகோதரியை பயன்படுத்தி பிரதமர் பாடம் கற்பித்தார்” என கூறியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, அமைச்சர் குன்வர் விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா அமர்வு கூறியது “நாளை நான் உயிருடன் இருப்பேனா எனத் தெரியாது. 4 மணிநேரம் தருகிறேன். அமைச்சர் குன்வர் ஷா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யுங்கள். ஒன்று, இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்கட்டும், இல்லையேல் நாளைக்குள் வழக்குப் பதிய வேண்டும்” என தெரிவித்தனர். இதை தொடர்ந்து, பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சர் குன்வர் விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்த நிலையில் “அமைச்சரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்துள்ளது”.



























