ATM கார்டு இல்லாமல் UPI பின் மாற்ற முடியுமா…? NPCI வெளியிட்ட முக்கிய தகவல்…!!
இன்றைய நவீன யுகத்தில் பொதுமக்கள் பலரும் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள UPI முறையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த UPI பரிவர்த்தனையை மேற்கொள்ள ‘பின் (Pin Number)’ என்பது கட்டாயமாகும். மேலும், இந்த UPI பின் ஆனது டெபிட் கார்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இந்நிலையில் டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை மாற்றுவது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.
அதாவது, முன்னதாக டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை மாற்றவோ அல்லது அமைக்கவோ முடியாது. ஆனால் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) தற்போது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி UPI பின்னை மாற்றியமைக்கும் விருப்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, பயனர்கள் இப்போது டெபிட் கார்டு இல்லாமல் UPI பின்னை மாற்றலாம் என கூறப்படுகிறது. இந்த செயல்முறைக்கு, மொபைல் எண் ஆனது ஆதார் மற்றும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். மேலும், UPI பின்னை மாற்றியமைக்க முதலில் வாடிக்கையாளர் தனது வங்கி கணக்கு விவரங்களை UPI செயலில் வழங்கி தனது கணக்கிற்கான பின்னை அமைக்கும் விருப்பத்தை தேர்ந்தெடுத்து ஆதார் எண்ணின் முதல் 6 இலக்கங்களை உள்ளிடவும். அதன் பின்னர் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை உள்ளீட்டு புதிய UPI பின்னை உருவாக்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























