அடுத்தகட்ட போராட்டத்தை அறிவித்த ஜாக்டோ ஜியோ அமைப்பினர்…!! அரசுக்கு ஒரு வாரம் காலஅவகாசம் அறிவிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் பணியாளர் கூட்டமைப்பான “ஜாக்டோ ஜியோ”, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், இதற்கு முன் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றும் பலனளிக்கவில்லை. இதையடுத்து, தமிழ்நாடு பட்ஜெட்டில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகும் என அரசு உறுதியளித்தும் இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது.
இதனால், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேற்று தமிழகம் முழுவதும் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். இதில், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஆனால், அரசு தற்போது வரை மௌனம் காப்பதால், வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி அன்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட நிர்வாகிகள் குழு சார்பில் அடுத்தகட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், தமிழக அரசிற்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில், ஒரு வாரம் காத்திருக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த மார்ச் 30 ஆம் தேதி கால அவகாசத்திற்குள் சட்டப்பேரவை 110 கீழ் ஏதேனும் அறிவிப்புகள் வெளியாகுமா எனவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


























