
புயலால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு கடன் உதவி.. தொழில் நிலைப்பாட்டை சீரமைக்க இழப்பீடு வழங்கும் தமிழக அரசு..
அவசர தேவைக்காக ஏழை, எளிய மக்கள் அதிக வட்டிக்கு பணத்தை கடனாக வாங்குகின்றனர். இதனால் மாதந்தோறும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் முழுவதும் வட்டியை திருப்பிச் செலுத்துவதிலேயே போய்விடுகிறது. இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு சார்பில் இழப்பீடு தொகை குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த இயற்கை சீற்றம் காரணமாக சிறு வணிகர்கள், சிறுதொழில் உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். எனவே கூட்டுறவுத் துறையின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்ட சிறுவணிகர்களுக்கு “சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்” என்ற முகாம் நடத்தி தமிழக அரசு 10,000 முதல் 1 லட்சம் வரை கடன் வழங்கவுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெரு வியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்கான மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேலே குறிப்பிடப்பட்ட நபர்கள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருந்தால் தங்களது தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட அட்டையை பயன்படுத்தியும் கடன் பெற்றுக்கொள்ளலாம்.























