வீரர்களுக்கான ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது BCCI.. யாரெல்லாம் தேர்வாகியுள்ளார் என தெரியுமா..??
இந்திய ஆடவர் அணி கடந்த இரண்டு ஆண்டுகளில் டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரு ICC தொடர்களை வென்று அசத்தியுள்ளது. இதை தொடர்ந்து, இந்திய வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தம் நிர்ணயக்கப்பட்டுள்ளது. இந்த BCCI மத்திய ஒப்பந்தங்கள் என்பது வருடாந்திர தக்கவைப்பு முறையாகும். இது கிரிக்கெட் வீரர்கள் இந்திய கிரிக்கெட் அமைப்பிற்கு அளித்த பங்களிப்பின் அடிப்படையில் A+, A, B, C என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு ரூ.1 கோடி முதல் ரூ.7 கோடி வரையிலான ஊதியம் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் BCCI இன்று (21-04-2025), 2024-25 சுழற்சிக்கான ஆடவர் இந்திய கிரிக்கெட் அணிக்கான மத்திய ஒப்பந்தங்களை தற்போது வெளியிட்டது. இது அக்டோபர் 2024 முதல் செப்டம்பர் 2025 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இதில் கிரேடு A+: விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா. கிரேடு A : கே.எல். ராகுல், சுப்மன் கில், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட். கிரேடு B: சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர். இறுதியாக கிரேடு C: துரூவ் ஜுரெல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா உட்பட 19 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



























