கலால் வரி உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா?
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கும் என பரவலாக கூறப்பட்டு வருகிறது. மத்திய அரசு உயர்த்தியுள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையை பொருத்தளவில் சென்னையில் இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் ரூ. 100.93 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று லிட்டருக்கு 13 காசுகள் குறைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ. 92.39 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த சூழலில் கலால் வரி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


























