TNPSC Tamil Ilakkanam Vinayalanayum Peyar Study Material – Free PDF Download
TNPSC தமிழ் தகுதித்தேர்வு – வினையாலணையும் பெயர்:
வினையின் அடிப்படையில் உருவாகும் பெயர்கள்:
- பொதுவாக, வினையின் அடிப்படையில் உருவாகும் பெயர்கள் இரண்டு வகைப்படும். அவை,
- தொழில் பெயர்
- வினையாலணையும் பெயர்
தொழில் பெயர்:
- ஒரு வினையிலிருந்து உருவாகி, அவ்வினையை குறிக்கும் பெயராக வருவது “தொழில் பெயர்” ஆகும்.
- எடுத்துக்காட்டாக,
ஆடு – ஆட்டம்
ஓடு – ஓட்டம்
- இதில், ஆடு, ஓடு ஆகியவை வினை சொற்கள் ஆகும். ஆட்டம், ஓட்டம் ஆகியவை தொழில்பெயர்களாகும்.
வினையாலணையும் பெயர்:
- வினையாலணையும் பெயர் = வினை + ஆல் + அணையும் பெயர். அதாவது, தொழிலை செய்பவருக்கு பெயராக வருவது “வினையாலணையும் பெயர்” எனப்படுகிறது.
- இவை இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்று காலத்தையும் காட்டும். அதேபோல், ஒருமை, பன்மை, மூன்று பால் (ஆண்பால், பெண்பால், பலர்பால்) ஆகியவற்றையும் காட்டும்.
- எடுத்துக்காட்டாக,
வந்தான் (வந்தவன்) நல்லவன்.
வந்தானைப் (வந்தவனைப்) பார்த்தேன்.
வெந்ததை உண்கிறோம்.
- இத்தொடர்களில் உள்ள வந்தான், வெந்தது ஆகிய வினைமுற்று சொற்கள் வினையாலணையும் பெயர்களாக வருகின்றன.
- வினையாலணையும் பெயர்கள் பொதுவாக குறிப்பு வினையிலிருந்தும் அமையும். எடுத்துக்காட்டாக,
கரியவனைக் கண்டாயா?
கரியானை வரச் சொல்?
வினையாலணையும் பெயரின் வகைகள்:
- வினையாலணையும் பெயர் மூன்று வகைப்படும். அவை
- தன்மை வினையாலணையும் பெயர்
- முன்னிலை வினையாலணையும் பெயர்
- படர்க்கை வினையாலணையும் பெயர்
தன்மை வினையாலணையும் பெயர்:
- தன்மை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால், அது “தன்மை வினையாலணையும் பெயர்” எனப்படும். எடுத்துக்காட்டாக,
எடுத்தேனைப் பார்த்தாயா?
எடுத்தேமைப் பார்த்தாயா?
- இதில், முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.
முன்னிலை வினையாலணையும் பெயர்:
- முன்னிலை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால், அது “முன்னிலை வினையாலணையும் பெயர்” எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
சென்றாயைக் கண்டேன்.
சென்றீரைக் கண்டேன்.
- இதிலும், முதலில் உள்ள எடுத்துக்காட்டு ஒருமையையும், இரண்டாவது எடுத்துக்காட்டு பன்மையையும் குறிக்கிறது.
படர்க்கை வினையாலணையும் பெயர்:
- படர்க்கை வினைமுற்று, பெயர்த் தன்மை பெற்று வந்தால், அது “படர்க்கை வினையாலணையும் பெயர்” எனப்படுகிறது. எடுத்துக்காட்டாக,
படித்தவனுக்குப் பரிசு கிடைத்தது.
- தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று வினையாலணையும் பெயர்களும் உடன்பாட்டுப் பொருளில் வரும்.
- வினையாலணையும் பெயர் எதிர்மறைப் பொருளில் வருவதும் உண்டு.
பாடாதவர் பரிசு பெற முடியாது.
- இதில், பாடாதவர் என்பது எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது.
- வினையாலணையும் பெயர்கள் ஒரு வகையில் தொழில்பெயர்கள் போன்றவையே. கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தொழில்பெயருக்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடுகளை காண்போம்.
|
தொழில் பெயர் |
வினையாலணையும் பெயர் |
|
தொழிலை மட்டும் உணர்த்தும் |
தொழிலையும் தொழில் செய்த பொருளையும் உணர்த்தும் |
| படர்க்கை இடத்தில் மட்டும் வரும் |
தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூவிடங்களிலும் வரும் |
|
காலம் காட்டாது |
காலம் காட்டும் |


























