சென்னையில் பிங்க் ஆட்டோ சேவை துவக்கம்…அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குன்னு தெரியுமா…??
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் இன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில் மொத்தம் 250 பிங்க் ஆட்டோக்கள், பெண் ஓட்டுனர்கள் மூலம் மாநகர் முழுவதும் இயக்கப்பட உள்ளது. மேலும், இந்த பிங்க் ஆட்டோ சென்னையில் உள்ள பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்களுக்கு சுய தொழில் வழங்கும் நோக்கத்தோடும் தொடங்கப்பட்டதாகும்.
மேலும், இந்த பிங்க் ஆட்டோவில் பெண்களுக்கு நாப்கின், சானிடைசர், தீயணைப்பு கருவி மற்றும் போலீசால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் ஜிபிஎஸ் கருவி போன்ற சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளது. அதிலும், குறிப்பாக பிங்க் ஆட்டோவில் ஒருபுறம் சிஎன்ஜி எரிவாயு கலன், அதன் மறுபுறம் பெட்ரோல் கலன் என இரண்டு வகையான எரிபொருள் வசதிகளுடன் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக சென்னையில் 200 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, பிங்க் ஆட்டோ வாங்க, தலா 1 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
























