
சட்டமன்றத்தில் நடைபெற்ற மானியக் கோரிக்கை கூட்டத்தொடர்.. மீனவர் நலன் குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள்..!!
தமிழக சட்டமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் இன்றைய தினம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்ந்த மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110 ன் கீழ் மீனவர் நலன் சார்ந்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி “வலை பின்னுதல், படகு கட்டுமான தொழில், கருவாடு தயாரித்தல், படகு ஓட்டுநர் பயிற்சி ஆகிய தொழில்கள் செய்ய ரூ.54 கோடியில் 20,100 மீனவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதை தொடர்ந்து, “கடல் பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை தொடர்புடைய தொழில்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து, தொழிலில் ஈடுபட 7,000 பயனாளிகளுக்கு ரூ.52.33 கோடியில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்” என்றும், இந்த திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் திட்ட செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

























