RRB தேர்வு கடைசி நிமிடத்தில் ரத்து…வெளிமாநிலங்களில் தமிழக தேர்வர்கள் பரிதவிப்பு
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியமானது ரயில்வே துறையில் உள்ள காலிப்பணியிடங்களை ஆண்டுதோறும் நிரப்பி வருகிறது. அந்தவகையில், தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் பணிக்கு காலியாக உள்ள மொத்தம் 493 பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை சமீபத்தில் வெளியிட்டது. மேலும், இதற்கான முதற்கட்ட எழுத்து தேர்வில் தமிழக தேர்வர்கள் 6,315 பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டத் தேர்வுகள் இன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியானது.
மேலும், இந்த தேர்வில் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் 90% பேருக்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இன்று ஷிப்ட் முறையில் நடைபெற இருந்த இரண்டு தேர்வுகளும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்படுவதாக எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தேர்வு மையத்தில் தீடிரென நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இன்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொழி தெரியாத மாநிலங்களில் தமிழக தேர்வர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை கண்டித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


























