இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்.. பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்..
கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாடு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யா அதிபர் புதினை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். மேலும், அக்டோபர் மாதம் கசானில் நடந்த BRICS மாநாட்டிற்காக மோடி ரஷ்யா சென்றிருந்தார். இந்த சந்திப்புகளுக்கு பிறகு பிரதமர் மோடியுடனான ரஷ்யா அதிபர் புதினின் உறவு வலுப்பெற்றது. இந்நிலையில் மோடி மற்றும் புதின் மீண்டும் சந்திக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் புதின் விரைவில் இந்தியா வர உள்ளதாக கூறியுள்ளார். மேலும், புதினின் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அறிவித்த அவர் எந்த குறிப்பிட்ட தேதியும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்”. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்த பிறகு, பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று புதின் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
























