இந்திய வரலாற்றில் அந்நியப் படையெடுப்பை எதிர்த்து, தாய்நாட்டைக் காக்க ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் அரசர்கள் பலரை நாம் ஜான்சி ராணி லட்சுமி பாய்க்கு முன்பே கண்டுள்ளோம். அவர்களுள் மிக முக்கியமானவர் மத்திய இந்தியாவின் கோண்ட்வானா (Gondwana) பகுதியை ஆண்ட மகாராணி துர்காவதி.
1564 ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று அவர் நாட்டுக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த அந்த வீர வரலாற்றையும், இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படும் அவரது பலிதான் திவாஸ் (Martyrdom Day) குறித்தும் இந்தத் தொகுப்பில் விரிவாகக் காண்போம்.
செழிப்பான கோண்ட்வானா மற்றும் ராணி துர்காவதி
ராணி துர்காவதி சிறந்த போர் வீராங்கனை மட்டுமல்ல, மிகச் சிறந்த திறமையான ஆட்சியாளரும் ஆவார். 1550-ல் தன் கணவர் தல்பத் ஷா காலமான பிறகு, தன் இளம் வயது மகன் வீர் நாராயணனை அரியணையில் அமர்த்தி, நாட்டின் பொறுப்பைத் தானே ஏற்றார். இவரது 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் கோண்ட்வானா பகுதி பொருளாதார ரீதியாகவும், நீர் மேலாண்மையிலும் (ராணிதால், செரிதால் போன்ற ஏரிகள் அமைப்பு) மிகவும் செழிப்படைந்தது.
முகலாயப் பேரரசர் அக்பரின் படையெடுப்பு
கோண்ட்வானா பகுதியின் செல்வச் செழிப்பைக் கண்டு அதைக் கைப்பற்ற விரும்பிய முகலாயப் பேரரசர் அக்பர், தனது தளபதி ஆசாப் கான் (Asaf Khan) தலைமையில் ஒரு பெரிய படையை 1564-ல் அனுப்பினார். நவீன ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகளைக் கொண்ட முகலாயப் படையை, தன் சிறிய படையுடன் துணிச்சலாக எதிர்கொண்டார் ராணி துர்காவதி. நராய் நலா (Battle of Narai Nala) என்ற இடத்தில் ஜூன் 23 அன்று நடந்த முதல் நாள் போரில் ராணி துர்காவதி முகலாயப் படைகளைத் துரத்தியடித்து மாபெரும் வெற்றி பெற்றார்.
அடிமையாவதை விட மரணமே மேல்!
மறுநாள், ஜூன் 24 அன்று முகலாயப் படைகள் கூடுதல் பீரங்கி பலத்துடன் மீண்டும் தாக்கின. இப்போரில் ராணியின் மகன் வீர் நாராயணன் படுகாயமடைந்ததால் அவரைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பினார். எனினும், ராணி துர்காவதி தனது ‘சர்மன்’ (Sarman) என்ற யானையின் மீது அமர்ந்து தொடர்ந்து போரிட்டார்.போரின் போது ஒரு அம்பு அவரது காதுக்கு அருகிலும், மற்றொரு அம்பு அவரது கழுத்திலும் பாய்ந்து பலத்த காயமடைந்தார். மயக்கம் தெளிந்து எழுந்த ராணி, போரில் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்தார். அவரது பாகன் (Mahout) அவரைப் போர்க்களத்தை விட்டு வெளியேற அறிவுறுத்தினார். ஆனால், எதிரிகளிடம் கைதியாகச் சிக்கித் தன் மானத்தை இழக்க விரும்பாத ராணி, “அவமானத்துடன் வாழ்வதை விட, மரியாதையுடன் மரணமடைவதே மேல்” எனக் கூறி, தன் இடுப்பில் இருந்த கத்தியை (Dagger) எடுத்துத் தன் நெஞ்சில் குத்திக் கொண்டு வீரமரணமடைந்தார்.
போட்டித் தேர்வுக்கான பொது அறிவுத் துளிகள் (GK)
-
- ராணி துர்காவதியின் தியாகத்தைப் போற்றும் வகையில் ஜூன் 24 அன்று மத்தியப் பிரதேசத்தில் பலிதான் திவாஸ் (Balidan Diwas) ஆக அனுசரிக்கப்படுகிறது.
- இவரது நினைவாக ஜபல்பூர் பல்கலைக்கழகத்திற்கு ‘ராணி துர்காவதி விஸ்வவித்யாலயா’ என 1983-ல் பெயர் மாற்றப்பட்டது.
- இந்திய அரசு 1988 ஜூன் 24 அன்று இவரது நினைவாக அஞ்சல் தலை (Postage Stamp) வெளியிட்டுச் சிறப்பித்தது.
உங்களுக்கான இன்றைய GK கேள்வி! (Quiz Time)
ராணி துர்காவதி முகலாயர்களை எதிர்த்துப் போரிட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்களத்தின் பெயர் என்ன?
-
- அ) பிளாசி போர் (Battle of Plassey)
- ஆ) நராய் நலா போர் (Battle of Narai Nala)
- இ) பானிபட் போர் (Battle of Panipat)



























