
முதல்வர் தான் மனசு வைக்க வேண்டும்…இதை விட்டால் வேற வாய்ப்பு இல்லை…!! ” பகுதி நேர ஆசிரியர்களின் கேள்வி”..!!
தற்போது தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிட முன்னேற்ற கழகம்(தி.மு.க) ஆனது கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒவ்வொன்றாக செயல்படுத்தி வரும் தி.மு.க அரசு, பகுதி நேர ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதியை மட்டும் மறந்துவிட்டதா? என பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதாவது, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் கடந்த 2012 ஆண்டு தமிழ்நாடு அரசின் நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலை பள்ளியில் பகுதி நேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் 12,000 பேரின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அவர்களை பணி நிரந்தரம் செய்வதாக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது ஸ்டாலின் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் விரைந்து இதற்கான முடிவுகளை எடுக்குமாறும் முதல்வருக்கு பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு ரூ.10,000 மாத ஊதியம், அதுவும் மே மாதத்தில் ஊதியம் இல்லாமல் தவிப்பு, மருத்துவ காப்பீடு, EPFO, போனஸ், குடும்ப நல நிதி போன்ற எதுவும் இல்லாமல் இருக்கும் பகுதி நேர ஆசிரியர்களின் நிலையை அறிந்து, இதிலிருந்து எங்களை மீட்டு காலமுறை சம்பளத்துடன் பணி நிரந்தரம் முதல்வர் ஸ்டாலின் செய்வார் என்று நம்பியிருந்தோம். மேலும், 2021ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் அமைத்து, தொடர்ந்து 2022, 2023,2024 என 3 முழுமையான பட்ஜெட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ. 1,53,827 கோடி பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இதில், பகுதி நேர ஆசிரியர்களுக்கு காலமுறை சம்பளம் மற்றும் பணி நிரந்தரத்திற்காக ரூ.265 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு 60% மற்றும் மாநில அரசு 40% என்ற கணக்கில் ரூ. 132 கோடி ஒதுக்கி நடப்பாண்டு காலமுறை சம்பளத்தை ரூ.2500 ஆக உயர்த்தியது.
மேலும், பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பு ஆசிரியர்களாக பணி அமர்த்தினால் அவர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ.20,600 வழங்க வேண்டும். இது மொத்தமாக 1 ஆண்டுக்கு ரூ. 430 கோடி ஆகும். எனவே, 2025ம் ஆண்டு கவர்னர் தலைமையில் கூடும் சட்டசபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இதை கொள்கை முடிவாக சேர்க்க வேண்டும். இந்த வாய்ப்பை தவற விட்டால், பின்னர் இடைக்கால தேர்தலில் முதல்வர் நினைத்தால் கூட இந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

























