அரசு சார்பில் 25,000 புதிய வீடுகள் கட்டும் திட்டம்…ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்
தமிழகத்தில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ், ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டி தரப்படுகின்றன. அதில், குறிப்பாக “முதலமைச்சரின் வீடுகள் மறுக்கட்டுமான திட்டத்தின்” கீழ் 2001 ஆம் ஆண்டிற்கு முன் கிராமபுறங்களில் அரசு திட்டத்தின் கீழ் கட்டித்தரப்பட்ட வீடுகள் ஏதேனும் சேதமடைந்தால், அரசு சார்பில் புதிதாக கட்டி தரப்படுகிறது. மேலும், 2025 -2026 ஆம் நிதியாண்டில் 25,000 புதிய வீடுகள் கட்டுவதற்கு, ரூ. 600 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாநில பட்ஜெட்டில் அறிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் கன்தீப் சிங் பேடி நேற்று வெளியிட்ட அரசாணையில், “கிராமப்புறங்களில் அரசு மறுசீரமைக்க முடியாத 25,000 வீடுகளை புதிதாக கட்டி தர முதலமைச்சரின் வீடுகள் மறுக்கட்டுமான திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளித்துள்ளதாக” தெரிவித்துள்ளார். மேலும், “இத்திட்டத்திற்கு மாநில அரசின் நிதி ரூ. 100 கோடியும், திட்டத்திற்கான நிதி ரூ. 500 கோடியும் மொத்தம் ரூ. 6,00 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.


























