
கோடை மழையால் தூத்துக்குடி உப்பளங்களில் உற்பத்தி பாதிப்பு…தமிழ்நாட்டில் உப்பு விலை அதிரடியாக உயரும் என தகவல்
நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் தான் முதலில் உள்ளது. மேலும், அங்கு சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு, மொத்தம் 30,000 பேர் வேலை செய்து வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஆண்டிற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அங்கு கடந்த ஒரு வாரமாக பெய்து வந்த கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாக உப்பு தொழிலாளர்கள் சங்கத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் தான் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கப்பட்டு, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு சீசன் தொடரும் என்றும், இந்த பருவம் தவறி பெய்த மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி ஆரம்பகட்ட உற்பத்தி பாதிப்படைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், உப்பு வரத்து குறைந்ததால், உப்பு ஒரு டன்னுக்கு 5,000 ரூபாய் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

























