
எதிர்கட்சிக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர்…!! தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டம் குறித்து வெளியான முக்கிய தகவல்
மத்திய அரசு வலியுறுத்தி வரும் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை அன்று தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் 7 மாநில தலைவர்கள் ஒன்றுகூடி, சென்னையில் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டு குழு கூட்டம் ஒன்றை நடத்தினர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் தொகுதி மறுசீரமைப்பு குறித்த விழிப்புணர்வு தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக இன்று (24.03.2025) நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “மாநிலங்களில் தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையே அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும்” என்றும், “மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக பணியாற்றியதற்கு மத்திய அரசு தண்டிக்க கூடாது” என்றும் “சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து, “தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டு குழு கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்றும் தெரிவித்துள்ளார்.























