TNPSC குரூப் – 1 முதல் நிலை தேர்வு முடிவுகளுக்கு தடை?- மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்விற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்கிற வழக்கிற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
TNPSC குரூப் – 1
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பஞ்சாயத்து உதவி இயக்குனர், கூட்டுறவுத்துறை, துணை சரக பதிவாளர், துணை கலெக்டர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முதலான பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு கடந்த நவம்பர் 11-ம் தேதி நடத்தப்பட்டது. இதன் பின்னர் இதற்கான விடைகுறிப்பு வெளியிடப்பட்ட நிலையில் 19 கேள்விகளின் விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமண குமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், 19 கேள்விகளின் விடை தவறாக குறிப்பிடப்பட்டிருந்ததை ஆதாரத்துடன் கூறியிருந்தும் வல்லுநர் குழு எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை என டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவினை உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் டிஎன்பிஎஸ்சி செயலாளர் வரும் ஜூன் 19ஆம் தேதிக்குள் இந்த மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.