மலிவு விலையில் இணைய சேவை வழங்கவிருக்கும் அரசு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதன் படி இன்று (25-04-2025) தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். இதை தொடர்ந்து, பேசிய அவர் “தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கேபிள் டிவி சேவை போல, 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவையை ஏற்படுத்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகளை, வாட்ஸ்அப் செயலி மூலமாக ஒருங்கிணைத்து வழங்க உள்ளதாகவும் கூறினார்”.
மேலும், “இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஏற்கனவே 2,000 அரசு அலுவலகங்களுக்கான இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், 4,800 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்று விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் இடங்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.



























