
உங்க நில விவரங்களை இன்னும் பதிவு செய்யலையா..? அப்போ உடனே இதை செய்யுங்க.. மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட முக்கிய தகவல்..
மத்திய மற்றும் மாநில அரசுகள் சாமானிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அரசு, ஆதார் எண் போன்ற தனி அடையாள எண் வழங்குகிறது. இதற்காக மத்திய அரசின், வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ், விவசாயிகளின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட பதிவு சான்றிதழ், பயிர் சாகுபடி உள்ளிட்ட பல்வேறு விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில் விவசாயிகள் தனி அடையாள எண் பெறுவது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, மத்திய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறி முறைப்படி, தமிழகம் முழுவதும் மின்னணு முறையில், விவசாயிகளின் நிலம் தொடர்பான விவரங்களை சேகரிக்க அனைத்து கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பணியை, வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம் உள்ளிட்ட 4 பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே “விவசாயிகள் தங்களது பட்டா, சிட்டா மற்றும் ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் போனுடன் அருகில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு சென்று, வரும், 31ம் தேதிக்குள் நிலம் உரிமை சம்மந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்து கொள்ளுமாறு மத்திய வேளாண் துறை அறிவித்துள்ளது. இந்த அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மத்திய அரசு திட்டங்களின் கீழ் பிரதமரின் விவசாய மானிய உதவிகள், பயிர் கடன், கிசான் கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

























