அமலுக்கு வந்தது புதிய FASTag விதிமுறைகள்.. முறையாக பின்பற்றவில்லை என்றால் இரட்டிப்பாக அபராதம்…
மக்கள் பயணம் செய்யும் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களிடம், அரசாங்கம் டோல்கேட் வரி வசூலிக்கிறது. மேலும், டோல் கேட்டில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்பதை தவிர்க்க ஆன்லைன் வாயிலாக சுங்க கட்டணத்தை செலுத்த “ஃபாஸ்ட் டேக்” (FASTag) சேவையை மத்திய அரசு அமல்படுத்தியது. மேலும், இந்த ஃபாஸ்ட் டேக் தொடர்பான புதிய விதிகள் பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஃபாஸ்டேக் சரிபார்ப்பு விதிகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இன்று (17-02-2025) முதல் நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டிற்கான புதிய பாஸ்டேக் விதிமுறைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக ஒரு வாகனம் டோல் பிளாசாவிற்குள் நுழையும் போது அதன் பாஸ்டேக் கணக்கில் போதுமான தொகை இல்லை என்றால், அபராதம் வசூலிக்கப்படும். இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக ஓட்டுனர்கள் டோல் பிளாசாவை கடப்பதற்கு முன்பு தனது கணக்கை ரீசார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்யவில்லை தவறினால் சுங்க கட்டணத்தை இரட்டிப்பாக செலுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.
























