ரூ.2000 வழங்குவதில் சிக்கல்..!! பொதுமக்கள் காத்திருப்பு..!!
ஃபெஞ்சல் புயலால் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து எங்கும் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. மேலும், இம்மழையினால் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இம்மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 2000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், இதற்கான டோக்கன் விநியோகம் நேற்று தொடங்கப்பட்டு, இன்று ரூ. 2000 விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடலூரில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் சர்வர் பிரச்சனையால் நிவாரண தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, நேற்று ரேஷன் அட்டை காண்பித்து டோக்கன் பெற்றுக்கொண்ட நிலையில், இன்று கைரேகை வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டதால் பொதுமக்கள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
























