
தமிழ்நாட்டில் அறிமுகமாகும் RRTS விரைவு ரயில் போக்குவரத்து சேவை…!! சென்னை மெட்ரோ நிறுவனம் டெண்டர் வெளியீடு
தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 -2026 ஆம் ஆண்டிற்கான மாநில பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அதில், குறிப்பாக தமிழ்நாட்டில் மூன்று வழித்தடங்களில் பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து சேவை (RRTS) உருவாக்கப்படும் என்றும், அதற்கான விரிவான சாத்தியக்கூறு ஆய்வுகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தார்.
அதன்படி, சென்னை – செங்கல்பட்டு – திண்டிவனம் – விழுப்புரம் மற்றும் சென்னை – காஞ்சிபுரம் – வேலூர் மற்றும் கோவை – திருப்பூர் – ஈரோடு – சேலம் ஆகிய மூன்று வழித்தடங்களில் RRTS போக்குவரத்து சேவை உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது இந்த மூன்று வழித்தடங்களில் RRTS போக்குவரத்து சேவையை உருவாக்க விரிவான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், மணிக்கு 160 கி.மீ வேகத்தில் ரயில் செல்லும் வகையிலான இந்த RRTS போக்குவரத்து சேவை தற்போது, டெல்லி – மீரட் இடையே செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

























