
நீங்க வாங்கும் பொருளோட MRP விலைக்கு மேல் GST செலுத்துறீங்களா…?? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
கடைகளில் வாங்கும் பொருட்களுக்கு, எம்ஆர்பி விலைக்கு மேல் ஜிஎஸ்டி வசூல் செய்வதாக தற்போது நுகர்வோர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. மேலும், நமக்கு எம்ஆர்பி விலையில் வாங்கும் பொருட்களுக்கு கூடுதலாக ஜிஎஸ்டி செலுத்த வேண்டுமா அல்லது எம்ஆர்பி விலையில் ஏற்கனவே ஜிஎஸ்டி சேர்க்கப்பட்டுள்ளதா என்று பல குழப்பங்கள் இருக்கும். இதற்கு, பொருளாதார நிபுணர்கள் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளனர். அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
அதாவது, அளவியல் சட்டத்தின் படி, ஒரு பொருள் தயாரிக்கும் போது, அதன் எடை குறித்த விவரங்கள் மற்றும் ஜிஎஸ்டி உட்பட அனைத்து வரிகளையும் சேர்த்து நிர்ணயம் செய்யப்பட்ட எம்ஆர்பி விலையை பாக்கெட்டின் பின்புறம் குறிப்பிட வேண்டும். அப்படி, செய்யாவிட்டால் அது அளவியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும். மேலும், மக்களுக்கு ஏற்படும் இதுபோன்ற குழப்பங்களை தீர்ப்பதற்காகவே அரசாங்கம் “Mera Bill Mera Adhikaar” என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதில், நாம் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பதிவேற்றினால், அதிகாரிகள் அதனை சரிபார்த்து நமக்கு பதிலளிப்பர். இதுதவிர, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1915 மற்றும் 1800 114 000 மூலமாகவும் தங்களது புகார்களை அளிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

























