பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்த்தப்படும் என முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். ஏற்கெனவே ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.
3.16 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்
இந்த விலை உயர்வின் மூலம் மாநிலம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாட்டுத் தீவனம் உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளதால், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கு கூடுதல் செலவு
பால் கொள்முதல் விலை உயர்வால் அரசுக்கு மாதத்திற்கு ரூ.60 கோடியும், ஆண்டுக்கு ரூ.720 கோடியும் கூடுதல் செலவு ஏற்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த கூடுதல் செலவை ஆவின் நிறுவனத்திற்கு அரசு ஈடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், லிட்டருக்கு ரூ.44 என்ற புதிய கொள்முதல் விலை விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























