
போர் பதற்றம் காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்படுமா..? சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையா..? UGC அளித்த விளக்கம்..!!
பல்கலைக்கழக மானியக் குழு (UGC) என்பது உயர்கல்வியை ஒருங்கிணைத்து, பராமரித்து, ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். மேலும், நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், தேர்வு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் தரங்களை இந்த அமைப்பு நிர்வகிக்கிறது. இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வருவதாக கூறி, UGC பெயரில் போலியான அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த போலி அறிவிப்பில், நாடு முழுவதும் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் உடனடியாக தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த தவறான தகவலால் மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் இந்த போலியான அறிவிப்பு குறித்து UGC அமைப்பு தற்போது விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, UGC அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சமூக வலைதளங்களில் பரவி வரும் போர் பதற்றம் குறித்த அறிவிப்பு முற்றிலும் பொய்யானது. மாணவர்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம். UGC யாருக்கும் இதுபோன்ற எந்த உத்தரவையும் வெளியிடவில்லை” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், UGC இன் அனைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் “www.ugc.gov.in மற்றும்” என்ற இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடக பக்கங்களில் மட்டுமே வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இதுபோன்ற தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக UGC இன் இணையதளம் மற்றும் சமூக ஊடக பக்கங்களை மட்டும் பின் தொடருமாறு கேட்டுக்கொண்டுள்ளது.


























