TN Weather Update: அடுத்த 36 மணிநேரத்தில் புதிய காற்றழுத்தம்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..!!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், அடுத்த 36 மணி நேரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று (07-04-2025) முதல் வரும் 12-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



























