
கோடை வெயிலை தணிக்க இனி ஜில்லுன்னு மோர் பாக்கெட்…!! தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர், மண்டல கழக மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும், பேருந்து நிலையங்கள், நேர கண்காணிப்பாளர் அறைகள், உணவகம் மற்றும் ஓய்வறைகள் உள்ளிட்டவற்றில் போதுமான குடிநீர் மற்றும் மோர் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை ஊழியர்கள் அணுகும் இடங்களில் வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தரமான குடிநீரை உறுதிசெய்ய ஆர்ஓ வாட்டர் இயந்திரங்களை பராமரிக்கவும், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க அறிவுறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஓ.ஆர்.எஸ் பொட்டலங்களை அவர்களுக்கு வழங்கவும், வெயில் நேரங்களில் தொப்பி அணியுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெயில் காரணமாக மயக்கம், தலைவலி ஏதேனும் உடல் கோளாறுகள் ஏற்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும், பேருந்துகளில் முதலுதவி பெட்டிகள் அவசியம் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பஸ் ரேடியேட்டர் வெப்பத்தை அவ்வப்போது பரிசோதித்து, அதில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

























