தமிழர் வணிகம்,தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள்
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தமிழர் வணிகம்,தொல்லியல் ஆய்வுகள், கடற்பயணங்கள் தொடர்பான செய்திகள் முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
தமிழர் வணிகம்
- உள்நாட்டு வணிகத்தை விட அயல்நாட்டு வணிகம் வருவாய் மிகுதி.
- அயல்நாட்டு வணிகத்தில் நிலவழி வணிகத்தை விட நீர்வழி வணிகத்தில் வருவாய் மிகுதி.
- நெல், கம்பு, சோளம், கேழ்வரகு, திணை, சாமை, வரகு ஆகிய தானியங்கள் உள்நாட்டு வணிகத்திற்கு சிறந்தன.
- உளுந்து, கடலை, அவரை, எள், கொள், துவரை, தட்டை, பச்சை ஆகிய பருப்பு வகைகள் உள்நாட்டு வணிகத்திற்கு சிறந்தன.
- உப்பும் உள்நாட்டு வணிகத்தில் முதன்மை பெற்றிருந்தது.
- பொன், மணி, முத்து, பவளம், சந்தனம், யானைத்தந்தம், அகில், வெண்துகில், ஏலக்காய், போன்ற வாசனைப் பொருள்கள் வெளிநாட்டு வணிகத்தில் முதன்மை பெற்றிருந்தன.
- மயில் என்ற பறவை வெளிநாட்டு வணிகத்தில் முதன்மை பெற்றிருந்தன.
- தமிழர்கள் பாபிலோன், சுமேரியா கிரீஸ், எகிப்து, மெசபடோமியா, மடகாஸ்கர், போன்ற மேலை நாடுகளுடனும், சீனா, மலேசியா, சாவா கம்போடியா போன்ற கீழை நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்.
“யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னோடு வந்து கறியொடு பெயரும்”
என்பது கிரேக்கத்துடன் நடந்த ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தைக் குறிக்கிறது.
- தமிழர்கள் கிரேக்கர்களையும், உரோமானியர்களையும் யவனர் என்றனர்.
- பின் மேலை நாட்டவர் அனைரையும் யவனர் எனக் குறித்தனர்.
- மேலை நாட்டு வணிகத்தால் அரிசி என்ற சொல் ஒரைஸா என்று கிரேக்க மொழிக்குச் சென்றது.
- பின் அதிலிருந்து ஆங்கில மொழிக்கு ரைஸ் என்று சென்றது.
- சீனத்துப்பட்டும் சர்க்கரையும் சீனாவிலிருந்து இறக்குமதி ஆயின.
- சீனக்களிமண், சீனப்பட்டு, சீனக்குடை போன்ற சொற்கள் இன்றும் வழக்கில் உள்ளன.
- இதனால் தான் சர்க்கரைக்கு “சீனி” என்ற பெயர் உள்ளது.
- அதியமானின் முன்னோர்கள் சீனாவிலிருந்து கரும்பைக் கொண்டு வந்தனர்.
- கி.மு.10 ம் நூற்றாண்டில் அரசன் சாலமனுக்குத் தமிழகத்திலிருந்து யானைத்தந்தம், மயிற்தோகை வாசனைப் பொருள் அனுப்பட்டன.
இலக்கியத்தில் வணிகர்கள்
- வணிகத்தைப் பரம்பரையாகச் செய்துவரும் வணிக மரபினர் வைசியர் எனப்படுவர்.
- இவர்களை விட இப்பர், கவிப்பர், பெருங்குடி வணிகர் போன்ற வகையினர் தாம் கொண்ட பொருளால் பெயர் பெற்றனர்.
தாம் செய்யும் வியாபாரத்தாற் பிரிக்கப்பட்டவர்கள்.
- கூல வணிகர் (கூலம் – நவதானியம்)
- பொன் வணிகர்
- அறுவை வணிகர் (துணி)
- மணி வணிகர்
- இவர்களை விட சேனை வணிகர் என்ற உத்தியோகப் பிரிவினரும் உண்டு.
- தொல்காப்பியத்தில் வணிகருக்குரிய ஐந்து தொழில்கள் கூறப்பட்டிருக்கின்றன.
அவையாவன:
- தமக்குரிய நூல்களை ஓதுதல்
- தமக்குரிய யாகங்களைச் செய்தல்
- தாம் பெற்ற பொருட்களை நல்வழியில் ஈதல்
- உழவு செய்வித்தல்
- பசுக்களைக்காத்தல் என்பனவாம்.
- வணிகர்கள் அரசர்களால் பெரிதும் மதித்துப் பாராட்டப்பட்டனர்.
- இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேர மன்னனை வாழ்த்தி குமட்டூர்க் கண்ணனார் என்ற புலவர்.
- “பலவகை உணவுப் பண்டங்களை விற்கும் வணிகருடைய குடிகளைக் காப்பாற்றி வருகின்றாய்” என்று பொருள் பட
- கூலம் பகர்நகர் குடிபுறந் தரா அ என்று பாடியிருக்கிறார்.
சங்க காலத்து வணிகர்கள் சிலர்
- சீத்தலைச் சாத்தனார் (கூல வாணிகர்)
- இளவேட்டனார் (அறுவை வாணிகர்)
- ஆயத்தனார் (ஓலைக்கடை வாணிகர்)
- இளம் பொன் வாணிகனார்
தரைவழி வணிகமும் உள்நாட்டு வணிகமும்
- இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தமிழ் நாட்டிற்கு பொருள்கள் வந்தன.
- வடமலையில் பிறந்த பொருட்களும் குடமலையில் பிறந்த சந்தனும் அகிலும் வந்தன.
- கங்கைக்கரைப் பொருள்கள் வந்தன. தென்கடல் முத்தும், குணக்கடல் பவளம் வந்தன.
- உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் வண்டிகளில் வந்தன.
- தமிழகத்தில் பல வணிகக் கூட்டங்கள் “வணிகச் சாத்து” என்ற பெயரில் இருந்தன.
- அயல்நாட்டு, உள்நாட்டு வணிகத்திற்குப் பட்டினப்பாலை என்ற நூல் சிறந்த சான்றாக உள்ளது.
- நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
“காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலை பிறந்த மணியும் பொன்னும்
குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகு”.
என்கிறது பட்டினப்பாலை.
- வணிகவரி, பண்டமாற்று, காசுமாற்று, வணிக அளவுகள், அடையாளக் கொடிகள், சின்னங்கள் போன்றனவும் வணிக மேம்பாட்டினை எடுத்தியம்பும்.
நேர்மையான வணிகம்
- வணிகர்கள் அதிக பயன் கருதாது வணிகம் செய்தனர்.
- தங்கள் பொருளையும், பிறர் பொருளையும் சமமாகப் பார்த்தனர்.
- வணிகத்தில் தராசு என்ற துலாக் கோல் முதன்மை பெற்று விளங்கியது.
“தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூ உம் மிகை கொளாது
கொடுப்பதூஉம் குறை கெடாது
பல பண்டம் பகர்ந்து வீசும் இருக்கை”
என்ற பாடல் வரிகள் அக்காலத்தில் இருந்த வணிக நேர்மையை எடுத்து கூறுகின்றது.
தொல்லியல் ஆய்வுகள்
- தொல் பழங்காலத்தைப் பற்றி ஆய்வு செய்வது தொல்லியல் அல்லது தொல்பொருளியல் ஆகும்.
- தொல்லியல் என்பது கல்வெட்டுகள், கட்டடங்கள், காசுகள், செப்பேடுகள், பயன்படுத்திய பொருள்கள், இலக்கியங்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
- தொன்மையான காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறை, தொழில்கள், வணிகம், வேளாண்மை, அரசியல், நுண் கலைகள் போன்றவற்றை ஆராய்வதே தொல்லியலின் நோக்கமாகும்.
- மனிதன் நாடோடியாக வாழ்ந்த காலத்திலிருந்து வரலாற்றுக்கு முந்தைய காலம் வரை உள்ள காலம் தொன்மைக் காலம் எனப்படும்.
- தொல் பழங்காலத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் நான்கு வகைகளாக பிரிக்கின்றனர். பழைய கற்காலம், நுண்கற்காலம், புதிய கற்காலம், பெருங்கற்காலம் ஆகியவையாகும்.
- மதுரையில் கிடைத்த காசுகளில் தலை சிறந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சங்ககாலக் காசு பெருவழுதி என்று பெயர் பொறிக்கப்பட்ட காசாகும்.
- திருப்பரங்குன்றம், பிள்ளையார்பட்டி, சித்தன்ன வாசல், மாங்குளம், மகேந்திரவாடி, வல்லம், குடுமியான் மலை போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகள் தொல்லியல் ஆய்வுக்கு மிகவும் பயன் படுகின்றன.
- அரிக்க மேடு, ஆதிச்ச நல்லூர் போன்ற இடங்களில் நடந்த அகழ்வாய்வுகள் பெருந்துணை புரிந்தன.
- பூம்புகார் அருகே உள்ள கீழார் வெளி என்ற ஊரில் 1963 – ல் மேற்கொள்ளப்பட்ட கடலின் ஆய்வின் மூலம்
- கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டிட இடிபாடுகள், படகுத்துறை, அரைவட்ட வடிவ நீர்த்தேக்கம், புத்த விஹாரை, புத்தர் பாதம் போன்றன கிடைத்தன.
- இதனால் தமிழ் இலக்கியங்கள் கூறும் காவிரிபூம்பட்டினம் என்றொரு நகரம் இருந்தது சான்றுகளுடன் மெய்பிக்கப்பட்டது.
- வரலாற்றுடன் தொடர்புடைய இலக்கியங்கள் துணைபுரிகின்றன. புறநானூறு, சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, மூவர் உலா, பெரிய புராணம் போன்றனவும் உதவுகின்றன.
- பழமையான இலக்கியங்கள், வெளிநாட்டாரின் பழைய குறிப்புகள், செவிவழிச் செய்திகள், மக்களின் வலுவான நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் அகழாய்வு செய்ய வேண்டிய இடத்தைத் தேர்வு செய்கின்றனர்.
- அகழாய்வின் போது மண்ணை எந்திரங்களால் தோண்டாமல் மிக நுட்பமாக பொறுமையுடன் சிறுகச் சிறுகத் தோண்டுவர்.
- அகழ் ஆய்வில் வௌ;வேறு மணல் அடுக்குகளில் பல்வேறு காலக்கட்டங்களில் மக்கள் பயன்படுத்திய பொருள்கள் கிடைப்பதுண்டு.
- இப்பொருள்களின் அடிப்படையில் ஒரு நாகரிகத்தின் கூறுகளை அறிந்து கொள்ள முடியும்.
- ஓரிடத்தில் எவ் இனத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்தார்கள். எப்போதிலிருந்து மக்கள் வாழத் தொடங்கினர். எத்தகைய பண்பாட்டைக் கொண்டிருந்தனர் போன்ற வினாக்களுக்கு அகழாய்வு விடை தருகிறது.
- திட்டமிட்டுச் செய்யப்படும் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருள்கள் மட்டுமின்றி மக்கள் கிணறு வெட்ட, வீடுகட்ட, ஏரிகளைத் தூர்வார போன்றன செய்யும்போது தற்செயலாகக் கிடைக்கும் தடயங்கள், எச்சங்கள் உதவியுடனும் தொன்மைக்கால நிகழ்வுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிகின்றனர்.
- இறந்தவர்களை அவர்கள் பயன்படுத்திய பொருள்களுடன் ஒருதாழியில் இட்டுப் புதைக்கும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தது. இவ்வகைத் தாழிகளை “முதுமக்கள் தாழி” என்பர்.
- தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 1876, 2003ல் நடத்தப்பட்ட அகழ் ஆய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
- அவை கி.மு.300 முதல் கி.பி.300 வரையிலான காலக்கட்டத்தைச் சார்ந்தவை.
- அம் முதுமக்கள் தாழியுள் இறந்தோரின் எலும்புகள் தங்க நெற்றிப்பட்டைகள், செம்பாலான ஆண், பெண் தெய்வ உருவங்கள், இரும்பாலான கத்திகள், விளக்குகள் போன்ற பொருள்கள் இருந்தன.
- தருமபுரி, கரூர், மதுரை மாவட்டங்களில் நடந்த அகழாய்வின் கி.மு.3ம் நூற்றாண்டு முதல் பல்வேறு காலக் கட்டங்களைச் சார்ந்த காசுகள் கிடைத்தன.
- இக்காசுகள் தங்கம், வெள்ளி, செம்பு, இரும்பு ஆகிய உலோகங்களால் செய்யப்பட்டவை.
- இவற்றின் ஒரு பக்கத்திலோ அல்லது இருபக்கத்திலோ முத்திரைகள் பொறிக்கப்பட்டுள்ளன.
- சூரியனின் மலைமுகடு, ஆறு, காளைமாடு, ஸ்வஸ்திகம், கும்பம் போன்ற சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
- கும்பம் என்பது சிறு கலசம் போன்ற பாத்திரம் அதன் மேல் மாவிலை, அதன் மேல் தேங்காய், அதன் மேல் பூ வைக்கப்பட்டிருந்தது.
- இக்கும்பமே தமிழர்களின் மிகப் பெருமைக்குரிய மங்கலப் பொருள் ஆகும்.
- 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவண்ணாமலைக் கல்வெட்டு ஒன்று சங்க கால மன்னன் நன்னனையும் அவன் மீது பெருங்குன்றூர் பெருங்கார் கௌசினார் பாடிய மலைபடுகடாம் நூலைப் பற்றியும் குறிப்பிடுகிறது.
- இந்தியத் தொல்லியல் துறையினர் 1963 ஆம் ஆண்டு பூம்புகார் அருகில் உள்ள கிழார் வெளி என்னும் இடத்தில் மேற்கொண்ட கடல் அகழாய்வின் போது கி.மு.3ம் நூற்றாண்டைச் சார்ந்த கட்டட இடிபாடுகள் கண்டறியப்பட்டன.
- கிழார் வெளியில் கண்டறியப்பட்ட வெண்கலத்தால் ஆன புத்தர் பாதம், அரைவட்ட வடிவிலான நீர்த் தேக்கம் போன்றவை காவிரிபூம்பட்டினம் என்றொரு நகரம் இருந்ததை மெய்ப்பிக்கின்றன.
- சிந்து சமவெளியில் கிடைத்த மொகஞ்சதாரோ முத்திரை ஒன்று தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதலைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழரின் கடற்பயணங்கள்:
- 1.“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி வளிதொழில் ஆண்ட உரவோன் மருக களியியல் யானைக் கரிகால் வளவ” என்கிறார் வெண்ணிறப்பந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார் கூறியுள்ளார்.
- தமிழரின் நீர்வழி அயல்நாட்டுத் தொடர்பு மிகவும் பழமையானது.
- “திரைகடல் ஓடியும் திரவியம் தேடு” என்கிறார் ஒளவையார்.
- “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்கிறார் கணியன் பூங்குன்றன்
- இவ்விரு தொடர்கள் தமிழரின் பன்னாட்டுத் தொடர்புக்குச் சான்றுகளாகும்.
- தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ள “முந்நீர் வழக்கம்” என்ற தொடர் தமிழரின் கடற்பயணத்தைக் கூறுகிறது.
- அகவாழ்க்கை முறையுள் ஒன்றான “பொருள் வயிற் பிரிவு” என்பதில் காலில் (வண்டியில்) பிரிதல், கலத்தில் (கப்பலில்) பிரிதல் என்ற இருவகை உண்டு.
- தமிழர்கள் கிரேக்கம், ரோம், எகிப்து, பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற மேலைநாடுகளுடன் கடற்பயணத்தால் தொடர்பு கொண்டிருந்தனர்.
- சீனம், ஜாவா, இலங்கை, மலேசியா, கலிபோர்னியா, பிலிப்பைன் தீவுகள் போன்ற கீழை நாட்டுடனும் கடற்பயணத்தால் தொடர்பு கொண்டிருந்தனர்.
- சங்க காலத்திற்கு முன்பு தமிழர்கள் மேலை நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.
- மேலைநாட்டுத் தொடர்பு குறைந்த போது, கீழை நாட்டுத் தொடர்பை அதிகமாக்கிக் கொண்டனர்.
- வணிகத்தின் காரணமாகவே தமிழர்கள் கடற்பயணங்களை மேற்கொண்டார்கள்
- கடற்பயணமாகத் தமிழகம் வந்த அயல்நாட்டவர்களையும் வரவேற்றனர். அரிக்கமேடு முதலிய இடங்களில் அயல் நாட்டார் குடியிருப்புகள் இருந்தமை இதற்குச் சான்றாகின்றன.
- கடலைக் குறிக்கத் தமிழில் – ஆழி, ஆர்கலி, முந்நீர், வாரணம், பௌவம், பரவை, புணரி ஆகிய சொற்கள் உள்ளன.
- இவை தமிழரின் கடல் குறித்த அறிவினை உணர்த்தும்.
- யவணர்களின் கலங்கள் பொன்னைச் சுமந்து வந்து அதற்கு ஈடாக மிளகை ஏற்றி சென்றன.
- “விளைந்து முதிர்ந்த விழுமுத்து” என்ற கொற்கை முத்தைச் சிறப்பிக்கிறது மதுரைக்காஞ்சி. சங்க காலத்தில் நடந்த முத்துக் குளித்தல் 13 ம் நூற்றாண்டிலும் சிறப்பாக நடந்ததை மார்கோ போலோ (வெனிஸ் நகரப் பயணி) குறிப்புகள் மூலம் அறியலாம்.
கப்பல்கள்
- மரக்கலத்திற்குத்; தமிழில் கப்பல், கலம், கட்டுமரம், நாவாய், படகு, பரிசில், புணை, தெப்பம், திமில், அம்பி, வங்கம், கோணி, மிதவை, பஃறி, ஓடம் ஆகிய சொற்கள் உள்ளன. இவை தமிழரின் கப்பல் கட்டும் அறிவை உணர்த்துகின்றன.
- உப்பங்கழிகளில் செல்வதற்கு உரிய சிறிய படகுகளும், ஆழ்கடலில் செல்வதற்குரிய பெரிய நாவாய்களும் அன்றே இருந்தன.
- கடலில் செல்லும் பெரிய கப்பல் நாவாய் எனப்பட்டது.
- பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டு இயங்கின. எனவே இவை பாய்மரக்கப்பல்கள் என்றும் அழைக்கப்பட்டன.
- கரிகாலனின் முன்னோர் காற்றின் போக்கினை அறிந்து கலம் செலுத்தினர் என்று புறுநானூறு கூறுகிறது.
- புகார் நகரத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட நாவாய்கள் அலைகள் மோதுவதால் தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவது போல் அசைந்தன என்றும் அவற்றின் உச்சியில் கொடிகள் ஆடின என்றும் பட்டினப்பாலை கூறுகிறது.
- அக்காலத்தில் கப்பல் செய்யும் தொழிலாளர்கள் தமிழகத்தில் இருந்தனர். அவர்களுக்குக் “கலம் செய் இம்மியர்” என்று பெயர்.
- கலம் செய் இம்மியர்கள் பெரிய கோட்டையைப் போலக் கப்பல் கட்டினர்.
- மருத நிலத்தில் நான்கு பக்கமும் அகண்ட வயல் வெளிகள் உள்ளன. நடுவே பெரிய கோட்டை நிற்கிறது. அதன் உச்சியில் கொடி அசைகிறது. இக்கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று புறநானூறு கூறுகிறது.
துறைமுகங்கள்
- ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் ஏற்ற துறைமுகங்கள் பல தமிழ்நாட்டில் இருந்தன.
- மூவேந்தர்களும் தங்கள் துறைமுகப்பட்டினங்களைச் சிறப்பாக உருவாக்கினார்.
- காவிரிப்பூம்பட்டினம், முசிறி, கொற்கை ஆகிய பண்டைக் காலத்தில் சிறப்புற்றிருந்த துறைமுகங்களாகும்.
- காவிரிப்பூம்பட்டினம் துறைமுகமாகவும், சோழநாட்டின் பண்டைய தலைநகரமாகவும் விளங்கியது.
- பட்டினப்பாக்கம் மருவூர்பாக்கம் என்ற இருபகுதிகளைக் கொண்டிருந்தது.
காவிரிப்பூம்பட்டினம் என்ற புகார் நகரம்
- பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டிய பகுதியாகும். இங்கு பெரும்பாலும் வணிகர்களே வாழ்ந்தனர்.
- காவிரிப்பூம்பட்டினத்தில் சுங்கச்சாவடியும் கலங்கரை விளக்கமும் இருந்ததாகப் பட்டினப்பாலை என்ற நூல் கூறுகிறது.
- இந்நகரில் தெய்வத்திற்கு எடுத்த கொடிகளும், விற்கும் பொருட்களை அறிவிப்பதற்குக் கட்டிய கொடிகளும், பட்டிமண்டபத்தில் அறிஞர்கள் வாதம் செய்ய வைத்த கொடிகளும், கப்பலின் கூம்பில் உள்ள கொடிகளும் கலந்து காணப்பட்டன.
- சேர மன்னர்களுக்கு உரிய துறைமுகம் முசிறி ஆகும்.
- கள்ளி என்ற ஆற்றங்கரையில் அது அமைந்திருந்தது.
- கொற்கைத் துறைமுகம் பாண்டிய மன்னர்களுக்கு உரியது.
- பாண்டிய வம்சத்தில் மூத்தவன் மதுரையில் இருந்து நாட்டை ஆள்வான். இளையவன் கொற்கையிலிருந்து முத்து வணிகத்தைக் கவனிப்பான்.
- கடற்பயணம் பற்றிய கல்வி அறிவு கடல்சார் பல்கலைக்கழகத்தின் வாயிலாக கற்பிக்கப்படுகிறது.
- “மேலைக் கடல் முழுவதும் கப்பல் விடுவோம்” என்ற பாரதியின் கனவு நினைவாகியுள்ளது.
PDF Download
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download
TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும
Telegram Channel கிளிக் செய்யவும்