ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்

0

ஆசிய நாடுகளில் இந்தியப் பண்பாடு பரவுதல்

இந்திய நாகரிகமும், பண்பாடும் ஆசியாவின் பிற பகுதிகளுக்குப் பரவிய வரலாறு சிறப்புமிக்கதாகும். பழங்காலத்தில் இந்தியா பிற நாடுகளோடு வாணிகத் தொடர்புகளை மேற்கொண்டிருந்தது. இதனால், இந்திய மொழிகள், சமயங்கள், கலை, கட்டிடக் கலை,  தத்துவங்கள்,  நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் அந்நாடுகளில் பரவின. இது தவிர்க்கமுடியாத நிகழ்வாகும். தென்கிக்கு ஆசியாவின் ஒரு சில பகுதிகளில் பண்டைய இந்திய அரசியல் ஆர்வலர்கள் இந்து அரசுகளையும் கூட அமைத்தனர். இருப்பினும்,  தற்காலத்தைப் போhல காலனி ஆதிக்கமோ, ஏகாதிபத்தியப் போக்கோ இதில் காணப்படவில்லை. மாறாக, புதிய பகுதிகள் தாய்நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரமாகவே செயல்பட்டன. ஆனால், அவற்றில் பண்பாட்டுக் கூறுகளின் தாக்கம் மட்டும் காணப்பட்டது.

மத்திய ஆசியா:

  • கிறித்துவ சகாப்தனின் தொடக்க நூற்றாண்டுகளில் மத்திய ஆசியப் பகுதி இந்தியப் பண்பாட்டின் மையமாகத் திகழ்ந்தது. ஆப்கானிஸ் தானத்தின் கிழக்குப் பகுதியில் ஏராளமான பண்பாட்டு சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • கோடான், காஷ்கர் போன்ற இடங்கள் இந்திய பண்பாட்டின் மையங்களாகும். அங்கு, பல வடமொழி நூல்களும், புத்தசமய மடாலயங்களும் கண்டெடுக்கப்பட்டன.
  • அப்பகுதியில் எட்டாம் நூற்றாண்டுவரை இந்தியப் பண்பாட்டின் தாக்கம் தொடர்ந்து காணப்பட்டது. மத்திய ஆசியா வழியாக சீனா, திபெத் போன்ற நாடுகளுக்கும் இந்தியப் பண்பாடு பரவியது.

இந்தியாவும் சீனாவும்:

  • மத்திய ஆசியா வழியாக நிலவழித்தடமும், பர்மா வழியாக கடல் வழித்தடமும் இந்தியப் பண்பாடு சீனாவுக்குச் செல்ல பேருதவியாக இருந்தன.
  • கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்த சமயம் சீனாவில் பரவியது. பாஹியான், யுவான் சுவாங் உள்ளிட்ட பல்வேறு சீனப் பயணிகள் இந்தியாவிற்கு வந்தனர்.
  • மறுபுறம், குணபத்ரர்,  வஜ்ரபோதி,  தர்மதேவர்,  தர்மகுப்தர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான புத்த சமயத் துறவிகள் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு சென்றனர்.
  • சீனப் பேரரசர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய அறிஞர்கள் வடமொழி நூல்களை மொழி பெயர்த்தனர்.
  • மங்கோலியர்கள் சீனாவில் தங்களது பேரரசை ஏற்படுத்திய பதின்மூன்றாம் நூற்றாண்டில்கூட சீனாவுடனான இந்த தொடர்பு நீடித்தது. சீனக் கலையிலும் இந்தியக் கலையின் தாக்கத்தைக் காணலாம்.

இந்தியாவும் திபெத்தும்:

  • ஏழாம் நூற்றாண்டிலிருந்து திபெத்துடன் இந்திய பண்பாட்டு உறவு கொண்டது. காம்போ என்ற புத்தசமய அரசர் லாசா நகரை நிறுவி அங்கு புத்த சமயத்தை அறிமுகப்படுத்தினார்.
  • இந்திய அறிஞர்களின் துணையோடு திபெத்திய எழுத்துக்கள் வடிவமைக்கப்பட்டன. பின்னர், திபெத்தில் லாமாக் கோட்பாடு நிறுவப்படுவதற்கும் இந்திய அறிஞர்கள் உதவினர்.
  • பதினோராம் நூற்றாண்டில் வங்காள ஆட்சியாளர்களான பாலர்கள் திபெத்துடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தனர். வங்காளம் முஸ்லீம் படையெடுப்புக்கு ஆளானபோது, பல புத்த சமயத் துறவிகள் திபெத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இந்தியாவும் இலங்கையும்:

  • வேறுபட்ட அரசியல் வரலாற்றை இலங்கை கொண்டிருந்தாலும் இந்தியப் பண்பாட்டின் தாக்கம் அங்கு வெளிப்படுவதைக் காணலாம்.
  • புத்த சமய தூதுக் குழுவினர் தங்களது சமயக் கருத்துக்களை மட்டும் அங்கு பரப்பவில்லை, மாறாக பண்பாட்டுக் கூறுகளை எடுத்துச் சென்றனர்.
  • கல்லிலே சிற்பங்களை வடிக்கும் முறை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றது.
  • கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் புத்தகோஷர் இலங்கைக்கு சென்று ஹீனயான புத்த சமயப் பிரிவை அங்கு நிலை நிறுத்தினார்.
  • அங்குள்ள சிகிரியா ஓவியங்களில் அஜந்தா ஓவியங்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.

தென்கிழக்காசியாவில் இந்தியப் பண்பாடு:

  • இந்தோ – சீனா, மலேயா உள்ளடக்கிய தென்கிழக்காசிய பகுதியில் இந்தியப் பண்பாடு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • வங்காள விரிகுடாவிற்கு அப்பால் இவை அமைந்துள்ளன.
  • நிலவளமும் கனிவளமும், நிறைந்த இப்பகுதி இந்தியர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் எண்ணற்ற துறைமுகங்கள் அமைந்திருந்தன. எனவே, இந்ததியர்கள் இந்நிலப்பகுதிகளுக்கு அடிக்கடி பயணங்களை மேற்கொண்டனர்.
  • தங்கபூமி என்ற பொருள்படும் சுவர்ணபூமிக்கு வணிகர்கள் பயணம் மேற்கொண்டதாக இந்திய பரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
  • சுவர்ணபூமி என்ற சொல் பொதுவாக கீழைநாடுகளைக் குறிக்கும் சொல்லாகும். குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் கிழக்காசியாவில் இந்தியர்கள் குடியேறத் தொடங்கினர்.
  • பல்லவர்கள் காலத்தில் அது மேலும் ஊக்கம் பெற்றது. இந்தியக் குடியேறிகள் அங்கு பெரும் அரசுகளையும் உருவாக்கினர்.
  • அவற்றில் ஒருசில அரசுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தின. பல பகுதிகளில், இந்தியப் பெயர்களையுடைய அரச குலங்கள் ஆட்சி புரிந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் இஸ்லாம் வருகை தந்த காலம் வரை இந்தியப் பண்பாடு இப்பகுதியில் கோலோச்சியது.

கம்போடியா (காம்போஜம்):

  • கி.பி.முதலாம் நூற்றாண்டில் கம்போடியாவில் இந்தியர்கள் குடியேறினர். கெமர்கள் என்றழைக்கப்பட்ட அம்மண்ணின் மைந்தர்கள்மீது பண்பாட்டு தாக்கத்தை ஏற்படுத்தினர்.
  • அவர்களது அரசகுலம் காம்போஜர்கள் என்றும், நாடு காம்போஜம் அல்லது தற்கால கம்போடியா என்றும் அழைக்கப்பட்டது.
  • தொடக்கத்தில் அங்கு வைணவமும் சைவமும் தழைத் தோங்கின. லாவோஸ், சியாம்,பர்மாவின் ஒரு பகுதி, மலேயா தீபகற்பம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காம்போஜப் பேரரசு ஒரு காலகட்டத்தில் திகழ்ந்தது. அங்கு ஆட்சிபுரிந்த அரசர்கள் பற்றி எண்ணற்ற வடமொழிக் கல்வெட்டுகள் விவரங்களைத் தருகின்றன.
  • வேதங்கள், ராமாயணம்,மகாபாரதம், பாணினியின் இலக்கணம், இந்து தத்துவ விளக்கவுரைகள் போன்ற இந்து இலக்கியப் படைப்புகளை கம்போடிய மக்கள் அறிந்திருந்தனர்.
  • பல்லவ அரசர்களைப்போல, கம்போடிய அரசர்களும் தங்களை ‘வர்மன்’ என்று அழைத்துக் கொண்டனர்.
  • யசோவர்மன், இரண்டாம் சூரிய வர்மன் ஆகிய இருவரும் புகழ்மிக்க அரசர்கள். தென்னிந்திய பாணியில் கோயில்கள் கட்டப்ட்டன.
  • எண்ணற்ற வடமொழி கல்வெட்டுகள் அவற்றில் காணப்படுகின்றன. அக்கோயில்களில் மிகவும் புகழ் பெற்றது தலைநகரான அங்கார் என்ற இடத்தில் இரண்டாம் சூரியவர்மன் எழுப்பிய விஷ்ணு ஆலயமாகும்.
  • இது ‘அங்கார் வாட்’ (வாட் என்றால் கோயில் என்று பொருள்) என்று பரவலாக அழைக்கப்படுகிறது. தளத்தின் மேற்கூரையில் அக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு தளத்திலும் எண்ணற்ற கற்சிற்பங்கள் காணப்படுகின்றன.
  • திராவிட கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ள கோயிலில் ராமாயாண, மகாபாரத காட்சிகள் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பதினைந்தாம் நூற்றாண்டில்தான் காம்போஜ அரசு வீழ்ச்சியடைந்தது.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

சம்பா:

  • சம்பா அல்லது தெற்கு அன்னாம் கம்போடியாவிற்கு கிழக்கே அமைந்துள்ளது.
  • கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் ஸ்ரீமாறன் என்பவரால் அங்கு முதலாவது இந்து அரசகுலம் நிறுவப்பட்டது. ஏராளமான வடமொழிக் கல்வெட்டுகள் சம்பாவின் வரலாற்றைக் கூறுகின்றன.
  • பன்னிரண்டு இந்திய அரசு குலங்கள் சம்பாவில் ஆட்சிபுரிந்தன. பதிமூன்றாம் நூற்றாண்டில் சம்பா, கம்போடியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.
  • இந்து அரசர்களின் ஆட்சிக் காலத்தில், சம்பாவில் இந்து சமயம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • சைவமும் வைணவமும் தழைத்தோங்கின. புத்த சமயமும் வளர்ச்சியடைந்தது. இந்து தத்துவம், இலக்கணம், நுண்கலைகள், ஜோதிடம் குறித்த பல்வேறு நூல்கள் எழுதப்பட்டன.

சியாம் அல்லது தாய்லாந்து:

  • சியாம் பகுதியில் பல்வேறு அரசுகளில் இந்தியப் பண்பாடு பின்பற்றப்பட்டது. இந்திய அறிஞர்களின் உதவியுடன் தாய் வரிவடிவம் உருவாக்கப்பட்டது.
  • தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையில் அந்நாட்டின் பழைய சட்டங்கள் எழுதப்பட்டிருந்தன. பாங்காக் நகரில் உள்ள கோயில்களில் ராமாயண, மகாபாரத கதைகளை பிரதிபலிக்கும் சிற்பங்பள் காணப்படுகின்றன.

சுமத்ரா மற்றும் ஜாவா:

  • இந்தியாவிற்கும் தூரக் கிழக்கு ஆசியாவிற்கும் ஒரு இணைப்புப் பாலமாக மலேயா தீபகற்பம் விளங்கியது. அங்கு கி.பி. ஐந்து முதல் பதினைந்தாம் நூற்றாண்டுவரை பல இந்து அரசுகள் ஆட்சி புரிந்தன.
  • சுமத்ரா தீவில் இருந்த மிகச் சிறப்பான இந்து அரசு ஸ்ரீவிஜயம் என்பதாகும். ஏழாம் நூற்றாண்டில் அது ஒரு வாணிக, கலாச்சார மையமாகத் திகழ்ந்தது. பின்னர், ஸ்ரீவிஜயம் ஒரு கடல் சார் வாணிப சக்தியாக உருவெடுத்து சைலேந்திரப் பேரரசாக புகழ் எய்தியது.
  • அருகிலிருந்த தீவுகளான ஜாவா, பாலி, போர்னியோ மற்றும் கம்போடியாமீது அது ஆதிக்கம் செலுத்தியது.
  • சைலேந்திர ஆட்சியாளர்கள் மகாயான புத்த சமயத்தவர்கள். தமிழ்நாட்டின் சோழர்களுடனும், வங்காளத்தின் பாலர்களுடனும் அவர்கள் நல்லுறவை மேற்கொண்டிருந்தனர்.
  • சைலேந்திர அரசன் மாற விஜயோத்துங்க வர்மன் நாகப்பட்டினத்தில் புத்த மடாலயம் அமைப்பதற்கு சோழ அரசன் ராஜராஜ சோழன் உதவிகiளை வழங்கினார். ஆனால், அவரது மகன் ராஜேந்திர சோழன் சைலேந்திர அரசை சிறிது காலம் கைப்பற்றி வைத்திருந்தான். பின்னர், அவர்கள் விடுதலை பெற்றனர். கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டுவரை சைலேந்திர பேரரசு நீடித்திருந்தது.
  • கி.பி. நான்காம் நூற்றாண்டிலேயே ஜாவா தீவில் ஒரு இந்து அரசு நிறுவப்பட்டது.
  • மத்தியா ஜாவா பகுதியில் எழுச்சி பெற்ற மடாரம் என்ற அரசு இந்து சமய, கலாச்சார மையமாகத் திகழ்ந்தது.
  • சைலேந்திரர்கள் பின்னர் அதனைக் கைப்பற்றினார். ஒன்பதாம் நூற்றாண்டுவரை ஜாவா சைலேந்திரப் பேரரசுடன் இணைந்திருந்தது. பின்னர் விடுதலையடைந்தது. சைலேந்திரர் ஆட்சியின்கீழ் ஜாவா கலைத்துறையில் புகழும் பொலிவும் பெற்று விளங்கியது.
  • கி.பி. 750 – 850 ஆண்டுகளுக்கிடையே சைலேந்திரர்களால் கட்டப்பட்ட போரோபுதூர் இந்தோ – ஜாவா கலையை வெளிப்படுத்தும் சின்னமாகத் திகழ்கிறது.
  • ஒரு குன்றின்மீது அது அமைந்துள்ளது. அதில் ஒன்பது தளங்கள் உள்ளன. தலைப்பின் உச்சியில் மணி வடிவத்திலான ஸ்தூபி உருவாக்கப்பட்டுள்ளது. அதிலுள்ள படிக்கட்டுகளில் 2000 சிறிய கற்சிற்பங்கள் உள்ளன.
  • புத்தரின் வாழ்க்கைச் சம்பவங்களை அவை சித்தரிக்கின்றன. கீழ்ப்பகுதி அலங்கார வேலைப்பாடுகளுடனும், மேற்பகுதி சிற்பங்களின்றியும் உள்ளன.
  • கல்லில் வடிக்கப்பட்ட காவியம் என்று போரோபுதூர் சிற்பங்கள் போற்றப்படுகின்றன. உலகின் மிகச்சிறந்த அற்புதமான புத்த ஸ்தூபி அதுவாகும்.
  • பன்னிரண்டாம் நூற்றாண்டில் கிழக்கு ஜாவா பகுதியில் காதிரி நகரைத் தலைநகராகக் கொண்டு ஜாவா அரசு எழுச்சி பெற்றது.
  • ஜாவா பண்பாட்டின் பொற்காலம் என்று கருதப்படும் பதின்மூன்று, பதினான்காம் நூற்றாண்டுகளில் ஜாவா பேரரசின் தலைநகராக மஜாபாகித் விளங்கியது.
  • இந்தியக் கலையும் இலக்கியமும் வேறெங்கிலும் காணமுடியாத அளவுக்கு அங்கு வளர்ச்சி பெற்றன. நூற்றுக்கணக்கான கோயில்களின் சிதைவுகளும் வடமொழி ஓலைச் சுவடிகளும் இன்றும் ஜாவாவில் காணப்படுகின்றன.
  • ராமாயணமும், மகாபாரதமும் இன்றும் மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் திகழ்கின்றன. பொம்மலாட்ட கலையின் மையக் கருத்தாக விளங்குகின்றன. மஜாபாகித்தின் வீழ்ச்சியோடு ஜாவாவில் கலைத்துறை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்தன.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Downloa

பாலி:

  • ஆறாம் நூற்றாண்டில் பாலி இந்து அரச குலங்களின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏழாம் நூற்றாண்டில் அங்கு புத்த சமயம் பரவியிருந்தது என இட்சிங் குறிப்பிட்டுள்ளார். அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகள் இந்தியர்கள் அங்கு சென்று குடியேறியதைக் குறிப்பிடுகின்றன.
  • பின்னர், பாலி ஜாவா அரசின் கட்டுப்பாட்டில் வந்தது. இன்றும்கூட பாலியின் மக்கள் இந்துக்களாகவே திகழ்கின்றனர். ஜாதிமுறையும் பின்பற்றப் பட்டுவருகிறது.

மியான்மர்:

  • தற்போது மியான்மர் என்றழைக்கப்படும் பர்மாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு அசோகர் காலத்திலிருந்தே தொடங்குகிறது.
  • புத்த சமயத்தைப் பரப்புவதற்காக அசோகர் பர்மாவிற்கு குழுக்கழள அனுப்பிவைத்தார். பர்மாவில் பல இந்து அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன.
  • பதிமூன்றாம் நூற்றாண்டு வரை பாலியும் வடமொழியும் பர்மாவின் மொழிகளாக இருந்தன. பர்மிய மக்கள் மகாயான, ஹீனயான புத்த சமயப் பிரிவுகளை பின்பற்றினர்.
  • மலேயத் தீபகற்பம், இந்தோசீனா ஆகிய பகுதிகளில் கிட்டதட்ட 1500 ஆண்டுகள் இந்து அரசர்கள் ஆட்சி புரிந்துள்ளனர். இந்திய சமயங்களும் பண்பாடும் அங்கு வாழ்ந்த மக்களிடையே பரவி நாகரிகத்தின் உச்சிக்கு அவர்களை இட்டுச் சென்றன.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!