TNPSC பொது தமிழ் – நாடக கலை – இசை கலை தொடர்பான செய்திகள்

0

TNPSC பொது தமிழ் – நாடக கலை – இசை கலை தொடர்பான செய்திகள்

இங்கு நாடக கலை – இசை கலை தொடர்பான செய்திகள் பற்றிய முக்கியமான பொது தமிழ் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.

உலகில் எம்மொழிக்கும் இல்லாத சிறப்புத் தமிழ்மொழிக்கு உண்டு ஏனென்றால் இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என முப்பெரும் பாகுபாடு கொண்டது நம் தமிழ்மொழி உலகமொழி எதிலும் இப்பகுப்பு காண முடியும்.

1. நாடகக்கலை

 • நாடகம் என்னும் சொல் நாடு -அகம் எனப் பிரியும் நாட்டை அகத்தே கொண்டது என்று பொருள் படும். நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளை நடித்துக்காட்டுவதே நாடகம்.
 • அகம் என்பதற்கு நாடு உன்னுள் நோக்கு உன்னை உணர் அகத்தை நாடு என்று அறிஞர்கள் பல்வேறு பொருள் கூறுகின்றனர்.
 • கதையை நிகழ்ச்சியை உயர்வை நடித்துக்காட்டுவதும் கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர்.
 • கூத்துக்கலை என்று நாடகத்திற்கு பெயரும் உண்டு.
 • ‘போலச் செய்தல்’ என்பதனை அடிப்படையாக கொண்டது.

2. நாடக வளர்ச்சி

 • வேட்டையாடிப் பிழைத்த போது பெரும் பேட்டையில் வெற்றி பெற்ற மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருப்பர். இந்தத் துள்ளலே நடனத்தின் அடிப்படையாகும்.
  நடனத்திலிருந்துதான் நாடகம் தோன்றிருக்க வேண்டும் என்பார் வெல்ஸ் என்ற மேலைநாட்டறிஞர்.
 • சமயம் தொடர்பான ஆடல் – பாடல்கள் வழி நாடகம் வளர்ந்துள்ளது. பின்பு கதை தழுவிய கூத்தாக மாறியது.
 • முதலில் மரப்பாவைக் கூத்து நடத்தப்பட்டது மரப்பாவையிலிருந்து கை கால்களை அசைக்கும் பொம்மலாட்டம் உருப்பெற்றது.
 • மரத்திற்குப் பதில் தோலால் செய்த பொம்மைகளை இயக்குவது எளிதாக இருந்தது. அதனால் மரப்பாவைக் கூத்து தோற்பாவைக் கூத்தானது.
 • தோலின் நிழலைத் திரையில் விழச்செய்யும் நிழற்பாவைக் கூத்தும் தோற்பாவைக் கூத்திலிருந்து வந்ததே ஆகும்.
 • மரம் தோல் என உயிரற்ற பொருள் வைத்து நடத்திய கூத்து பின் உயிருள்ள மனிதர்களையே வேடம் புனையச்செய்து நடிக்க வைத்தது. அதுவே நாட்டியமாக வளர்ச்சி கண்டது.

3. இலக்கண இலக்கியங்களில் நாடகக்குறிப்பு

தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் நாடக உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். எண்வகை மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். அவை

 • நகை அச்சம்
 • அழுகை பெருமிதம்
 • இளிவரல் வெகுளி
 • மருட்கை உவகை
 • மேலும் தொல்காப்பியம் நாடக வழக்கினையும் உலகியல் வழக்கினையும் குறிப்பிட்டுள்ளார்.
 • திருக்குறளில் இடம்பெறும் “கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே” என்னும் வரி வழியாக பழங்காலத்தில் நாடக அரங்கம் இருந்த செய்தியை அறியலாம்.
 • சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ‘நாடகமேத்தும் நாடகக் கணிகை’ என்று மாதவியைக் குறிப்பிடுகிறார்.
 • சிலப்பதிகாரத்திற்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் கூத்துவகைகளைப் பற்றியும் நாடக நூல்கள் பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பரதம் முறுவல் சயந்தம் செயிற்றியம் குணநூல் பஞ்சமரபு பரதசேனாபதியும் மதிவாணன் நாடகத் தமிழ் குணநூல் கூத்துநூல் போன்ற நாடகம் நாட்டியம் குறித்த நூல்களை அடியார்க்கு நல்லார் யாப்பருங்கல உரையாசிரியர் இறையனார் களவியலுரை ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். விசைக்கூத்து குறித்தும் அடியார்க்கு நல்லார் கூறுகின்றார். வேடந்தாங்கி நடிப்போர் பண்டு “பொருநர்” எனப்பட்டனர். விறல்பட ஆடும் பெண் கலைஞர்கள் “விறலியர்” எனப்பட்டனர். “நாடக மேடை அமைப்பு மூன்று வகையான திரைச்சீலை மேடையில் அமைக்கப்படும் விளக்கு ஆகியன குறித்துக் கூறும் நூல் சிலப்பதிகாரம்.

நாடக அரங்கு அமைப்பு அளவு கோல்

 • அரங்கம் 24 – விரல் அளவிருந்தது
 • ஏழு கோல் அகலமும்
 • எட்டு கோல் நீளமும்
 • ஒரு கோல் உயரமும்

உத்தரப் பலகைக்கும் அரங்கின் பலகைக்கும் இடையே நாற்கோல் இடைவெளி கொண்டதாகவும் இரண்டு வாயிலை உடையதாகவும் அரங்கு அமைந்திருந்தது.

மூவகை திரைச்சீலை

1. ஒருமுக எழினி
2. கரந்துவரல் எழினி
3. பொருமுக எழினிபரிபாடலில் “தெரினான் தமிழ் மும்மைத் தொன்னம் பொருப்பான்” என்கிறது. எனவே முத்தமிழ் வழக்கு மிகத் தொன்மையானது என அறிய முடிகிறது. கோயில் கல்வெட்டு போன்ற இடங்களில் நாடகம் தஞ்சை பெருவுடையார் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருவிழாவில் “ராஜ ராஜ விஜயம்” என்ற நாடகம் நடிக்கப்பட்டது. திருமுதுகுன்றனான விஜயராசேந்திர ஆச்சாரியின் இதற்காக நிவந்தம் பெற்றான்.
திருப்பாதிரிப்புலியூரில் உள்ள சிவன் கோயிலில் “பூம்புலியூர்” நாடகம் நடிக்கப்பட்டது.
திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஆத்தூர் சோமநாதர் கோயிலில் நாடகம் நடிக்கப்பட்டது. இதற்கான “அழகிய பாண்டியன்” என்னும் நாடக அரங்கம் இருந்தது. முதற் குலோத்துங்கன் பற்றிய “குலோத்துங்க சோழன் சரிதை” என்னும் நாடகம் இருந்ததையும் கல்வெட்டால் அறிகிறோம்.

நாடக ஆசிரியர்களும் – நூல்களும்

(கட்டியங்காரர்களின் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்த நாடகங்கள்)

1. அருணாசலக் கவிராயர் – இராம நாடகம்
2. கோபால கிருஷ்ண பாரதியார் – நந்தனார் சரிதம்
(சமுதாய சீர்திருத்த நாடகம்)
3. காசி விசுவநாதர் – டம்பாச்சாரி விலாசம் மனோன்மணியம்
4. பேராசிரியர் சுந்தரனார் – (கவிதை நாடகம்)
5. கமலாயப்பட்டர் – புலியூர் நாடகம் (தமிழில் ஆசிரியர்  பெயர் தெரிந்த முதல் நாடக நூல்)
6. திண்டிவனம் ராமசாமி ராஜா – பிரதாப சரித்திர  விலாச நாடகம் (முழுவதும்  வசனத்தில் வந்த முதல்  நாடகம்)
7. மகேந்திரவர்ம பல்லவன் – ‘மத்தவிலாச பிரகடனம்’  (நகைச்சுவை நாடக நூல்)
8. விபுலானந்த அடிகள் – மதங்க சூளாமணி (நாடக  இலக்கண நூல்)
தமிழ்நாட்டில் முதன் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம் – கதரின் வெற்றி
பின் தேசியக்கொடி தேசபக்தி போன்ற நாடகங்கள் வந்தன.

பரிதிமாற் கலைஞர் (1870 – 1903)

ஊர் : விளாச்சேரி (மதுரை மாவட்டம்)

இயற்பெயர் : சூரிய நாராயண சாஸ்திரி

பெற்றோர் : கோவிந்தசிவனார் இலட்சுமி அம்மாள்

கல்வி

• தந்தையிடம் வடமொழியும் மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழும் பயின்றார்.
• இளங்கலைப் பட்டம் – சென்னை கிறித்துவக் கல்லூரி
• இளங்கலைத் தேர்வில் தத்துவத்திலும் தமிழிலும் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சிப் பெற்றார். அக்கல்லூரியில் தத்துவத்துறை ஆசிரியர் பணி வழங்கப்பட்டது அதை மறுத்து தமிழ்த்துறை பணியை விரும்பிக் கேட்டார்.
• ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் பேராசிரியர் பணி வழங்க முன்வந்தது அதனை மறுத்து தம்;முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன் தன் மாணவர்களை ‘இயற்றமிழ் மாணவர்’ எனவும் பெயரிட்டு அழைத்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கம்

 • இச்சங்கம் நிறுவ முயன்றவர்களுள் இவரும் ஒருவர்.
 • பாசுகரசேதுபதி தலைமையில் பாண்டித்துரை மேற்பார்வையில் பரிதிமாற்கலைஞர் உ.வே.சாமிநாதர் இராகவனார் ஆகிய பேராசிரியர்கள் துணையுடன் மதுரைத் தமிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.
 • இச்சங்கத்தின் இதழான ‘செந்தமிழில்’ பரிதிமாற்கலைஞர் ‘உயர்தனிச் செம்மொழி’ என்னும் கட்டுரை வெளியிடப்பட்டது. உயர்தனிச் செம்மொழித் தகுதி தமிழுக்கே உண்டு என முதலில் முழங்கியவர்.

சிறப்புகள்

 • ‘திராவிட சாஸ்திரி’ பட்டம் சி.வை.தாமோதரனார் இவர்க்கு வழங்கினார்.
 • ‘சித்திரக்கவி’ எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அதனால் ‘சித்திரக்கவி’ என்ற நூலை எழுதினார்.

இதழ்ப்பணி

 • ஞானபோதினி – மு.சி.பூர்ணலிங்கத்தினால் தொடங்கி நடத்தப்பட்ட இதழை இவர் நடத்தினார்.
 • ஞானபோதினி விவேகசிந்தாமணி – என்ற இதழ்களில் தொடர்ந்து கட்டுரை எழுதினார்.

இவர் எழுதிய நூல்கள்

1. தனிப்பாசுரத்தொகை

 • இந்நூலில் பெற்றோர் இட்ட சூரிய நாராயண சாஸ்திரி என்ற வடமொழி பெயரை மாற்றி பரிதிமாற் கலைஞர் எனப் பெயர் சூட்டிக்கொண்டார்.
 • இந்நூலை ஜி.யூ.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

2. ரூபாவதி கலாவதி மானவிஜயம் இம்மூன்று நூல்களும் நாடக நூல்கள் மானவிஜயம் நாடகம் களவழி நாற்பது என்னும் இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது. ரூபாவதி கலாவதி என்னும் பெண் பால் வேடங்களைப் புனைந்து நடித்தார்.

3. தமிழ் வியாசங்கள்

ஞானபோதினியிலும் விவேகசிந்தாமணியிலும் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘தமிழ் வியாசங்கள்’ என்னும் பெயரில் வெளியிட்டார்.

4. குமரகுருபரரின் நீதிநெறி விளக்கம் உரை

நீதிநெறி விளக்கம் என்னும் நூலுக்கு 51 பாடல்களுக்கு உரையெழுதியுள்ளார்.

5. நாடகவியல்

நாடக இலக்கண நூல்

வடமொழி மேனாட்டு மரபுகளைத் தமிழ் நாடக மரபோடு இணைத்து நாடகவியல் நூலைப் படைத்தார்.

செய்யுள் வடிவில் இயற்றியுள்ளார்.

நாடகம் அதன் விளக்கம் வகைகள் எழுதப்பட வேண்டிய முறைகள் நடிப்புக்குரிய இலக்கணம் நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பகுதி கொண்டது

1. பொதுத்தன்மை
2. அமைப்பு
3. வகை
4. நடிப்பு
6. சூர்ப்பனகை – புராண நாடகம்

 • சேக்ஸ்பியர் எப்சன் மோலியர் ஆகியோரைப் போன்று சிறந்த நாடக ஆசிரியர்கள் தமிழில் தோன்ற வேண்டும் என்று பெரிதும் விழைந்தார்.
 • “மிருச்சகடிகா” என்ற வடமொழி நூலையும் “ரோமியோ ஜூலியட்” சிம்பலைன் என்று ஆங்கில நூலையும் நாடகமாக மாற்றினார்.
 • மணிமேகலை பிரபுலிங்கலீலை ஆகியவற்றை நாடகமாக்கினார்.

சங்கரதாசு சுவாமிகள் (1867 – 1920)

‘நாடகத்தமிழ் உலகின் இமயமலை’ எனப் பாராட்டப்படுவர்.

‘தமிழ்நாடகத் தலைமையாசிரியர்’ என்று போற்றப்படுபவர் நாடகத்தை சமுதாய சீர்;திருத்தும் கருவியாக கையிலெடுத்தார்.

சிறுவர்களைக் கொண்டு நாடகக் குழுக்களை உருவாக்கினார்.

1910-ல் ‘சமரச சன்மார்க்க’ நாடக சபையை ஏற்படுத்தினார்.

இவர் இயற்றிய நூல்கள்

 • வள்ளி திருமணம் கோவலன் சரித்திரம் நல்லதங்காள் சதி சுலோசனா இலவகுசா பக்தப் பிரகலாதா சதி அனுசுயா வீர அபிமன்யூ பவளக்கொடி முதலிய நாற்பது நாடகங்களை இயற்றியுள்ளார்.
 • ‘மாபாவியோர் கூடி வாழும் நகர் என்று பாடியதால் மதுரையில் பிரச்சனை எழுந்தபோது ‘மா’ என்பது அலைமகளையும் ‘பா’ என்பது கலைமகளையும் வி என்பது மலைமகளையும் குறிப்பிடுகின்றது என்று சுவைபடக் கூறினார்’.

பம்மல் சம்பந்தனார் (1875 – 1964)

 • 1891 ம் ஆண்டு 18 வயதில் சுகுணவிலாச சபையைத் தொடங்கியவர் ‘தமிழ்நாடகத் தந்தை’ என்று அழைக்கப்பட்டார் கட்டுக்குலையாத நாடகக் குழுவை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். அதனால் நாடகர்களால் கலைஞர் என மதிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் பணியாற்றியவர் இவர் 94 நாடகங்களை படைத்தளித்தார்.
 • இவரின் ‘மனோகரன்’ நாடகம் 70 ஆண்டுகள் நடைபெற்றது. இவர் நாடக மேடை நினைவுகள் மற்றும் நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்ற தலைப்பிலும் எழுதியுள்ளார்.
 • ‘நாடகத் தமிழ்’ என்ற நூலை இயற்றியுள்ளார்.
 • மனாகரா யயாதி சிறுதொண்டன் கர்ணன் சபாபதி பொன்விலங்கு போன்றவற்றை இயற்றியுள்ளார்.
 • சேக்ஸ்பியரின் நாடகங்களைத் தழுவி வாணிபுரத்து வணிகன் விரும்பிய விதமே அமலாதித்தியன் ஆகியவற்றை படைத்தார்.
 • நாடகக் காட்சிக்கேற்பத் திரைசீலைகளையும் பொருத்தமான ஓவியங்களையும் தொங்கவிடுமாறு வற்புறுத்தினார். இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும் நாடக நையாண்டியினையும் அறிமுகப்படுத்தினார்.

எம் கந்தசாமி முதலியார்

நாடக மறுமலர்ச்சியின் தந்தை புதிய நடிப்புக்கலை ஆசிரியர் என்ற சிறப்புகளைப் பெற்றவர் ராஜம்மாள் ராஜேந்திரன் சந்திரகாந்தா ஆகிய புதினங்களை நாடகமாக்கினார்.

கண்ணையா

 • காட்சிகளை அமைப்பதில் வெற்றி கண்டவர்
 • இவரின் தசாவதாரம் ஆண்டாள் பகவத் கீதை ஆகியவை சிறப்பானவை அற்புதமான காட்சிகளை மேடையிலே அமைத்து வெற்றி கண்டார் கண்ணையா.

ஓளவை சண்முகனார்

 • மதுரையில் 1942ம் ஆண்டில் புலமைக் கடலான தமிழ் மூதாட்டி ஒளவையார் நாடகம் அரங்கேறியது. இதில் ஒளவையாராக நடித்தவர் தி.க. சண்முகனார்.
 • இவர் ஒளவை சண்முகனார் என்றே அழைக்கப்பட்டார்
 • இவர்களுக்குப் பின் நாடகக்கலையை எதார்த்தம் பொன்னுசாமி என்.எஸ்.  நவாப்பு ராஜாமாணிக்கம் எஸ்.வி. சங்கரநாமம் ஆர்.மனோகர் போன்றோர் வளர்த்தனர்.
 • பின் அண்ணா கலைஞர் எம்.ஆர்.ராதா கே.பாலசந்தர் சோ எஸ்.வி.சேகர் போன்றோர் வளர்த்தனர். வளர்த்துக் கொண்டு வருகின்றனர்.

இசைக் கலை

 • இசை என்பதற்கு இசைத்தல் என்பது பொருள்.
 • இசைத்தல் என்பதற்கு பொருந்துதல் ஒன்றாதல் என்று பொருள்
 • “இயைபே புணர்ச்சி” என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா.
 • இசை என்னும் சொல் “இயை” என்னும் வேர்ச்சொல்லில் இருந்து தோன்றியது.
 • இசையானது “கந்தருவ வேதம்” என்று அழைக்கப்படும் சிறப்பினை உடையது.
 • இடைக்காலத்தில் சமயங்களின் அரவணைப்பில் வளர்ந்தது “இசை”
 • நாயக்கர்கள் காலத்தில் “தெலுங்கிசை” செல்வாக்குற்றது. தமிழிசை வீழ்ந்தது.
 • தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களில் இசை
 • பண்டைத் தமிழர்களின் வாழ்வின் இசை சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது.
 • தொல்காப்பியமும் சங்க இலக்கியமும் சிலப்பதிகார இசை மரபுகளை வெளிப்படுத்துகின்றன.
 • ஐந்திணைக்குரிய கருப்பொருள்களில் யாழ் பறை ஆகிய இசைக் கருவிகளையும் தொல்காப்பியர் கூறுகிறார்.
 • ‘நரம்பின் மறை’ என்று தொல்காப்பியர் உரைப்பதன் மூலம் இசை இலக்கண நூல் உண்டென உணரமுடிகிறது. “இசையோடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர்” (தொல்)
 • மன்னர்களின் வாயிலில் நின்று துயிலெடை பாடும் “பாணர்கள்” இருந்தனர். இதனை இடைக்காலத்தில் “திருப்பள்ளியெழுச்சி” என்றனர்.

இலக்கியங்களில் இசை

 • பரிபாடல் தூக்கு வண்ணம் குறித்துக் கூறுகிறது.
 • கலித்தொகையின் ‘தாழிசை’ என்பது இசைப்பாட்டே என்கிறது.
 • குறப்பெண் பாடிய குறிஞ்சிப் பண் கேட்டு யானையொன்று தினையுண்ண மறந்து நின்றது என்று அகநானூற்குப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.
 • ஆறலை கள்வர்கள் வழி சொல்வார் பாடிய பாலைப் பண்ணைக் கேட்டு மாறுதல்
 • அடைந்து திருந்தியதை “ஆறலை கள்வர் படைவிட அருளின்
 • மாறுதலைபெயர்க்கும் மறுவின் பாலை” என்று பெரும் பாணாற்றுப் படை குறிப்பிடுகிறது.
 • பண்பட்ட வீரரைப் பேய்களிடமிருந்து காப்பதற்கு காஞ்சிப் பண்ணைப் பாடினர் என்றும் விளரிப் பண்ணைப் பாடி நரியைத் துரத்தினர் என்று புறநானூறு பேசுகிறது.
 • குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் நான்கும் அக்காலத்து நிலவியற்கையொட்டு வழங்கிய இசை வகைகளாகும்.
 • செவ்வழி என்பது முல்லைக்கும் நெய்தற்கும் உரிய மாலைப் பண்ணாகும். (மாலை நேரத்திற்குரிய பண்ணாகும்)
 • மருதப்பண் காலை நேரத்திற்கு பாடப்பட்டது
 • யாழோர் மருதப் பண்ணை பாடப் பொழுது விடிந்தது என மதுரைக் காஞ்சி பேசுகின்றது.
  விறலியர் கரிய கோட்டையுடைய கீறியாழிலே மருதப் பண்ணை பாடினார்.
 • மாலை நேரத்து செவ்வழிப் பண்ணை ஆகுறி முழவு என்றும் கருவிகளோடு இசைத்ததை மதுரைக் காஞ்சி மூலம் அறியலாம்.
 • பண்டின் ஓசைக்குக் காமரம் என்னும் பண் ஒப்பிடப்பட்டதை காமர் பண்டு காமரம் செய்யும் என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.
 • இசைக் கலைஞர்கள் பாணர் எனப்பட்டனர்.
 • பாணர்களுக்கு பரிசளித்துக் காத்த வள்ளல்கள் பாண்பசிப் பகைவர் எனப்பட்டனர்.
 • இசையைக் குறிக்கும் பண் என்ற சொல்லிலிருந்து பாணர் என்ற சொல் தோன்றி இருக்கலாம் என்பர் வள்ளல்களைச் சார்ந்து இருந்த பாணர்கள் பாணர் பெருமக்கள் என புகழப்பட்டனர். பாணர்கட்கு – பொற்றாமரையும் பாணிகட்கு – பொன்னரி மாலையையும் வள்ளல்கள் பரிசளித்தனர்.
 • சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை கானல் வரி ஆய்ச்சியர் குரவை வேட்டுவவரி குன்றக்குரவை பகுதிகள் இசைப்பற்றியன.
 • தமிழ்க் கலைக் களஞ்சியம் என சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது.
 • குழலைச் செய்யும் முறைப் பற்றி சிலம்பு அரங்கேற்றக் காதையின் ஆறாம் அடிக்கான உரையிற் காணலாம்.
 • பேரியாழ் – 21 நரம்புகள்
 • மகரயாழ் – 19 நரம்புகள்
 • சகோடயாழ் – 14 நரம்புகள்
 • செங்கோட்டுயாழ் – 7 நரம்புகள்

பக்தி இலக்கியம்

 • காரைக்கால் அம்மையார் – திருவண்ணத்தந்தாதி பதிகம் இசையுடன் பாடப்பட்டன.
 • மூவர் முதலிகள் – இசை நன்கு வளர்த்தனர்.
 • சம்பந்தர் – யாழ்முறி பதிகம் பாடினார்
 • நம்மாழ்வார் – ‘திருவாய்மொழி’ இந்நூல் இசையை மேலும் வளர்த்தது.

பறை முழக்கம்

1. தொண்டகப்பறை – குறிஞ்சி நிலத்துப் பறை
2. கினைப் பறை – பாணர்கள் பயன்படுத்திய பறை
3. நெய்தல் பறை – சாவில் அடிக்கப்பட்ட சாப்பறை
4. ஏறுகோட்பறை – முல்லை நிலத்தின் ஏறு
தழுவுதலின் போது ஒலித்த பறை

இசை நூல்கள்

 • முதற்சங்கத்தில் பெருநாரை பெருகுருகு (முதுநாரை முதுகுருகு) என்ற நூல்கள் இருந்தன.
 • பெருநாரை என்பது இசைப்பற்றிய நூல். நரம்பு – நார் – நாரை
 • பெருகுருகு என்பது துணைக்கருவிகள் பற்றிய இசைநூல்
 • அடியார்க்கு நல்லார் கூறும் பெருநாரை பெருங்குருகு பஞ்சபாரதீயம் என்னும் இசைநூல்களும் குறிப்பிடத்தக்கவை.
 • “பஞ்சபாரதீயம்” நாதராலும் “இசைநுணுக்கம்” சய்ந்தன் என்னும் பாண்டிய இளவரசராலும் இயற்றப்பட்டது என்பார் அடியார்க்கு நல்லார். அடியார்க்கு நல்லார் குறிப்பிடும் மற்றொரு இசை நூல் “இந்திர காவியம்”.
 • இடைச்சங்கத்தில் பேரிசை சிற்றிசை என்ற இசை நூல்கள் இருந்தன.
 • கடைச்சங்கத்தில் இசைமரபு இசை நுணுக்கம் ஐந்தொகை அல்லது பஞ்சமரபு என்னும் இசை நூல்கள் இருந்தன.
 • சேக்கிழார் – ‘பெரியபுராணம்’ – ஆனாயநாயனார் புராணத்தில் யாழ்த்திறம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.
 • அருணகிரிநாதர் – ‘திருப்புகழ்பாடல்கள்’ தாளக் கலைக்கு வேதமாகத் திகழ்கிறது.

இசைக் கருவிகள்

தோற்கருவி துளைக்கருவி நரம்புக்கருவி கஞ்சக்கருவி என இசைக்கருவிகளை நான்காகப் பகுத்துக் கூறுகிறது.

கஞ்சக்கருவி என்பது உலோகக் கருவிகளைக் குறிக்கும்.

பாடுவோரின் மிடற்று ஓசையையும் சேர்த்து ஐந்தையும் “பஞ்சமா சத்தம்” என்பர்.

துளைக்கருவிகள் – மரபு சூழலும் கோடும் தூம்பும்.

தோற்கருவிகள் – முழவு முரசு பதலை பறை துடி

கஞ்சக்கருவி – கைமணி தாளம் கஞ்சதாளம் கொண்டி

நரம்புக்கருவி – யாழ் வீணை கின்னரி

ஆண்களின் திரண்ட தோளுக்கு உவமையாகக் கூறப்படும் ‘முழவு’ ஆந்தையின் குரல் போல் ஒலிக்கும்.

‘ஆகுனி’ தேரையின் ஒலி போல் ஒலிக்கும்.

‘தட்டை’ ஆமை போன்ற உருவமுடையதென்றும் மதிபோல் வடிவமும் உடையது என்றும் கூறப்படும்.

தடாரி போர்க்களத்தில் சங்கோடு சேர்ந்து முழக்கப்படும்.

வயிர் (அன்றிலின் குரல் போல் ஒலிக்கும்) என்று சங்ககாலத்தில் பல்வேறு இசைக்கருவிகள் உண்டு.

இசையை ஏழிசை என்பர்.

சுரங்களின் பெயர்கள்

பழந்தமிழ் நூல்கள் சுரங்களின் பெயர்கள் சுரக்குறியீடு

 • குரல் சட்சம்
 • துத்தம் ரிபம்
 • கைக்கிளை காந்தாரம்
 • உழை மத்தியம்
 • இளி பஞ்சமம்
 • விளரி தைவதம்
 • தாரம் நிதம்

இவை ஏழு சுரம் எனப்படும்.

நாடக கலை – இசை கலை தொடர்பான செய்திகள் PDF Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here