
“ஐதராபாத்தில் தானம் அளிக்கப்பட்ட இதயம் 13 நிமிடத்தில் கொண்டு சேர்ப்பு…!! “மெட்ரோ ரயில் மூலம் நடந்த சாதனை…!! “
இறக்கும் தருவாயில் உள்ள ஒருவருக்கு இதய தானம் அளித்து மறுவாழ்வு அளிக்கப்படுவதால் தானத்தில் சிறந்தது இதய தானம் என கூறப்படுகிறது. மேலும், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் உடனடியாக மற்றொரு நபருக்கு தானமாக அளிக்கப்படுவதால் அவரது உயிர் காக்கப்படுகிறது. அந்த வகையில், ஐதராபாத்தில் மூளைச்சாவு அடைந்த ஒருவரின் இதயம் தானமாக அளிக்கப்பட்டு மெட்ரோ ரயில் மூலம் எடுத்து செல்லப்பட்டு மற்றொரு நபருக்கு பொருத்தப்பட்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, ஐதராபாத்தில் உள்ள காமினேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 45 வயது நபர் மூளைச்சாவு அடைந்தார். அதனால், அவரது உறவினர்கள் அவர் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புதல் அளித்தனர். மேலும், அவரிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இதயம் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. மேலும், காமினேனி மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனைக்கு இடையே 13 கி.மீ தூரம் என்பதால் விரைவாக கொண்டு செல்ல ஏதுவாக ஐதராபாத் நோகோல் மெட்ரோ ரயில் மூலம் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று மதியம் 01.30 மணிக்கு இதயம், நோகோல் மெட்ரோ ரயில் மூலம் 40 கி.மீ வேகத்தில் 13 நிமிடங்களில் கொண்டு சேர்க்கப்பட்டு அந்த நோயாளிக்கு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த இதயத்தை சரியான நேரத்தில் கொண்டு சேர்த்த மருத்துவர்கள் மற்றும் நோகோல் மெட்ரோ ரயில் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


























