அதிமுகவின் ஒற்றைத்தலைமை தீர்மானத்திற்கு தடை, OPS ஆதரவாளர்கள் கொண்டாட்டம் – தலைவர்கள் வரவேற்பு!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக கட்சியின் ஒற்றைத் தலைமை தீர்மானத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அதிமுக தலைவர்கள் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒற்றைத் தலைமை
அதிமுக கட்சியில் நீடித்து வரும் ஒற்றைத் தலைமை குறித்த விவகாரத்திற்கு முடிவு செய்யும் பொருட்டு இன்று (ஜூன் 23) பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்தக்கூடாது என்பதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் உறுதியாக இருக்க, மறுபக்கத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற முடிவில் இருந்ததால் கட்சியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் சுமார் 2,500 போலீசாரின் பாதுகாப்பின் கீழ் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற உள்ளது.
TN Job “FB
Group” Join Now
இதற்கு முன்னதாக அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் தலைமையிலான அமர்வு, பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்ற தடை விதித்து நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர்.
இந்த தீர்ப்பை வரவேற்ற அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி, ‘இனி அதிமுகவில் பன்னீர் செல்வம் தான் தலைமை. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் அவர் தான். எந்தவொரு காரணமும் இல்லாமல் ஒருவரை கட்சியை விட்டு நீக்க நினைத்தவருக்கு கிடைத்த அடி தான் இந்த தீர்ப்பு’ என்று கூறியுள்ளார். அதே போல எம்பி ஓ.பி ரவீந்திரநாத் கூறுகையில், அதிமுக தொண்டர்களின் எண்ணங்கள் தான் இந்த தீர்ப்பு. இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் பங்கேற்பார். இந்த வழக்கின் தீர்ப்பு அதிமுக கட்சியின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான வெற்றி.
தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயக்குமார், நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல்கள் 100% கடைபிடிக்கப்படும். இந்த தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜு ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். அதே போல ஓ.எஸ். மணியன் அவர்களும் ஒற்றைத் தலைமை தேர்வாகிவிட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் என இந்த தீர்ப்புக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர்.