தமிழகத்தில் புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – அமைச்சர் விளக்கம்!
தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இதுமட்டுமல்லாமல், புதிதாக ஏராளமான முதலீடுகளை கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் உற்பத்தி துறை மையமாக இருக்க வேண்டும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதை உறுதி செய்யும் விதமாக தற்போது முக்கிய தகவலை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து, ஒரு வருடம் நிறைவடைந்த இந்த நிலையில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த மாதம் தமிழக சட்டசபையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் துறையை பொறுத்தவரை தமிழக அரசு மிக வேகமாக முன்னேறி வந்து கொண்டிருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து புதிய அன்னிய முதலீடுகள், புதிய முதலீடுகளை பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்ந்து போடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
ஆட்சிக்கு வந்து 10 மாதங்களில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 69 ஆயிரத்து 375 கோடியே 54 லட்சம் ரூபாய் முதலீட்டை ஈர்த்து இருக்கிறோம். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவது மட்டும் முக்கியமல்ல. இதில் உறுதி செய்யப்பட்டுள்ள முதலீடுகளை கொண்டு வருவதுதான் மிக மிக முக்கியம்.அந்த வகையில் இந்த 10 மாதங்களில் புதிய முதலீடுகள் வந்திருக்கிறது. புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கிறது. புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது என பேசி இருந்தார். அந்த பேச்சு தற்போது நிறைவேற்றப்பட்டு இருப்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த வேலைவாய்ப்பு தகவலின் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
மேலும் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார பெருமன்ற மாநாட்டில் தமிழக குழு பங்கேற்ற பின் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் சுவிஸ் பயணம் அமைந்தது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புதிய முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.