விஜயநகர் பாமினி அரசுகள்

0
விஜயநகர் பாமினி அரசுகள்

விஜய நகரப் பேரரசு

சான்றுகள்

இந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறு ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. நான்கு மரபுகள் – சங்கம, சாளுவ, துளுவ, ஆரவீடு – கி.பி. 1336 முதல் 1672 வரை விஜய நகரை ஆட்சிபுரிந்தன. இலக்கியம், தொல்லியல், நாணயம் என விஜய நகர வரலாற்றுக்கான சான்றுகள் பல்வகைப்படும். கிருஷ்ண தேவராயின் ஆமுக்த மால்யதம், கங்காதேவி எழுதிய மதுராவிஜயம், அல்லசானி பெத்தண்ணாவின் மனுசரிதம் போன்றவை விஜயநகர சமகால நூல்களாகும்.விஜய நகரப் பேரரசுக்கு பல்வேறு அயல்நாட்டு பயணிகள் வருகைபுரிந்தனர். அவர்களது குறிப்புகளும் பயனுள்ள சான்றுகளாகும். மொரோக்கா நாட்டைச் சேர்ந்த இபன் பதூதா, வெனிஷியப் பயணி நிக்கோலோ டி கோன்டி, பாரசீகப்பயணி அப்துல் ரசாக், போர்ச்சுகீசியப் பயணி டோமிங்கோ பயஸ் போன்ற பயணிகள் விஜய நகர கால சமூக பொருளாதார நிலைமைகள் பற்றி தங்களது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளனர். இரண்டாம் தேவராயரின், ஸ்ரீரங்கம் செப்பேடுகள் போன்ற செப்பேடுகள் விஜயநகர அரச வழித்தோன்றல்கள் மற்றும் அவர்களது சாதனைகளைக் கூறுகின்றன. ஹம்பி இடிபாடுகளும் பிற சின்னங்களும் விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுப் பங்களிப்பை வெளிப் படுத்துகின்றன. அவர்கள் வெளியிட்டுள்ள எண்ணற்ற நாணயங்களில் காணப்படும் உருவங்கள் மற்றும் சொற்றொடர்கள் விருதுகளையும் சாதனைகளையும் எடுத்துக் கூறுகின்றன.

அரசியல் வரலாறு

  • சங்கம மரபைச் சேர்ந்த ஹரிஹரரும் புக்கரும் 1336 ஆம் ஆண்டு விஜய நகரத்தை நிறுவினர். ஏற்கனவே, அவர்கள் வாரங்கல் ஆட்சியாளர்களான காகதீயர்களிடம் பணியாற்றிவந்தனர். பிறகு காம்பிலிக்கு சென்றனர். அங்கு முஸ்லிம் படையெடுப்பாளர்களால் சிறைப்படுத்தப்பட்டு இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.
  • பின்னர், வித்யாரண்யர் என்பவரின் முயற்சியால் இந்து சமயத்திற்கு திரும்பினர். தங்களது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்ட அவர்கள் துங்கப்பத்திரை நதியின் தென்கரையில் ஒரு புதிய நகரத்தை நிறுவினர். வெற்றி நகரம் என்ற பொருள்கொண்ட விஜயநகரம் என்று அது வழங்கப்பட்டது.
  • ஹோய்சள அரசின் வீழ்ச்சி, ஹரிஹரரும் புக்கரும் தங்களது அரசை விரிவுபடுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை எளிதாக்கியது.
  • 1346 ஆம் ஆண்டு வாக்கில் ஹோய்சள அரசுப்பகுதி முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் வந்தது. விஜயநகரத்திற்கும் மதுரை சுல்தானியத்திற்கும் இடையிலான பூசல் நாற்பதாண்டு காலம் நீடித்தது.
  • குமார காம்பணரின் மதுரைப்படையெடுப்பு குறித்து மதுராவிஜயம் என்ற நூலில் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. அவர் மதுரை சுல்தானியத்தை அழித்தார். இதனால், விஜய நகரப் பேரரசு ராமேஸ்வரம் உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதையும் உள்ளடக்கியதாக விரிவடைந்தது.
  • விஜயநகர பேரரசுக்கும் பாமினி அரசுக்கும் இடையிலான பூசலும் பல ஆண்டுகள் நீடித்தன.
  • கிருஷ்ணா, துங்கபத்திரா நதிகளுக்கிடையிலான பகுதியான ரெய்ச்சூர் தோஆப் பகுதியை கட்டுப்படுத்துவதும், கிருஷ்ணா கோதாவரி டெல்டாவின் வளமான நிலங்களைக் கைப்பற்றுவதும் இம்மோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தன.
  • சங்கம மரபின் சிறந்த அரசர் இரண்டாம் தேவராயர். ஆனால், அவரால்கூட பாமினி சுல்தான்களை முழுவதுமாக வெற்றிகொள்ள இயலவில்லை. அவரது மறைவுக்குப்பிறகு சங்கம் மரபு வலிமையிழந்தது.
  • அடுத்ததாக, சாளுவநரசிம்மர் சாளுவ மரபைத் தோற்றுவித்தார். இந்த மரபு மிகவும் குறுகிய காலமே (1486 – 1509) ஆட்சியிலிருந்தது.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

கிருஷ்ண தேவராயர் (1509 – 1530)

  • வீரநரசிம்மரால் துளுவ மரபு தோற்றுவிக்கப் பட்டது. விஜயநகரத்தின் மிகச் சிறந்த பேரரசரான கிருஷ்ண தேவராயர் துளுவ மரபைச் சேர்ந்தவர். அவர் சிறந்த போர் ஆற்றல் மிக்கவர்.
  • கம்பீரமான தோற்றம் கொண்ட அவர் அறிவாற்றல் மிக்கவராகவும் காணப்பட்டார். படையெடுத்து வரும் பாமினி படைகளை தடுத்து நிறுத்துவதே அவரது அப்போதைய முதல் கடமையாக இருந்தது.
  • அச்சமயம், பாமினி அரசு மறைந்து அங்கு தக்காண சுல்தானியங்கள் நிறுவப்பட்டிருந்தன. திவானி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கிருஷ்ண தேவராயர் முஸ்லீம் படைகளை இறுதியாக முறியடித்தார். இதனால், பிஜப்பூர் சுல்தானுடன் மோதல் ஏற்பட்டது.
  • அப்போது பீஜப்பூரின் சுல்தான் இஸ்மாயில் அடில்ஷா, கிருஷ்ண தேவராயர் அவரை முறியடித்து, 1520 ல் ரெய்ச்சூர் நகரைக் கைப்பற்றினார். பின்னர், பீடார் மீது படையெடுத்து அதைக் கைப்பற்றினார்.
  • கிருஷ்ணதேவராயரின் ஒரிசா படையெடுப்பும் வெற்றியில் முடிந்தது. கஜபதி மரபின் அரசரான பிரதாபருத்ரனை அவர் முறியடித்து தெலுங்கானா பகுதி முழுவதையும் கைப்பற்றினார்.
  • போர்ச்சுகீசியர்களுடன் அவர் நட்புறவையே மேற்கொண்டார். கிருஷ்ணதேவராயரின் அவைக்கு அல்புகர்க் தனது தூதுவர்களை அனுப்பிவைத்தார்.
  • கிருஷ்ணதேவராயர் தாம் வைணவராக இருந்தபோதிலும், அனைத்து சமயங்களையும் மதித்து நடந்தார். கலை, இலக்கியப் புரவலராகவும் அவர் திகழ்ந்தார். எனவே ஆந்திரபோஜர் என்று அவர் அழைக்கப்பட்டார்.
  • அஷ்டதிக்கஜங்கள் என்ற எட்டு சிறந்த அறிஞர்கள் அவரது அவையை அலங்கரித்தனர். அவர்களின் முதன்மையானவர் அல்லசானி பெத்தண்ணா. ஆந்திரகவிதாபிதாமகர் என்று அவர் புகழப்பட்டார்.
  • அவரது முக்கிய படைப்புகள் மனுசரிதம் மற்றும் ஹரிகதாசாரம் என்பதாகும். பிங்கலி சூரண்ணா, தெனாலி ராமகிருஷ்ணா இருவரும் சிறந்த அறிஞர்களாகத்திகழ்ந்தனர்.
  • ஆமுக்தமால்யதம் என்ற தெலுங்கு மொழி நூலையும், ஜாம்பவதி கல்யாணம்,  உஷாபரிணயம் என்ற வடமொழி நூல்களையும் கிருஷ்ண தேவராயர் இயற்றியுள்ளார்.
  • தென்னிந்தியாவில் பெரும்பாலான கோயில்களை அவர் செப்பனிட்டார். விஜயநகரத்தில் விட்டலசுவாமி மற்றும் ஹசரராமசுவாமி ஆலயங்களையும் அவர் எழுப்பினார். தனது பட்டத்தரசி நாகலாதேவியின் நினைவாக அவர் நாகலாபுரம் என்ற புதிய நகரை நிர்மாணித்தார். மேலும், ஏராளமான ராயகோபுரங்களையும் அவர் கட்டுவித்தார்.
  • கிருஷ்ணதேவராயரின் மறைவுக்குப்பிறகு அச்சுததேவர், வெங்கடர் ஆகியோர் அரியணையேறினர்.
  • ராமராயரின் ஆடட்சிக்காலத்தில், பீஜப்பூர், அகமதுநகர் கோல்கொண்டா, பீடார் ஆகிய அரசுகளின் கூட்டுப்படைகள் 1565 ஆண்டு தலைக்கோட்டைப்போரில் அவரை முறியடித்தன. அப்போர் ராக்ஷஸதாங்கடி என்றும் அழைக்கப்படுகிறது. ராமராயர் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார்.
  • விஜயநகரத் அழிக்கப்பட்டது. விஜயநகரப் பேரரசுக்கு சாவுமணி அடித்த போராக இது கருதப்படுகிறது. இருப்பினும், விஜயநகர அரசு. ஆரவீடு மரபினரின் ஆட்சியில் அடுத்த நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது. திருமலா, ஸ்ரீரங்கா, இரண்டாம் வெங்கடர் ஆகியோர் அம்மரபின் முக்கிய அரசர்கள். விஜயநகர அரசின் கடைசி அரசர் இரண்டாம் ஸ்ரீரங்கர்.

ஆட்சி முறை

  • விஜயநகரப் பேரரசின் கீழ் ஆட்சித்துறை நன்கு சீரமைக்கப்பட்டிருந்தது. நிர்வாகம், நீதி, சட்டம் ஆகிய விவகாரங்களில் அரசர் முழு அதிகாரம் பெற்று விளங்கினார்.
  • பரம்பரை வாரிசுரிமை வழங்கத்திலிருந்தது. சிலசமயம் அரியணையை கைப்பற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடந்தது.
  • சாளுவ நரசிம்மர் சங்கம மரபை முடித்துவிட்டு ஆட்சயைக் கைப்பற்றினார் என்பதை ஏற்கனவே கண்டோம். அரசருக்கு அன்றாட ஆட்சியில் உதவுவதற்காக அமைச்சரவையும் இருந்தது.
  • பேரரசு பல மண்டலங்களாகவும், மண்டலம் பல நாடுகளாகவும், நாடு பல ஸ்தலங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.
  • ஸ்தலம் என்பது பல கிராமங்களைக் கொண்டிருந்த பிரிவாகும்.
  • மண்டலத்தின் ஆளுநர் மண்டலேஸ்வரர் அல்லது நாயக் என்று அழைக்கப்பட்டார்.
  • விஜய நகர ஆட்சியாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஆட்சியில் முழு அதிகாரங்களை வழங்கியிருந்தனர்.
  • நிலவரி தவிர, திறைகள், பரிசுகள் ஆகியவற்றை சிற்றரசர்களும் படைத்தலைவர்களும் அவ்வப்போது பேரரசுக்கு அனுப்பி வந்தனர். துறைமுகங்களில் வசூலிக்கப்பட்ட சுங்கம், பல்வேறு தொழிலாளர்கள் மீதான வரிகள் ஆகியவையும் அரசாங்கத்தின் வருவாயாக இருந்தன.
  • விளைச்சளில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது. அரசரின் தனிப்பட்ட செலவுகள், அவர் அளிக்கும் கொடைகள், ராணுவத்திற்கான செலவுகள் போன்றவை அரசின் முக்கிய செலவினங்களாகும்.
  • நீதித்துறைரயப் பொறுத்தவரை உடல் உறுப்புகளை சிதைத்தல், யானைக்காலால் இடறுதல் போன்ற கொடுமையான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ன.
  • விஜய நகர ராணுவம் திறமையான முறையில் சீரமைக்கப்பட்டிருந்தது. குதிரைப்படை, காலாட்படை, பீரங்கிப்படை, யானைப்படை என நான்கு முக்கிய பிரிவுகளை அது கொண்டிருந்தது.
  • அயல்நாட்டு வணிகரிடமிருந்து உயர்ரக குதிரைகள் ராணுவத்திற்காக வாங்கப்பட்டன. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் நாயக் அல்லது பாளையக்காரர் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் ஆற்றும் பணிக்கு ஈடாக நிலங்கள் வழங்கப்பட்டன. இந்நிலங்கள் அமரம் என்று அழைக்கப்பட்டது.
  • படை வீரர்களுக்கு ஊதியம் பொதுவாக பணமாகவே வழங்கப்பட்டது.

சமூக வாழ்க்கை

  • பிராமணர், ஷத்திரியர்,  வைசியர், சூத்திரர் என்ற நான்கு ஜாதிப்பிரிவுகள் விஜயநகர சமூகத்தில் இருந்ததாக அல்லசானி பெத்தண்ணா தமது மனுசரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • விஜயநகரின் வானளாவிய கட்டிடங்கள் மற்றும் ஆடம்பர சமூக வாழ்க்கை பற்றியும் அயல்நாட்டுப் பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
  • பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை மக்கள் அணிந்தனர். வாசனைப்பொருட்கள் மலர்கள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் பயன்படுத்தினர். செல்வந்தர்களின் அழகான வீடுகள் அவற்றில் பணிபுரிந்த ஏராளமான பணியாளர்கள் பற்றிய விவரங்களை பயஸ் குறிப்பிட்டுள்ளார்.
  • அடிமைகள் பற்றி நிக்கோலோ டி கோண்டி தனது குறிப்புகளில் கூறியுள்ளார். நடனம், இசை, மல்யுத்தம், சூதாட்டம், சேவல் சண்டை போன்றவை ஒரு சில பொழுதுபோக்குகளாகும்.
  • சங்கம மரபினர் சைவர்களாகத்திகழ்ந்தார். விருப்பாட்ஷர் அவர்களின் குலத்தெய்வம். முற்ற மரபைச் சேர்ந்தவர்கள் வைணவர்கள்.
  • ராமானுஜரின் ஸ்ரீவைணவம் மக்களிடையே புகழ்பெற்று விளங்கிளது. ஆனால், எல்லா அரசர்களும் பிற சமயங்கள் மீது சகிப்புத் தன்மையுடன் நடந்து கொண்டார்.
  • மக்கள் அனைவரும் சமய சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்றுத் திகழ்ந்தனர் என போர்போசா குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்தில் முஸ்லிம்களும் இடம்பெற்றிருந்தனர்.
  • மசூதிகள் கட்டிக்கொண்டு தொழுகை நடத்தவும் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
  • பல்வேறு விழாக்கள் நடைபெற்றன. இதிகாசங்களும் புராணங்களும் மக்களிடையே பிரபலமாக இருந்தன.
  • மகளிர் நிலையில் முன்னேற்றம் காணப்படவில்லை. ஒரு சிலர் மட்டுமே கல்வியிற்சிறந்து விளங்கினர். குமார காம்பணரின் மனைவி கங்கா தேவி மதுராவிஜயம் என்ற நூலை எழுதினார். ஹன்னம்மா, திருமலம்மா இருவரும் அக்காலத்தில் புகழ் வாய்ந்த பெண்புலவர்கள்.
  • ஏராளமான பெண்கள் அரண்மனைகளில் பணிப்பெண்களாகவும் நாட்டிய மகளிராகவும், பல்லக்கு சுமப்பவர்களாகவும் இருந்தனர் என நூனிஸ் கூறுகிறார். ஆலயங்களுக்கு சேவை செய்த நாட்டிய மகளிரும் இருந்தனர்.
  • தேவதாசி முறை வழக்கத்திலிருந்ததாக பயஸ் குறிப்பிட்டுள்ளார். அரச குடும்பங்களில் பல தாரமணம் வழக்கத்திலிருந்தது. ‘சதி’ வழக்கம் பெருமையாகக் கருதப்பட்டது. நூனிஸ் அதுபற்றி விவரமாகக் கூறியுள்ளார்.
    அழைக்கப்பட்டன.

பொருளாதார நிலை

  • அக்கால உலகின் செல்வமிக்க பகுதிகளில் ஒன்றாக விஜயநகரப் பேரரசு விளங்கியது என்ற செய்தியை அயல்நாட்டுப் பயணிகளின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
  • மக்களின் முக்கிய தொழில் வேளாண்மை. நீர்ப்பாசன வசதிகளை செய்த கொடுத்து விஜயநகர ஆட்சியாளர்கள் வேளாண்மை வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தனர்.
  • புதிய ஏரிகள் வெட்டப்பட்டன. துங்கபத்திரா போன்ற நதிகளின் குறுக்கே தடுப்பு அணைகள் கட்டப்பட்டன. கால்வாய்கள் அமைக்கப்பட்டதைப் பற்றி நூனிஸ் கூறியுள்ளார்.
  • பல்லேறு தொழில்களும் சிறந்து விளங்கின. அவை ஒவ்வொன்றுக்கும் கழகங்கள் இருந்தன. உலோகத்தொழில் செய்வோரும் பிற கைவினைஞர்களும் அக்காலத்திர் தழைத்தோங்கினர்.
  • கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில் வைரச்சுரங்கங்கள் இருந்தன. விஜயநகரம் ஒரு புகழ்மிக்க வர்த்தக மையமாகவும் விளங்கியது. முக்கிய தங்க நாணயம் வராகன் என்பதாகும். ஆனால், எடைகளும் அளவைகளும் இடத்துக்கு இடம் மாறுபட்டிருந்தன.
  • உள்நாட்டு, அயல்நாட்டு வர்த்தகம் பெருகியதால் நாட்டில் பொதுவாக செல்வ செழிப்பு காணப்பட்டது.
  • மலபார் கடற்கரையில் பல துறைமுகங்கள் இருந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது கண்ணனூர் துறைமுகமாகும்.
  • அராபியா, பாரசீகம், தென் ஆப்பரிக்கா, போர்ச்சுகல் போன்ற மேலை நாடுகளுடனும் வாணிகத்தொடர்பு நிலவியது பருத்தி மற்றும் பட்டுத் துணிகள், நறுமணப் பொருட்கள், அரிசி, வெடியுப்பு, சர்க்கரை போன்றவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள்.
  • குதிரைகள், முத்துக்கள், செம்பு, பவழம், பாதரசம், சீனத்துப்பட்டு வெல்வெட்துணிகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன. கப்பல் கட்டும் தொழிலும் வளர்ச்சியடைந்தது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

பண்பாட்டுப் பங்களிப்பு

  • விஜய நகர ஆட்சியில் கோயில்கட்டும் நடவடிக்கைகள் மேலும் அதிகரித்து. ராயகோபுரங்கள் எனப்படும் நுழைவாயில் கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகங்களில் சிற்பத்தூண்களைக் கொண்ட கல்யாண மண்டபங்கள் ஆகியன விஜயநகர கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்களாகும்.
  • மண்டபத்தூண்டுகளில் வடிக்கப் பட்டுள்ள சிற்பங்கள் கலைநயமிக்கவை. இந்த தூண் சிற்பங்களில் கலைநயமிக்கவை. இந்த தூண் சிற்பங்களில் பெரும்பாலும் குதிரை உருவங்கள் இடம்பெற்றிருந்தன.
  • பெரிய ஆலயங்களில் நூற்றுக்கால் மண்டபங்களும், ஆயிரங்கால் மண்டபங்களும் எழுப்பப்பட்டன. திருவிழாக்காலங்களில் இறைவனை அங்கு கொண்டுவந்து வைத்து வழிபடுவது வழக்கம். ஏற்கனவே கட்டப்பட்ட ஆலயங்களின் சுற்றுப்பிரகாரத்தில் அம்மனுக்கு என தனி ஆலயங்கள் அக்காலத்தில் அமைக்கப்பட்டன.
  • விஜய நகரம் இன்று ஹம்பி இடிபாடுகளாகக் காட்சியளித்தாலும் அங்குள்ள கோயில்கள் விஜய நகரப்பாணிக்கு சிறந்து எடுத்துக்காட்டுகளாகும்.
  • விட்டலசுவாமி மற்றும் ஹசர ராமசுவாமி ஆலயங்கள் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. விஜய நகர கோயில் கட்டிடக்கலையின் பிரமாண்டத்துக்கு எடுத்துக் காட்டாக காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் மற்றும் வரதராஜர் ஆலயங்களைக் கூறலாம்.
  • திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய இடங்களிலுள்ள ராய கோபுரங்கள் விஜயநகர காலத்தின் புகழைப் பறைசாற்றுகின்றன. பின்னர் நாயக்கர் காலத்திலும் இத்தகைய கலைப்பணி தொடர்ந்தது.
  • திருப்பதியில் காணப்படும் கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது அரசிகளின் உலோகப்படிமங்கள் விஜய நகர கால உலோகக்கலைக்கு எடுத்துக்காட்டாகும். விஜய நகர அரசர்களால் இசையும் நடனமும் ஆதரிக்கப்பட்டது.
  • வடமொழி. தெலுங்கு, கன்னடம், தமிழ் போன்ற மொழிகள் அந்தந்தப்பகுதிகளில் புகழ்பெற்றிருந்தன. வடமொழி மற்றும் தெலுங்கு இலக்கியம் விஜய நகர காலத்தில் மகத்தான வளர்ச்சி பெற்றது.
  • கிருஷ்ணதேவராயரின் ஆட்சிக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சம் பெற்றது. அவரே வடமொழி மற்றும் தெலுங்கு மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
  • அவரது அவைப் புலவரான அல்லசானி பெத்தண்ணா தெலுங்கு இலக்கிய வளர்ச்சிக்கு அருந்தெண்டாற்றியுள்ளர்.
  • எனவே விஜய நகர ஆட்சியாளர்களின் பண்பாட்டுத் தொண்டு பன்முகத்தன்மை கொண்டதாகவும் சிறப்புடையதாகவும் திகழ்ந்தது.

பாமினி அரசு

  • 1347 ஆம் ஆண்டு பாமினி அரசை நிறுவியவர் அலாவுதீன் பாமன்ஷா இவர் ஹசன் கங்கு என்றும் அழைக்கப்பட்டார். அதன் தலைநகரம் குல்பர்கா.
  • பாமினி அரசை மொத்தம் பதினான்கு சுல்தான்கள் ஆட்சிபுரிந்தனர். அவர்களில், அலாவுதீன் பாமன்ஷா, முதலாம் முகமது ஷா, பிரோஸ் ஷா ஆகியோர் சிறப்பு வாய்ந்தவர்கள்.
  • பின்னர் அகமது வாலிஷா என்பவர் தலை நகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றினார். மூன்றாம் முகம்மதுஷாவின் ஆட்சிக்காலத்தில் பாமினி அரசின் புகழ் அதன் உச்சிக்கு சென்றது.
  • அராபியக் கடல் தொடங்கி வங்காள விரிகுடா வரை பாமினி அரசு விரிவடைந்தது. மேற்கில் கோவா முதல் பம்பாய் வரை நீண்டிருந்ததது.
  • கிழக்கில் காக்கிநாடா முதல் கிருஷ்ணா நதியின் முகத்துவாரம் வரை பரவியிருந்தது. முகமது ஷாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் அவரது அமைச்சராக விளங்கிய முகமது காவன் என்பவரின் ஆலோசனைகளும் சேவைகளுமேயாகும்.

முகமது காவன்

  • முகமது காவனின் வழிகாட்டுதலால் பாமினி அரசு அதன் புகழின் உச்சியை எட்டியது. அவர் ஒரு பாரசீக வணிகர். தனது நாற்பத்தியிரண்டாவது வயதில் இந்தியாவுக்கு வந்த அவர் பாமினி அரசின் சேவையில் சேர்ந்தார்.
  • தனது தனிப்பட்ட ஆளுமையினால் அவர் பாமினி சுல்தானியத்தின் முதலமைச்சரானார். பாமினி அரசுக்கு விசுவாசமாக அவர் இருந்தார்.
  • எளிய வாழ்க்கையை நடத்திவந்த அவர் பெருந்தன்மை கொண்டவராகவும் திகழ்ந்தார். கல்வியறிவுமிக்கவராக இருந்த அவர் கணிதத்தில் மேதைமையுடன் விளங்கினார்.
  • பீடாரில் ஒரு கல்லூரியை கட்டுவதற்காக அவர் கொடைகளை வழங்கினார். பாரசீகக் கட்டிடக் கலைப்பாணியில் அந்த கல்லூரி கட்டப்பட்டது.
  • போர்த்துறையிலும் அவர் வல்லவராக விளங்கினார். விஜய நகரம், ஒரிசா மற்றும் அரபிக்கடலின் கடற்கொள்ளையர்களுக்கு எதிராக அவர் போர்கள் தொடுத்து வெற்றி பெற்றார்.
  • கொங்கணம், கோவா, கிருஷ்ணா, போதாவரி பள்ளத்தாக்கு போன்ற அவரது வெற்றிகளினால் பாமினி அரசு விரிவடைந்தது.
  • முகமது காவனனின் சீர்திருத்தங்களும் சிறப்பானவை, உயர் குடியினர் மற்றும் மாகாணங்களை கட்டுப்படுத்துவதே அவரது குறிக்கோளாகும். இதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் அரச அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
  • பெரும்பாலான கோட்டைகள் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தன. கடமைதவறும் உயர்குடியினருக்கு சலுகைகள் குறைக்கப்பட்டன. எனவே, காவனுக்கு எதிராக தக்கணி உயர்குடியினர் சதித்திட்டம் ஒன்றைத் தீட்டினர். அதன்படி சுல்தானைத் தூண்டிவிட்டு காவனுக்கு தூக்குதண்டனை வாங்கிக் கொடுத்தனர்.
  • முகமது காவனின் மறைவுக்குப்பிறகு பாமினி அரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது.
  • முகமதுஷாவுக்குப் பிறகு திறமையற்ற சுல்தான்கள் ஆட்சிக்கு வந்தனர். இக்காலத்தில் மாகாண ஆளுநர்கள் தங்களது சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர்.
  • 1526 ஆம் ஆண்டு வாக்கில் பாமினி அரசு ஐந்து சுதந்திர சுல்தானியங்களாக சிதறுண்டன. அகமது நகர், பீஜப்பூர், பீரார், கோல்கொண்டா, பீடார் என்ற ஐந்தும் தக்கான சுல்தானியங்கள் என்று அழைக்கப்பட்டன.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!