தென்னிந்திய அரசுகள் – I

0

தென்னிந்திய அரசுகள் – I

பல்லவர்கள்

தமிழ்நாட்டில் சங்க காலம் முடிந்த பிறது, களப்பிரர்களின் ஆட்சி சுமார் 250 ஆண்டுகள் நீடித்தது. பின்னர் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் தங்களது அரசை நிறுவினர். கி.பி. பத்தாம் நூற்றாண்டில் பேரரசுச் சோழர்கள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றும் வரை அவர்களது ஆட்சி தொடர்ந்தது.

பல்லவர்களின் தோற்றம்

  • பல்லவர்களின் தோற்றம் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மேற்கிந்தியாவை ஆட்சிசெய்த அயலவர்களான பார்த்தியர்களோடு அவர்களை ஒரு சிலர் ஒப்பிடுகின்றனர்.
  • தக்காணத்தில் ஆட்சிபுரிந்த வாகாடகர்கள் என்ற பிராமண அரச குலத்தின் ஒரு பிரிவினரே பல்லவர்கள் என்ற கருத்தும் நிலவுகிறது.
  • மணிபல்லவத் தீவின் இளவரசியான நாக கன்னிகைக்கும் சோழ இளவரசன் ஒருவனுக்கும் பிறந்தவர்களின் வழித் தோன்றல்களே பல்லவர்கள் என்பது மூன்றாவது கருத்து.
  • ஆனால், மேற்கூறிய கருத்துக்களை ஆதரிக்கும் சான்றுகள் மிகவும் குறைவு.
  • எனவே பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தே அறிஞர்களால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
  • அசோகரது கல்வெட்டில் காணப்படும் புலிந்தர்களோடும் அவர்களைத் தொடர்புப்டுத்துகின்றனர். தொண்டை மண்டலத்தை சாதவாகனர்கள் கைப்பற்றிய போது பல்லவர்கள் அவர்களிடம் படைத்தலைவர்களாகப் பணியாற்றினர்.
  • கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் சாதவாகனர்களின் வீழ்ச்சிக்குப் பின் பல்லவர்கள் சுதந்திரம் பெற்றனர். சாதவாகனர்களிடம் பல்லவர்கள் கொண்டிருந்த தொடர்பு காரணமாகவே முதலில் பிராகிருத மொழியிலும், வடமொழியிலும் கல்வெட்டுகளை வெளியிட்டனர்.
  • பிராமண சமயத்தையும் ஆதரித்தனர் என்று கூறலாம்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

அரசியல் வரலாறு

  • கி.பி. 250 முதல் 350 வரையிலான முற்காலப் பல்லவர்கள் பிராகிருத மொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
  • சிவஸ்கந்தவர்மன், விஜயஸ்கந்தவர்மன் ஆகியோர் இம்மரபில் குறிப்பிடத்தக்கவர்கள். அடுத்தாக ஆட்சிக்கு வந்த பல்லவர்கள் கி.பி.350 முதல் 550 வரை ஆட்சி புரிந்தனர். அவர்கள் வடமொழியில் பட்டயங்களை வெளியிட்டனர்.
  • அப்பிரிவில் முக்கிய ஆட்சியாளர் விஷ்ணுகோபன் சமுத்திரகுப்தரின் தென்னிந்தியப் படையெடுப்பின்போது அவர் முறியடிக்கப்பட்டார்.
  • மூன்றாவதாக ஆட்சிக்கு வந்த பல்லவமரபினர் கி.பி.575 முதல் ஒன்பதாம் நூற்றாண்டின் அவர்கள் வீழ்ச்சியடையும் வரை ஆட்சி புரிந்தனர்.
  • அவர்கள் வடமொழி, தமிழ் இரண்டு மொழிகளிலும் பட்டயங்களை வெளியிட்டனர். இப்பிரிவின் முதல் ஆட்சியாளர் சிம்ம விஷ்ணு. அவர் களப்பிரர்களை முறியடித்து தொண்டை மண்டலத்தில் பல்லவர் ஆட்சியை நிலையாக ஏற்படுத்தினார்.
  • சோழர்களை முறியடித்த அவர் காவிரி நதிக்கரை வரை பல்லவர் ஆட்சியை விரிவு படுத்தினார்.
  • அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர்களில் முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்

முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 – 630)

  • நீண்டகாலம் தொடர்ந்த பல்லவ – சாளுக்கியப் போர்கள் அவரது காலத்தில் தொடங்கின.
  • இரண்டாம் புலிகேசி பல்லவர்களுக்கு எதிராகப் படையெடுத்து அவர்களது அரசின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றினான்.
  • முதலாம் மகேந்திரவர்மன் புள்ளலூர் என்ற இடத்தில் வெற்றிபெற்றதாக பல்லவர் கல்வெட்டு குறிப்பிட்ட போதிலும், இழந்த பகுதியை அவனால் மீட்க முடியவில்லை.
  • முதலாம் மகேந்திரவர்மன் தொடக்கத்தில் சமண சமயத்தை சேர்ந்தவனாக இருந்தான்.
  • அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் என்ற சைவப் பெரியாரால் அவன் சைவ சமயத்திற்கு மாற்றப்பட்டான்.
  • திருவதி என்ற இடத்தில் ஒரு சிவாலயத்தையும் கட்டினான். குணபரன், சத்யசந்தன், சேத்தகாரி (கோயில்களை கட்டுபவன்), சித்திரக்காரப் புலி, விசித்திரசித்தன்,  மத்தவிலாசன் போன்ற விருதுப் பெயர்களை அவன் சூட்டிக் கொண்டான்.
  • குடைவரைக் கோயில்கள் அமைப்பதிலும் அவன் சிறந்து விளங்கினான்.
  • மண்டகப்பட்டு என்ற இடத்தில் காணப்படும் கல்வெட்டு அவனை விசித்திரசித்தன் என்று புகழ்வதோடு, செங்கல், மரம், சுண்ணாம்பு, உலோகம் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கு கோயில் அமைத்தவன் என்றும் அவனது சாதனையைக் குறிப்பிடுகிறது.
  • வல்லம், மகேந்திரவாடி, தளவானூர், பல்லாவரம், மண்டகப்பட்டு,  திருச்சிராப்பள்ளி ஆகிய இடங்களில் அவனது குடைவரைக் கோயில்களைக் காணலாம்.
  • ‘மத்தவிலாச பிரகாசனம்’ என்ற வடமொழி நூலையும் அவன் இயற்றினான். ‘சித்திரக்காரப்புலி’ என்ற விருதுப் பெயர் ஓவியக்கலையில் அவனது ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. இசையிலும் அவன் தேர்ச்சி பெற்றிருந்தான்.
  • குடுமியான்மலை இசைக்கல் வெட்டு அவனது காலத்தியது என்று கருதப்படுகிறது.

முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி. 630 – 668)

  • முதலாம் நரசிம்மவர்மன் ‘மாமல்லன்’ என்றும் அழைக்கப்பட்டான். அதற்கு மற்போரில் வல்லவன் என்று பொருள்.
  • சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியிடம் தனது தந்தை அடைந்த தோல்விக்குப் பழிவாங்க அவன் உறுதிபூண்டான்.
  • காஞ்சிக்கு அருகிலுள்ள மணிமங்கலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இரண்டாம் புலிகேசிக்கு எதிராக அவன் பெற்ற வெற்றியை கூரம் செப்பேடுகள் கூறுகின்றன.
  • பரஞ்சோதியை படைத்தவனாகக் கொண்ட பல்லவப்படை சாளுக்கியப் படையை விரட்டிச் சென்றது. இரண்டாம் புலிகேசி தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
  • வாதாபிநகரம் அழிக்கப்பட்டது. முதலாம் நரசிம்மவர்மன் ‘வாதாபி கொண்டான்’ என்ற விருதைச் சூட்டிக் கொண்டான்.
  • தந்தை இழந்த பகுதியையும் மீட்டான். முதலாம் நரசிம்மவர்மனின் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனை அவன் இலங்கைமீது கடற்படை நடத்திச் சென்றதாகும்.
  • தனது நண்பனும், இலங்கை இளவரசனுமான மானவர்மனுக்கு இலங்கை அரியணையை மீட்டுக் கொடுத்தான்.
  • அவனது ஆட்சிக் காலத்தில் சீனப்பயணி யுவான் சுவாங் தலைநகர் காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார். காஞ்சி பற்றிய அவரது வருணனை குறிப்பிடத்தக்கது.
  • மிகப்பெரிய, அழகிய நகரான அது ஆறு மைல்கள் சுற்றளவு கொண்டது எனக் கூறியுள்ளார். அங்கு நூறு புத்தசமய மடாலயங்கள் இருந்தன.
  • பத்தாயிரம் புத்த சமயத் துறவிகள் அவற்றில் வாழ்ந்தனர். கல்விக்குப் பெயர் பெற்றது காஞ்சி மாநகர். அங்கிருந்த கடிகை மிகவும் புகழ்பெற்ற கல்விக் கூடமாகும்.
  • மாமல்லபுரத்தை நிறுவியவர் முதலாம் நரசிம்மவர்மன். அவரது ஆட்சிக்காலத்தில்தான் அங்கு ஒற்றைக்கல் ரதங்கள் அமைக்கப்பட்டன.

இரண்டாம் நரசிம்மவர்மன் (அல்லது) ராஜசிம்மன் (கி.பி. 695 722)

  • முதலாம் நரசிம்மவர்மனைத் தொடர்ந்து இரண்டாம் மகேந்திரவர்மனும், முதலாம் பரமேஸ்வர்மனும் ஆட்சிக்கு வந்தனர்.
  • அவர்களது ஆட்சிக் காலத்திலும் பல்லவ – சாளுக்கிய மோதல்கள் தொடர்ந்தன. பின்னர், இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிப் பொறுப்பேற்றான். அவன் ராஜசிம்மன் என்று அழைக்கப்பட்டான். அவனது ஆட்சிக்காலம் போர்களற்ற அமைதிக் காலமாக விளங்கியது.
  • கலை, கட்டிடக் கலையில் அவனது கவனம் திரும்பியது.
  • மாமல்லப்புரத்திலுள்ள கடற்கரைக் கோயில், காஞ்சி கைலாசநாதர் ஆலயம் ஆகியன அவனது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டவை, கலை, இலக்கியத்தையும் அவன் ஆதரித்துப் போற்றினான்.
  • புகழ்மிக்க வடமொழி அறிஞரான தண்டின் அவனது அவையை அலங்கரித்ததாகக் கூறப்படுகிறது.
  • சீனாவுக்கு அவனன் தூதுக் குழுக்களை அனுப்பி வைத்தான். கடல் வாணிபம் அவனது ஆட்சிக் காலத்தில் செழித்தது.
  • சங்கரபக்தன், வாத்யவித்யாதரன், ஆகம்ப்பிரியன் போன்ற விருதுகளையும் ராஜசிம்மன் சூட்டிக் கொண்டான்.
  • அடுத்து, இரண்டாம் பரமேஸ்வர்மன், இரண்டாம் நந்திவர்மன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர். பல்லவர்களது ஆட்சி கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்தது.
  • சோழ அரசன் முதலாம் ஆதித்தன் கடைசி பல்லவ அரசன் அபராஜிதனை முறியடித்து காஞ்சிப் பகுதிiயைக் கைப்பற்றினான். அத்துடன் பல்லவ மரபு முடிவுக்கு வந்தது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

பல்லவர் ஆட்சி முறை

  • பல்லவர்கள் நன்கு சீரமைக்கப்பட்ட ஆட்சி முறையைக் கொண்டிருந்தனர். பல்லவ அரசு பல கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
  • அரசரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் கோட்ட நிர்வாகத்தை நடத்தினர். ஆட்சியின் மையப் பொறுப்பில் அரசர் இருந்தார்.
  • அவருக்கு உதவியாக திறமைமிக்க அமைச்சர்கள்; இருந்தனர். நீதியின் ஊற்றுக்கண்ணாக அரசர் செயல்பட்டார்.
  • நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையை அவர் பெற்றிருந்தார். ஆலயங்களுக்கு அவர் அளித்த நிலக்கொடை தேவதானம் எனப்பட்டது.
  • பிராமணர்களுக்கு வழங்கிய நிலக்கொடை பிரமதேயமாகும். நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி செய்துகொடுக்க வேண்டியது அரசனது கடமையாகும்.
  • பல்லவ அரசர்கள் பல நீர்ப்பாசன ஏரிகளை வெட்டுவித்தனர். முதலாம் மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில் மகேந்திரவாடி, மாமண்டூர் ஆகிய இடங்களில் ஏரிகள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்கிறோம்.
  • அரசின் முக்கிய வருவாய் நிரிவரிமூலமாகவே கிடைத்தது. பிரமதேய மற்றும் தேவதான நிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
  • வணிகர்களும் கைவினைஞர்களும் அரசுக்கு வரிசெலுத்தினர். தச்சர், பொற்கொல்லர், சலவைத் தொழிலாளர், எண்ணெய் வணிகர், நெசவாளர் போன்றோர் செலுத்திய வரிகள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • சபை மற்றும் சபைக் குழுக்கள் போன்ற கிராம நிர்வாக அமைப்புகள் குறித்தும் பல்லவர்கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.
  • கிராம நிலங்கள், கோயில் நிர்வாகம், உள்ளாட்சி போன்ற அலுவல்களை கிராம சபைகள் கவனித்து வந்தன.

பல்லவர் கால சமுதாயம்

  • பல்லவர் காலத்தில் தமிழ்ச் சமுதாயம் பெரும் மாற்றங்களை சந்தித்தது. ஜாதிமுறை கடுமையாகப் பின்பட்டது.
  • பிராமணர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருந்தனர். அவர்களுக்கு அரசர்களும், உயர்குடியினரும் நிலக் கொடைகளை வழங்கினர். கோயில்களை பராமரிக்கும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
  • பல்லவர் காலத்தில் வைணவமும் சைவமும் தழைத்தன. மாறாக, புத்தசமயமும், சமண சமயமும் வீழ்ச்சியடைந்தன.
  • சைவ நாயன்மார்களும், வைணவ ஆழ்வார்களும், சைவ, வைணவ சமயங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர்.
  • இதற்கு பக்தி இயக்கம் என்று பெயர். தமிழ்மொழியில் அவர்கள் பக்திப் பாடல்களை இயற்றிப் பாடினர்.
  • பக்தியின் சிறப்பை இப்பாடல்கள் வெளிப்படுத்தின. பல்லவ அரசர்களால் கட்டப்பட்ட ஆலயங்களும் இவ்விரு சமயங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளித்தன.

கல்வி, இலக்கியம்

  • பல்லவர்கள் கற்றோரைப் போற்றி ஆதரித்தனர். அவர்களது தலைநகரான காஞ்சி ஒரு கல்வி நகரமாகும். காஞ்சிக் கடிகை மிகவும் சிறப்பு வாய்ந்த கல்விக் கூடமாகும்.
  • இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும், அயல்நாடுகளிலிருந்தும் மாணவர்கள் காஞ்சி கடிகைக்கு வந்து கல்வி பயின்றனர்.
  • கடம்ப குலத்தின் நிறுவனரான மயூரசர்மன் காஞ்சிக்கு வந்து வேதங்களைக் கற்றான் திங்கநாகர் என்ற புத்த அறிஞர் கல்வி பயிலுவதற்காக காஞ்சி வந்தார்.
  • நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த தர்மபாலர் காஞ்சி நகரத்தைச் சேர்ந்தவர் சிறந்த வடமொழிப் புலவரான பாரவி சிம்மவிஷ்ணு ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவர்.
  • மற்றொரு வடமொழி ஆசிரியரான தண்டின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர். முதலாம் மகேந்திரவர்மன் மத்தவிலாச பிரகாசனம் என்ற வடமொழி நாடகத்தை இயற்றினார்.
  • தமிழ் இலக்கியமும் இக்காலத்தில் வளர்ச்சியடைந்தது. நாயன்மார்களும் ஆழ்வார்களும் பக்திப் பாடல்களை இனிய தமிழிலேயே இயற்றி இசைத்தனர்.
  • நாயன்மார்கள் இயற்றிய தேவாரமும், ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிர திவ்ய பிரபந்தமும் பல்லவர்கால பக்தி இயக்கியங்களாகும்.
  • இரண்டாம் நந்திவர்மனால் ஆதரிக்கப்பட்ட பெருஞ்தேவனார் மகாபாரத்தை பாரத வெண்பா என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்தார்.
  • நந்திக் கலம்பகம் மற்றொரு முக்கிய தமிழ் இலக்கியம். ஆனால், இதனை இயற்றியவர் பெயர் தெரியவில்லை.
  • இசையும் நடனமும் கூட இக்காலத்தில் செழித்து வளர்ந்தது.

பல்லவர் கால கலை, கட்டிடக் கலை

  • பல்லவர் காலந்தொட்டு கோயில் கட்டும்பணி மிகுந்த ஆரவாரத்துடன் தொடங்கியது. பாறைகளைக் குடைந்து கோயில் அமைக்கும் கலையை பல்லவர்கள் தொடங்கிவைத்தனர்.
  • திராவிட கலைப்பாணி பல்லவர்காலம் முதற் கொண்டே வளரத் தொடங்கியது.
  • குடைவரைக் கோயில்களில் தொடங்கி, ஒற்றைக் கல் ரதங்கள், கட்டுமானக் கோயில்கள் என ஒருவித பரிணாம வளர்ச்சியை பல்லவர்கால கலையில் காண்கிறோம்.
  • பல்லவர்கால கோயில் கட்டிடக் கலையில் நான்கு நிலைகளைக் காணலாம்.
  • முதலாம் மகேந்திரவர்மன் குடைவரைக் கோயில்களை அறிமுகப்படுத்தினார். இத்தகைய குடைவரைக் கோயில்களை தமிழ்நாட்டில் மண்டகப்பட்டு,  மகேந்திரவாடி, மாமண்டூர், தளவானூர், திருச்சிராப்பள்ளி, வல்லம், சீயமங்கலம்,  திருக்கழுக்குன்றம் போன்ற இடங்களில் காணலாம்.
  • பல்லவக் கட்டிடக் கலையின் இரண்டாவது நிலையில், மாமல்ல புரத்தில் வடிக்கப்பட்டுள்ள ஒற்றைக் கல் ரதங்களையும், மண்டபங்களையும் கூறலாம்.
  • இந்த அற்புதமான கலைச் சின்னங்களை உருவாக்கிய பெருமை முதலாம் நரசிம்மவர்மனையே சாரும்.
  • பஞ்சபாண்டவ ரதங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து வௌவேறு கோயில் அமைப்புகளைக் கொண்ட ரதங்கள் அனைவரையும் கவரக் கூடியவை. மண்டபங்களின் சுவர்களில் அழகான சிற்பங்கள் செதுக்கோவியங்களாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டங்களில் சிறப்பானவை மகிஷாசுர மர்த்தினி மண்டபம், திருமூர்த்தி மண்டபம், வராஹ மண்டபம்.
  • அடுத்தப்படியாக கட்டுமானக் கோயில்கள் எழுப்பப்பட்டன.
  • தொடக்கத்தில் இவை மணங் பாறைக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டன. காஞ்சி கைலாசநாதர் ஆலயம், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் தொடக்கால கட்டுமானக் கோயில்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.
  • பல்லவர் கலையின் சிறப்புக்கு சிகரமாகக் கருதப்படுவது காஞ்சி கைலாசநாதர் ஆலயமாகும்.
  • பல்லவர்காலக் கட்டிடக் கலையின் இறுதி நிலைக்கு எடுத்துக் காட்டாக பிற்காலப் பல்லவர்கள் அமைத்த கட்டுமானக் கோயில்களைக் கூறலாம். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்த பெருமாள் ஆலயம்.
  • முக்தீஸ்வரர் ஆலயம், மதங்கீஸ்வரர் ஆலயம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
  • சிற்பக் கலை வளர்ச்சிக்கும் பல்லவர்கள் அருந்தொண்டு ஆற்றியுள்ளனர்.
  • கோயில்களில் காணப்படும் அழகான சிற்பங்கள் தவிர, மாமல்லப்புரத்தில் வடிக்கப்பட்டுள்ள ‘திறந்த வெளிக் கலைக் கூடம்’ அற்புதமான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
  • கங்கை வீழ்தல் அல்லது அர்ச்சுனன் தவம் என்ற அற்புத சிற்பக் காட்சி கல்லில் வடிக்கப்பட்ட ஓவியங்கள் என்று புகழப்படுகின்றன.
  • இச்சிற்பங்கள் வெளிப்படுத்தும் நுண்ணிய கருத்துக்கள் வியப்புக்குரியவை. பேன் பார்க்கும் குரங்கு, யானைச் சிற்பங்கள், தவமியற்றும் பூனை போன்றவை சிற்பியின் திறமைக்கு சான்று பகர்கின்றன.

நுண்கலைகள்

  • இசை, நடனம், ஓவியம் போன்ற நுண்கலைகளையும் பல்லவர்கள் ஆதரித்தனர். மாமண்டூர் கல்வெட்டு இசைப் பண் குறித்து விளக்குகிறது.
  • குடுமியான் மலை இசைக்கல்வெட்டு இசைப் பண்களையும், இசைக் கருவிகளையும் பற்றி குறிப்பிடுகிறது. ஆழ்வார்கள், நாயன்மார்கள் இயற்றிய பாடல்கள் பண்ணோடு இசைக்கப்படுவதற்காகவே உருவாக்கப்பட்டன.
  • நடனமும், நாடகமும் இக்காலத்தில் வளர்ச்சியடைந்தன. இக்கால சிற்பங்கள் நடனக் கலையின் பல்வேறு வடிவங்களை வெளிப்படுத்துகின்றன.
  • சித்தன்னவாசல் ஓவியங்கள் பல்லவர்காலத்தைச் சேர்ந்தவை. முதலாம் மகேந்திரவர்மன் காலத்தில் தட்சிண சித்திரம் என்ற ஒவியக்கலை விளக்கநூல் தொகுக்கப்பட்டது.
  • அவனுக்கு சித்திரக்காரப்புலி என்ற விருதுப் பெயரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!