ஹர்ஷ வர்த்தனர் (கி.பி. 600 – 647)

0
ஹர்ஷ வர்த்தனர்

குப்தப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வடஇந்தியாவில் அரசியல் குழப்பம் நிலவியது. கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் வடஇந்தியாவில் ஹர்ஷ வர்த்தனர் தனது பேரரசை உருவாக்கினார்.ஹர்ஷரது காலத்தைப் பற்றியும் அவரது வரலாற்றையும் அறிந்துகொள்ள உதவும் முக்கிய சான்றுகள் பாணர் எழுதிய ஹர்ஷசரிதமும், யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளுமாகும். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த சீனப் பயணி யுவான் சுவாங். இவ்விரண்டு சான்றுகளைத் தவிர, ஹர்ஷர் எமுதியுள்ள ரத்னாவளி, நாகநந்தம், பிரிய தர்சிகா என்ற நாடகங்களும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன. மதுபென் பட்டயமும், சோன்பட் கல்வெட்டும் ஹர்ஷரது காலக்கணிப்புக்கு உதவுகின்றன. பான்ஸ்கரா கல்வெட்டில் ஹர்ஷரது கையொப்பம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷரின் இளமைக்காலம்

  • ஹர்ஷரது குலத்தை நிறுவியவர் புஷ்யபூதி. குப்தர்களின் படைத் தலைவர்களாக புஷ்யபூதிகள் பணியாற்றி வந்தனர்.
  • அவர்கள் தங்களை வர்த்தனர்கள் என்றும் அழைத்துக் கொண்டனர். ஹீணர்களின் படையெடுப்புக்குப்பின் தங்கள் சுதந்திரத்தை அவர்கள் அறிவித்துக் கொண்டனர்.
  • புஷ்யபூதி வம்சத்தின் முதல் முக்கிய அரசர் பிரபாகர வர்த்தனர். டெல்லிக்கு வடக்கேயிருந்த தானேஷ்வரம் அவரது தலைநகரம்.
  • அவர் மகாராஜாதிராஜா, பரமபட்டராகா போன்ற விருதுப் பெயர்களையும் சூட்டிக் கொண்டார்.
  • பிரபாகா வர்த்தனரின் மறைவுக்குப்பின் அவரது மூத்த புதல்வர் ராஜ்ய வர்த்தனர் ஆட்சிக்கு வந்தார். தொடக்கத்திலிருந்தே அவர் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருந்தது.
  • அவரது தங்கை ராஜ்யஸ்ரீ கிரஹவர்ம மௌகாரியை மணந்திருந்தார். மாளவத்தின் அரசன் தேவகுப்தன், வங்காள ஆட்சியாளர் சசாங்கனின் துணையோடு கிரஹவர்மனைக் கொன்றுவிட்டான்.
  • இச்செய்தியை கேள்விப்பட்ட ராஜ்யவர்த்தனர் மாளவ அரசனுக்கு எதிராகப் படையெடுத்து அவனது படைகளை அழித்தான்.
  • ஆனால், தலைநகர் திரும்புவதற்கு முன்பேயே அவர் சசாங்கனின் சதியால் கொல்லப்பட்டார். இதற்கிடையில் கணவனையிழந்த ராஜ்யஸ்ரீ காடுகளுக்கு தப்பிச் சென்றார்.
  • தானேஷ்வரத்தில் ஹர்ஜவர்த்தனர் ஆட்சிப் பொறுப்பேற்றார். தமது தங்கையைக் காபாற்றுவது அவரது முதல் கடமையாக இருந்தது.
  • பின்னர் தனது தங்கையின் கணவரைக் கொன்றவர்களையும் பழிவாங்க வேண்டியிருந்தது. தீக்குளிக்கவிருந்த தங்கையை ஹர்ஷர் முதலில் மீட்டார்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

ஹர்ஷரின் படையெடுப்புகள்

  • தனது முதலாவது படையெடுப்பில், ஹர்ஷர் சசாங்கனை கனோஜிலிருந்து விரட்டியடித்தார். கனோஜ் நகரை தனது புதிய தலைநகராக அறிவித்தார்.
  • இதன்மூலம் ஹர்ஷர் வட இந்தியாவின் வலிமைமிக்க தலைவரானார். அடுத்து, வாலாபியைச் சேர்ந்த இரண்டாம் துருவசேனருக்கு எதிராகப் போரிட்டு அவரைத் தோற்கடித்தார்.
  • இரண்டாம் துருவசேனர் கப்பம்கட்டும் சிற்றரசரானார்.
  • மேலைச்சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசிக்கு எதிராக மேற்கொண்ட படையெடுப்பே ஹர்ஷரின் முக்கிய போர் நடவடிக்கையாகும்.
  • யுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளும், இரண்டாம் புலிகேசியின் கல்வெட்டுகளும் இப்படையெடுப்பு பற்றி விவரமாகக் கூறுகின்றன.
  • நர்மதை நதிக்குத் தெற்கே தனது அரசை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆர்வத்துடனேயே ஹர்ஷர் சாளுக்கிய ஆட்சியாளருக்கெதிராக போர் தொடுத்தார்.
  • ஆனால், இரண்டாம் புலிகேசியின் ஐஹோலே கல்வெட்டுப்படி ஹர்ஷரை புலிகேசி முறியடித்தார் என அறிகிறோம்.
  • இந்த வெற்றிக்குப் பிறகு புலிகேசி பரமேஸ்வரன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டான. யுவான்சுவாங்கின் பயணக் குறிப்புகளும் புலிகேசியின் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன.
  • சுதந்திர அரசாக இருந்த சிந்துப்பகுதி மீது ஹர்ஷர் தமது அடுத்த படையெடுப்பை மேற்கொண்டார். ஆனால், அவரது சிந்துப் படையெடுப்பின் வெற்றி குறித்து சரியான தகவல்கள் இல்லை.
  • நேபாயம் ஹர்ஷரிpன் மேலாண்மையை ஏற்றுக் கொண்டது. காஷ்மீரும் அவரது கட்டுப்பாட்டில் இருந்தது. காஷ்மீர் ஆட்சியாளர் தவறாது கப்பம் செலுத்தி வந்தார்.
  • அஸ்ஸாம ஆட்சியாளரான பாஸ்கரரவிவர்மனுடன் ஹர்ஷர் இணக்கமான உறவைக் கொண்டிருந்தார். கலிங்கத்தின்மீது படையெடுத்து வெற்றி கொண்டதே ஹர்ஷரது இறுதியான போர் நடவடிக்கையாகும்.
  • தமது படையெடுப்புகளின் பயனாக, ஹர்ஷர் வடஇந்தியா முழுவதையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
  • தற்காலத்திய ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரப் பிரதேசம், பீகார், ஒரிசா ஆகிய பகுதிகள் அவரது நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன.
  • ஆனால், அவரது ஆதிக்க எல்லை இன்னும் விரிவடைந்திருந்தது.
  • எல்லைப்புற அரசுகளான காஷ்மீர், சிந்து, வாலாபி, காமரூபம் ஆகியன அவரது இறையாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.

ஹர்ஷரும் புத்த சமயமும்

  • தொடக்கத்தில் சிறந்த சிவபக்தராக விளங்கிய ஹர்ஷர், பின்னர் ஹீனயான புத்த சமயத்தை பின்பற்றத் தொடங்கினார்.
  • யுவான் சுவாங் அவரை மகாயான புத்த சமயத்திற்கு மாற்றினார். தனது அரசுக்;குள் புலால் உணவை ஹர்ஷர் தடைசெய்தார்.
  • உயிர்வதை செய்வோரை அவர் தண்டித்தார். தனது அரசு முழுவதும் ஆயிரக்கணக்கான ஸ்தூபிகளையும் பயணிகள் தங்குமிடங்களையும் அவர் அமைத்தார்.
  • புத்தசமய புனித இடங்களில் மடாலயங்களை அவர் நிறுவினார்.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து சமயங்களின் பிரதிநிதிகளையும் கூட்டி அவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்து மரியாதை செய்தார்.
  • புத்தசமய துறவிகளை ஒன்றாக அமரச்செய்து, புத்தசமயக் கோட்பாடுகளை விவாதத்திற்கு உட்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்ளும்படி செய்தார்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

கனோஜ் பேரசை

  • ஹர்ஷர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சீனப் பயணி யுவான் சுவாங்கை கௌரவிப்பதற்காக கனோஜ் நகரில் ஒரு சமயப் பேரரவையைக் கூட்டினார்.
  • அதற்கு, அனைத்து சமயப் பிரிவுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்தார். இருபது அரசர்களும், நாளந்தா பல்கலைகழகத்திலிருந்து ஆயிரம் அறிஞர்களும், மூன்றாயிரம் ஹீனயான மகாயான பிரிவினரும், மூன்றாயிரம் சமண மற்றும் பிராமண சமயத்தவரும் பேரவைக்கு வந்திருந்தனர்.
  • தொடர்ந்து இருபத்திமூன்று நாட்கள் பேரவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  • மகாயான கோட்பாட்டினன் மதிப்புகளையும், மற்ற கோட்பாடுகளைவிட அது உயர்ந்;தது என்பதையும் யுவான்சுவாங் விளக்கிக் கூறினார். இருப்பினும், வன்முறைகளும் பந்தலுக்கு தீவைத்த நிகழ்ச்சிகளும் பேரவை நடவடிக்கைகளை மாசுபடுத்தின.
  • ஹர்ஷரது உயிருக்கே கூட ஆபத்து ஏற்பட்டது. ஆனால், விரைவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
  • குற்றவாளிகள் தண்டிகப்பட்டனர். பேரவையின் இறுதி நாளன்று யுவான் சுவாங்கிற்கு விலை மதிப்புமிக்க பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அலகாபாத் மாநாடு

  • பிரயாகை என்றழைக்கப்படும் அலகாபாத்தில் நடைபெற்;ற மாநாடு பற்றி யுவான் சுவாங் தனது பயணக் குறிப்புகளில் விவரித்துள்ளார்.
  • ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஹர்ஷர் கூட்டும் மாநாடுகளில் ஒன்றாகவே அது இருத்தல் வேண்டும். அனைத்து சமயப்; பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கும் ஹர்ஷர் தனது ஏராளமான செல்வத்தை ஹர்ஷர் வாரி வழங்கினார்.
  • கருவூலம் காலியான நிலையில் தனது உடைகள்  அணிகலன்கள் அனைத்தையும் கூட ஹர்சா தானமாக வழங்கினார்  என்று யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார்.
  • ஹர்ஷர்மீது யுவான் சுவாங் கொண்டிருந்த மதிப்பே இத்தகைய புகழுரைக்கு காரணம் என்று கூறலாம்.

ஹர்ஷரது ஆட்சிமுறை

  • குப்தர்களின்; ஆட்சிமுறையை ஒட்டியே ஹர்ஷரது ஆட்சிமுறையும் அமைந்திருந்தது. அதுபற்றிய விவரங்களை யுவான் சுவாங் கூறியுள்ளார்.
  • அரசர் நியாய உணர்வுடனும், நேரம் தவறாமலும் தமது பணிகளை மேற்கொண்டார். தனது ஆட்சிப் பகுதியில் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்து நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்.
  • அவருக்கு ஓய்வுநேரம் மிகவும் அரிதாகவே கிடைத்தது. கட்டாய ஊழியம் காணப்படவில்லை. வரிப்பளுவும் இல்லை.
  • விளைச்சலில் ஆறில் ஒரு பங்கே வரியாக வசூலிக்கப்பட்டது. மௌரியர் காலத்தைப் போல குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
  • விசாரணைகள் காட்டு மிராண்டித்தனமாகவும், மூட நம்பிக்கையானதாகவும் இருந்தன என்று யுவான் சுவாங் குறை கூறுகிறார்.
  • காலாட்படை, குதிரைப்படை, தேர்ப்படை, யானைப்படை என்ற நான்கு வகைப்படைகளும் ஹர்ஷரது ராணுவத்தில் இடம் பெற்றிருந்தன.
  • ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குதிரைகளும், அறுபதாயிரம் யானைகளும் படையில் அங்கம் வகித்தன.
  • மௌரியப் படையின் எண்ணிக்கையைவிட இது அதிகமே! ஹர்ஷரது ஆட்சிமுறையின் சிறப்புக்கூறு அரசின் ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்ட முறையே ஆகும்.
  • ஹர்ஷரது ஆவணக் காப்பாகம் ‘நிலோபிது’ என்று அழைக்கப்பட்டது. சிறப்பு அதிகாரிகளின் கீழ் அது பராமரிக்கப்பட்டது.
  • அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டன.

ஹர்ஷரது ஆட்சியில் சமூக, பொருளாதார நிலைமைகள்

  • அக்காலத்தில் சமூக நிலைமை பற்றி பாணர், யுவான் சுவாங்; இருவருமே விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர். பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு சாதிப்பிரிவுகள் வழக்கிலிருந்தன.
  • சமூகத்தில் சலுகைபெற்று விளங்கியவர்கள் பிராமணர்கள். அவர்களுக்கு அரசால் நிலங்கள் மான்யங்களாக வழங்கப்பட்டன.
  • ஷத்திரியர்கள் ஆளும்வர்க்கத்தினர். வைசியர்கள் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுப்பட்டிருந்தனர். சூத்திரர்கள் வேளாண்மைத் தொழிலை மேற்கொண்டதாக யுவான்சுவாங் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு கிளை சாதிகளும் இருந்தன.
  • மகளிர் நிலை திருப்திகரமாக இல்லை தங்களது கணவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கும் சுயம்வரமுறை மறைந்து விட்டிருந்தது.
  • வரதட்சணைமுறை பரவலாக பின்பற்றப்பட்டது. ‘சதி’ என்ற உடன்கட்டையேறும் வழக்கமும் காணப்பட்டது. மூன்றுவகை சவ அடக்கம் பற்றி யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். எரித்தல், புதைத்தல் மற்றும் காட்டில் எறிந்துவிடுதல்.
  • ஹர்ஷரது ஆட்சிக் காலத்தில் வாணிபம் சீர்குலைந்தது. வணிக மையங்களும், நாணயங்களும், வாணிகக் குழுக்களும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தமை இதற்கு சான்று.
  • கைத்தொழிலும், வேளாண் நடவடிக்;கைகளும்கூட சுறுசுறுப்பிழந்து காணப்பட்டன.
  • பொருட்களுக்கு அதிக தேவை இல்லாமற்போகவே, உற்பத்தியும் குறைவாகவே இருந்தது. இதனால் தன்;னிறைவுபெற்ற கிராமியப் பொருளாதாரம் எழுச்சி பெற்றது.
  • குப்தர் காலத்துடன் ஒப்;பிடும்போது ஹர்ஷர் காலத்திய பொருளாதார நிலை வளமைகுன்றியே இருந்தது.

பண்பாட்டு வளர்ச்சி

  • ஹர்ஷர் காலத்திய கலை மற்றும் கட்டிடக்கலை பெரிதும் குப்தர் காலத்தை ஒட்டியே காணப்பட்டது.
  • நாளந்தாவில் ஹர்ஷர் கட்டிய அடுக்குமாடி மடாலயம் பற்றி யுவான் சுவாங் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். எட்டு அடி உயரமுள்ள செம்பாலான புத்தர் சிலை பற்றியும் அவர் கூறியுள்ளார்.
  • சிறந்த கட்டிட வேலைப்பாடுகள் கொண்ட சிர்பூர் லட்சுமணர் கோயில் ஹர்ஷர் காலத்தைச் சேர்ந்ததாகும்.
  • ஹர்ஷர் கற்றோரை ஆதரித்த பண்பாளர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பாணர் ஹர்ஷரது அவையை அலங்கரித்தார்.
  • ஹர்ஷசரிதம் தவிர, காதம்பரி என்ற நூலையும் அவர் எழுதியுள்ளார். அவரது அவையிலிருந்த மற்ற அறிஞர்கள் மதங்க திவாகரர் மற்றும் பார்த்திரிஹரி.
  • பார்த்திரஹரி ஒரு கவிஞர், தத்துவஞானி மற்றும் இலக்கணவல்லுனர். ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகநந்தம் என்ற மூன்று நாடகங்களை ஹர்ஷர் எழுதியுள்ளார்.
  • நாளந்தா பல்கலைகழகத்திற்கும் தாரளமாக நன் கொடைகளையும் அவர் வாரி வழங்கினார். அவரது ஆட்சிக்காலத்தில் நாளந்தா பல்கலைகழகம் உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகக் கருதப்பட்டது.
  • நாளந்தா பல்கலைகழகத்தில் யுவான் சுவாங் தங்கி கல்வி பயின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளந்தா பல்கலைக் கழகம்

  • பண்டைக் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப் பயணிகள் பல்வேறு கல்வி நிறுவனங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
  • அவற்றுள் வாலாபியில் இருந்த ஹீனயான பல்கலைக்கழகமும், நாளந்தாவிலிருந்த மகாயான பல்கலைக் கழகமும் குறிப்பிடத்தக்கவை.
  • நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி யுவான் சுவாங் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார். ‘நாளந்தா’ என்ற சொல்லுக்கு ‘அறிவை அளிப்பவர்’ என்று பொருள்.
  • குப்தர் காலத்தில் முதலாம் குமார குப்தரால் இது நிறுவப்பட்டது. அவருக்குப் பின்வந்த ஆட்சியாளர்களும், ஹர்ஷரும் அதனை ஆதரித்தனர்.
  • பல்கலைக்கழகப் பேராரசிரியர்கள் பண்டிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். திங்கநாகர், தர்மபாலர், ஸ்திரமதி, சிலபத்திரர் போன்றவர்கள் ஒரு சில புகழ்மிக்க பண்டிதர்கள்.
  • காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர் நாளந்தா பல்கலைகழகத்தின் தலைவராகவும் இருந்துள்ளார்.
  • மாணவர்கள் தங்கிப் படிக்கும் உள்ளிருப்பு பல்கலைக்கழகமான நாளந்தா விளங்கியது. உணவும், இருப்பிடமும் இலவசமாக வழங்கப்பட்டன.
  • நூறு முதல் இருநூறு கிராமங்களிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு அது பராமரிக்கப்பட்டது.
  • அது ஒரு மகாயான பல்கலைக்கழகம் என்ற போதிலும், வேதங்கள், ஹீனயானக் கோட்பாடு, சாங்கிய மற்றும் யோக தத்துவங்கள் போன்றவையும் போதிக்கப்பட்டன.
  • இதை தவிர, பொதுவான பாடங்களான, தர்க்கம், இலக்கணம், வானஇயல், மருத்துவம், கலை போன்றவையும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தன.
  • நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கப்பட்டனர். நுழைவுத் தேர்வு மிகவும் கடினமானதாக இருந்தது.
  • மொத்த மாணாக்கரில் முப்பது சதவிகிதம்பேரே அதில் வெற்றி பெற முடிந்தது. விரிவுரைகளைத் தவிர, விவாதங்களும் நடைபெற்றன. வடமொழியே பயிற்றுமொழியாக விளங்கியது.
  • நாளந்தா பல்கலைகழகத்தின் இடிபாடுகள் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • சீனப் பயணிகள் விவரித்துள்ள அந்த நிறுவனத்தின் பொலிவினை அவை உறுதிப்படுத்துவதாக உள்ளன.
  • ஏராளமான வகுப்பறைகளும், மாணவர் விடுதியும் இருந்துள்ளன. சீனப் பயணியான இட்சிங் என்பவரது கூற்றுப்படி அங்கு மூன்றாயிரம் மாணவர் தங்கிப்படித்தனர்.
  • கோளரங்கம் மற்றும் மிகப்பெரிய நூலகம் மூன்று கட்டிடங்களில் செயல்பட்டன.
  • உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அங்கு கல்வி பயில்வதற்குத் திரண்டனர் என்பதிலிருந்தே அதன் பெருமை விளங்குகிறது.
  • உயர்கல்வி நிறுவனமாகவும் ஆய்வு நிறுவனமாகவும் அது விளங்கியது.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!