குப்தப் பேரரசு

0

குப்தப் பேரரசு

குப்தர் கால வரலாற்றை எழுவதற்கு ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. இலக்கியம், பொறிப்புகள், நாணயங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. குப்த அரசர்களின் பரம்பரை குறித்து புராணங்கள் குறிப்பிடுகின்றன. குப்தர்களின் எழுச்சி பற்றி விசாகதத்தர் எழுதிய சமகால நூல்களான ‘தேவிசந்திரகுப்தம்’, ‘முத்ராராட்சசம்’ இரண்டும் கூறுகின்றன. இரண்டாம் சந்திரகுப்தரின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீனப்பயணி பாஹியான் விட்டுச் சென்றுள்ள குறிப்புகள் குப்தப் பேரரசின் சமூக, பொருளாதார, சமய நிலைமைகளை எடுத்துக் கூறுகிறது.இத்தகைய இலக்கிய சான்றுகள் தவிர, மெஹ்ருளி இரும்புத்தூண் கல்வெட்டு, அலகாபாத் கற்றூண் கல்வெட்டு போன்ற கல்வெட்டு போன்ற கல்வெட்டுகளும் குப்த வரலாற்றுக்கு சான்றுகளாக உள்ளன. மெஹ்ருளி கல்வெட்டு முதலாம் சந்திரகுப்தனின் சாதனைகளைக் குறிப்பிடுகிறது. சமுத்திர குப்தனின் ஆட்சியைப் பற்றி அறிந்துகொள்ள உதவும் முக்கிய சான்றாக விளங்குவது அலகாபாத் கற்றூண் கல்வெட்டு.அவரது ஆளுமையும் சாதனைகளும் அக்கல்வெட்டில் குறிக்கப்ட்டுள்ளன. அசோகர் நிறுவிய கல்தூணில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. நாகரி வரிவடிவத்தில் வடமொழியில் இது எழுதப்பட்டுள்ளது. ஹரிசேனர் தொகுத்த இக்கல்வெட்டில் 33 வரிகள் காணப்படுகின்றன. சமுத்திரகுப்தன் அரியணையேறிய சூழ்நிலை, வட இந்தியா மற்றும் தக்காணத்தில் அவர் மேற்கொண்ட படையெடுப்புகள், சமகால ஆட்சியாளர்களுடன் அவர் கொண்டிருந்த உறவுகள், ஒரு கவிஞராகவும் அறிஞராகவும் அவரது சாதனைகள் போன்றவற்றை இக்கல்வெட்டு விவரிக்கிறது.குப்த அரசர்கள் வெளியிட்ட நாணயங்களில் உள்ள உருவங்களும் சொற்றொடர்களும் குப்த மன்னர்களின் பட்டங்கள், அவர்கள் செய்த வேள்விகள் போன்ற விவரங்களைத் தருகின்றன.

முதலாம் சந்திரகுப்தர் (கி.பி. 320 – 330)

  • குப்த மரபை தோற்றுவித்தவர் ஸ்ரீகுப்தர். அடுத்து பதவிக்கு வந்தவர் கடாத்கஜர்.
  • இவர்கள் இருவரும் ‘மகாராஜா’ என்று அழைக்கப்பட்டனர். இவர்களது ஆட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை.
  • அடுத்த ஆட்சியாளர் முதலாம் சந்திரகுப்தர். மகாராஜாதிராஜா அல்லது அரசர்களுக்கு அரசன் என்று முதலில் அமைக்கப்பட்டவர்.
  • அவரது பரந்த போர்வெற்றிகளை இந்த விருது வெளிப்படுத்துவதாக உள்ளது.
  • லிச்சாவிகளுடன் மணஉறவு கொண்டதன்மூலம் அவர் தனது வலிமையைப் பெருக்கிக் கொண்டார். அக்குடும்பத்தைச் சேர்ந்த குமாரதேவி என்ற இளவரசியை அவர் மணந்துகொண்டார்.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
  • இதனால் குப்தர்களின் வலிமையும் புகழும் அதிகரித்தன. மெஹருளி இரும்புத் தூண் கல்வெட்டு அவரது பரவலான போர் வெற்றிகள் பற்றி குறிப்பிடுகிறது.
  • கி.பி. 320 ஆம் ஆண்டு தொடங்கம் குப்த சகாப்தத்தை நிறுவியவர் முதலாம் சந்திரகுப்தர் என்ற கருத்தும் நிலவுகிறது

சமுத்திரகுப்தர் (கி.பி. 330 – 380)

  • குப்த மரபிலேயே மிகச் சிறந்த அரசராக விளங்கியவர் சமுத்திரகுப்தர். அவரது ஆட்சிபற்றி அலகாபாத் கல்தூண் கல்வெட்டு விவரமாகக்; குறிப்பிடுகிறது.
  • அவரது படையெடுப்பின் மூன்று நிலைகள் இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளன.
    1. வடஇந்திய ஆட்சியாளருக்கு எதிராக மேற்கொண்டவை
    2. தென்னிந்திய ஆட்சியாளருக்கு எதிரான புகழ்மிக்க “தட்சிணபாதா” படையெடுப்பு
    3. வட இந்திய ஆட்சியாளர்களுக்கு எதிரான இரண்டாவது படையெடுப்பு

  • சமுத்திரகுப்தர் தமது முதலாவது படையெடுப்;பில் அச்சுதன், நாகபாணன் இருவரையும் முறியடித்தார். அச்சுதன் பெரும்பாலும் ஒரு நாக மரபு அரசராக இருத்தல் வேண்டும்.
  • மேலை கங்கைச் சமவெளிப்பகுதியை ஆட்சி புரிந்துவந்த கோடா குடும்பத்தை சேர்ந்தவர் நாகபாணர். இவ்விரு அரசர்களும் முறியடிக்கப்பட்டு அவர்களது நாடுகளை சமுத்திரகுப்தர் இணைத்துக் கொண்டார்.
  • இந்த குறுகிய கால படையெடுப்பினால் சமுத்திரகுப்தர் மேலை கங்கைச் சமவெளி முழுவதையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தார்.
  • பின்னர் சமுத்திரகுப்தர் தென்னிந்திய அரசர்களுக்கெதிராக படைநடத்திச் சென்றார். அவரது தென்னிந்தியப் படையெடுப்பின் போது பன்னிரண்டு ஆட்சியாளர்களை முறியடித்ததாக அலகாபாத் கல்தூண் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • அவர்களது பெயர்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன – கோசல நாட்டு மகேந்திரன், மகாகாந்தாரத்தின் வியாகராஜன், கேரளாவின் மந்தராஜன், பிஸ்தபுரத்து மகேந்திரகிரி, கோட்டுராவைச் சேர்ந்த சுவாமி தத்தன் இரெண்ட பள்ளாவின்தாமனன், காஞ்சியைச் சேர்ந்த விஷ்ணுகோபன், அவமுக்த நாட்டு நீலராஜன், வெங்கிநாட்டு ஹஸ்திவர்மன் பலாக்காவின் உக்ரசேனன், தேவராஷ்டிரத்து குபேரன் மற்றும் குஸ்தலபுரத்து தனஞ்சயன்.
  • தென்னிந்தியாவைப் பொறுத்தவரை சமுத்திரகுப்தரின் கொள்கை வேறுபட்டிருந்தது. அவர் தென்னிந்திய அரசர்களை அழித்து அப்பகுதிகளை பேரரசுடன் இணைத்துக் கொள்ள வில்லை.
  • மாறாக, அவர்களை முறியடித்த பின்னர் மீண்டும் ஆட்சிப் பகுதிகளை அவரவரிடமே ஒப்படைத்தார். தனது மேலாண்மையை ஏற்றுக் கொள்ளு மாறு அவர் வலியுறுத்தினார்.
  • சமுத்திரகுப்தரின் மூன்றாவது படையெடுப்பு எஞ்சியிருந்த வடஇந்திய அரசர்களை முறியடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • ஒன்பது அரசர்களுக்கு எதிராக போரிட்ட அவர் அவர்களை அழித்து ஆட்சிப்பகுதிகளை பேரரசோடு இணைத்துக் கொண்டார்.
  • அவர்களது பெயர்களும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன ருத்ரதேவன், மதிலன், நாகதத்தன், சந்திரவர்மன், கணபதிநாகன், நாகசேனன், அச்சுதன், நந்தின், பாலவர்மன்.
  • இவர்களில் பெரும்பாலானவர்கள் நாகர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். வட இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் ஆட்சிபுரிந்து வந்தவர்கள்

சமுத்திரகுப்தரின் பேரரசுப்பரப்பு

  • இந்த போர் வெற்றிகளுக்குப் பிறகு மேலை கங்கைச் சமவெளி தற்கால உத்திரப் பிரதேசத்தின் பெரும்பகுதி மத்திய இந்தியாவின் ஒரு பகுதி, வங்காளத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய பகுதிகளும் சமுத்திரகுப்தரின் ஆட்சிக்குட்பட்டது.
  • இப்பகுதிகளில் அவரது நேரடி நிர்வாகம் நடைபெற்றது. தெற்கில் கப்பம் செலுத்தும் அரசுகள் இருந்தன. மேற்கிலிருந்த சாக மற்றும் குஷான சிற்றரசுகளும் அவரது ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டே இருந்தன.
  • தக்காணத்தின் கிழக்குக் கடற்கரையிலிருந்த அரசுகளும், பல்லவ அரசு உட்பட, அவரது மேலாண்மையை ஏற்றுக் கொண்டிருந்தன.

சமுத்திரகுப்தர் பற்றிய மதிப்பீடு

  • வரலாற்றின் ஏடுகளில் சமுத்திரகுப்தரின் போர் வெற்றிகள் குறிப்பிடத்தக்கவையாகும். தனிப்பட்ட சாதனைகளிலும் அவர் புகழ்மிக்கவராகவே திகழ்ந்தார்.
  • எதிரிகளை அவர் பெருந்தன்மையுடன நடத்தியமை, அவரது கூரிய அறிவு, புலமை, இசையில் மேதமை போன்றவற்றை அலகாபாத் கல்தூண் கல்வெட்டு விவரமாகக் குறிப்பிடுகிறது.
  • பாடல்களை இயற்றும் திறனைப் பெற்றிருந்த அவரை ‘கவிராஜன்’ என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவரது நாணயங்களில் வீணையுடன் அமர்ந்திருக்கும் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது.
  • இசையில் அவருக்கு இருந்த ஆர்வத்தையும் திறமையையும் இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. ஹரிசேனர் உள்ளிட்ட பல்வேறு புலவர்களையும், அறிஞர்களையும் அவர் ஆதரித்தார்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
  • தனது மரபுக்கே உரிய பண்பான வடமொழியைப் போற்றி ஆதரிக்கும் பண்பையும் அவர் பெற்றிருந்தார். சிறந்த வைணவராகத் திகழ்ந்த அவர் பிற சமயப் பிரிவுகளையும் சகிப்புத்தன்மையுடன் நடத்தினார்.
  • புத்த சமயத்தின்மீது பற்றுக்; கொண்டிருந்த அவர் புகழ்மிக்க புத்தசமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்தார்.

இரண்டாம் சந்திரகுப்தர் (கி.பி. 380 – 415)

  • சமுத்திரகுப்தருக்குப்பின் அவரது புதல்வர் இரண்டாம் சந்திரகுப்த விக்ரமாதித்யர் ஆட்சிக்கு வந்தார்.
  • ஆனால் ஒருசில வரலாற்று அறிஞர்கள் சமுத்திரகுப்தருக்கு அடுத்து ராமகுப்தர் ஆட்சிக்கு வந்ததாகக் கூறுகின்றன.
  • இதற்கு வலுவான சான்றுகள் இல்லை. தனது தந்தையைப் போல படைவலிமையும் ஆற்றலும் கொண்டிருந்த இரண்டாம் சந்திரகுப்தர் தனது வெற்றிகள்மூலம் குப்தப் பேரரசை மேலும் விரிவுபடுத்தினார்.
  • அரசியல் வெல்திறனும் போர் ஆற்றலும் ஒருங்கே அமையப்பெற்ற அவரால் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தது.
  • திருமண உறவுகள் மூலம் தனது அரசியல் வலிமையை அவர் பெருக்கிக் கொண்டார். மத்திய இந்தியாவின் நாக இளவரசி குபேரநாகா என்பவரை அவர் மணந்து கொண்டார்.
  • தனது புதல்வி பிரபாவதியை வாகாடக மரபு அரசன் இரண்டாம் ருத்ரசேனருக்கு மணமுடித்துக் கொடுத்தார்.
  • தக்காணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் வாகடர்கள் ஆட்சிபுரிந்தனர் என்ற அடிப்படையில் இந்த மணஉறவு அரசியல் முக்கியத்துவம் பெற்றுவிளங்கியது.
  • இரண்டாம் சந்திரகுப்தர் மேற்கு இந்தியாவில் சாகர்களுக்கு எதிராக படையெடுத்துச் சென்றபோது இந்த மண உறவும் வாகாடர்களின் நட்பும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.

மேற்கு இந்தியாவை வெற்றிகொள்ளல்

  • மேற்கு இந்தியாவிலிருந்து சாக சத்திரப்புகளை எதிர்த்துப் போரிட்டு பெற்ற வெற்றியே இரண்டாம் சந்திரகுப்தரின் போர்த்துறை சாதனைகளில் மகத்தானதாகும்.
  • சாக சத்திரப்பு மரபின் கடைசி ஆட்சியாளரான மூன்றாம் ருத்ரசிம்மன் இப்போரில் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.
  • மேற்கு மாளவம், கத்தியவார் தீபகற்பம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அவரது ஆட்சிப் பகுதிகள் குப்தப் பேரரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டன.
  • இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு இரண்டாம் சந்திரகுப்தர் அசுவமேத யாகம் நடத்தியதோடு சாகர்களை அழித்தவர்’ என்று பொருள் கொண்ட ‘சாகரி’ என்ற விருதுப் பெயரையும் சூட்டிக்கொண்டார்.
  • தம்மை ‘விக்கிரமாதித்தன்’ என்றும் புகழ்படக் கூறிக்கொண்டார்.
  • மேற்கு இந்தியாவை வெற்றிகொண்டதின் விளைவாக பேரரசின் மேற்கு எல்லை அராபியக் கடல்வரை நீண்டது.
  • இதனால் புரோச், சோபரா, காம்பே உள்ளிட்ட துறைமுகங்கள் குப்தப் பேரரசின் எல்லைக்குள் வந்தன.
  • மேலை நாடுகளுடானான அயல்நாட்டு வர்த்தகம் குப்தப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. உஜ்ஜயினி ஒரு முக்கிய வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக வளர்ச்சி பெற்றது, விரைவில் அது குப்தர்களின் மாற்றுத் தலைநகராகவும் விளங்கியது.
  • வங்காளத்தில் உற்பத்தியான அழகிய பருத்தி ஆடைகள், பீகாரின் அவுரிச் சாயம், பனாரஸ் பட்டு, இமாலய மலைகளின் நறுமணப் பொருட்கள், சந்தனம், தென்னிந்திய வாசனைத் திரவியங்கள் போன்றவை இந்த துறைமுகங்களுக்கு எவ்வித தடையுமின்றி கொண்டு வரப்பட்டன.
  • இந்தியப் பொருட்களை வாங்குவதற்காக மேற்கத்திய வணிகர்கள் ரோமனிய தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்து குவித்தனர்.
  • இரண்டாம் சந்திரகுப்தர் வெளியிட்ட பல்வகை தங்க நாணயங்கள் குப்த பேரரசின் செல்வச் செழிப்புக்கு அடையாளமாகும்.

இரண்டாம் சந்திரகுப்தர் பற்றிய மதிப்பீடு

  • குப்தப் பேரரசின் வலிமையும் புகழும் இரண்டாம் சந்திரகுப்த விக்ரமாதித்தன் ஆட்சிக் காலத்தில்தான் அவற்றின் உச்சிக்கே சென்றன.
  • அக்காலத்திய பொதுவான பண்பாட்டு வளர்ச்சிக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. காளிதாசர் போன்ற சிறந்த இலக்கிய படைப்பாளர்களை அவர் ஆதரித்தார்.
  • கலைத்துறை நடவடிக்கைகளையும் அவர் ஊக்குவித்தார். அக்காலத்தில் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சி காரணமாகத்தான் குப்தர் காலம் பொற்காலம் என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறது.
  • குப்தர்கால பண்பாட்டு வளர்ச்சி பற்றி பின்வரும் பகுதிகளில் காணலாம்.

இரண்டாம் சந்திரகுப்தரின் பின்தோன்றல்கள்

  • இரண்டாம் சந்திரகுப்தருக்குப்பின் அவரது புதல்வர் குமார குப்தர் ஆட்சிக்கு வந்தார். அமைதியும் செழிப்பும் அவர் காலத்தில் நிலவியது.
  • அவர் ஏராளமான நாணயங்களை வெளியிட்டார்.
  • அவரது கல்வெட்டுக்களை குப்தப் பேரரசு முழுவதும் காணலாம். அவர் குதிரை வேள்வியும் மேற்கொண்டார். பிற்காலத்தில் உலகப்புகழ் பெறவிருந்த நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியது அவரது மகத்தான செயலாகும்.
  • அவரது ஆட்சிக்கால இறுதியில் வலிமையும் செல்வமும் மிகுந்த புஷ்யமித்திரர்கள் என்று அழைக்கப்பட்ட பழங்குடியினரால் குப்தப்படை முறியடிக்கபட்டது.
  • மத்திய ஆசியாவிலிருந்து புறப்பட்ட ஹீணர்கள் இந்துகுஷ் மலையைக் கடந்து இந்தியாமீது தாக்குதல் தொடுக்கவும் முயற்சித்தனர்.
  • ஆனால் அடுத்த ஆட்சிக்கு வந்த ஸ்கந்த குப்தர்தான் உண்மையில் ஹ_ணர்களை எதிர்கொண்டவர். ஹ_ணர்களை முறியடித்து பேரரசை காப்பாற்றியதும் அவரே.
  • இந்த போரினால் குப்தப் பேரரசின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியது.
  • ஸ்கந்த குப்தரின் மறைவுக்குப் பின்னர் புருகுப்தர், புத்தகுப்தர், பாலாதித்யர் போன்ற அவரது வழித் தோன்றல்களினால் குப்தப் பேரரசை ஹ_ணர்களின் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற முடியவில்லை.
  • இறுதியில் ஹ_ணர்களின் படையெடுப்புகளின் விளைவாக குப்தப் பேரரசு மறைந்தது. பின்னர் மாளவத்தின் யசோதர்மன் எழுச்சி பெற்றான்.

குப்தர் ஆட்சிமுறை

  • பரம பட்டாரகா, மகாராஜாதி ராஜா, பரமேஸ்வரா, சாம்ராட், சக்ரவர்த்தி போன்ற விருதுப் பெயர்களை குப்தப் பேரரசர்கள் சூட்டிக் கொண்டதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
  • முதலமைச்சர், சேனாதிபதி, பிற அதிகாரிகள் உள்ளிட்ட அமைச்சரவை அரசனுக்கு ஆட்சித் துறையில் ஆலோசனைகளை வழங்கியது.
  • குப்தர்கால கல்வெட்டுகள் சண்டிவிக்ரகன் என்ற உயர் அதிகாரி பற்றிக் குறிப்பிடுகிறது.
  • அயலுறவுத் துறை அதிகாரியாக அவர் இருந்திருக்கக்கூடும்.
  • குமாரமத்யர்கள், அயுக்தர்கள் போன்ற அதிகாரவர்க்கம் மூலமாக அரசர் மாகாண ஆட்சித் துறையோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். குப்தப் பேரரசின் மாகாணங்கள் ‘புக்திகள்’ எனப்பட்டன.
  • மாகாண ஆளுநர்கள்; உபரிகர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலும் இளவரசர்களாகவே இருந்தனர்.
  • புக்திகள் ஒவ்வொன்றும் விஷயங்கள் என்றழைக்கப்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தன. மாவட்ட ஆட்சிப் பொறுப்பு விஷயபதி என்ற அதிகாரியிடமிருந்து.
  • நகர நிர்வாகத்தை நகர சிரேஷ்டிகள் கவனித்து வந்தனர். மாவட்டத்திலிருந்த கிராமங்களின் நிர்வாகம் கிராமிகர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
  • குப்தர் ஆட்சிமுறை குறித்து பாஹியான் அளிக்கும் தகவல்கள் பயனுள்ளவை. குப்தர் ஆட்சி கருணைமிக்கதாக இருந்தது.
  • மக்களது நடமாட்டத்திற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்க முடிந்தது.
  • தனிநபர் வாழ்க்கையில் அரசின் தலையீடு காணப்படவில்லை. தண்டனைகளும் கடுமையானதாக இல்லை. அபராதம் விதிப்பதே பொதுவான தண்டனை முறையாகும்.
  • ஒற்றர் முறை ஏதும் இல்லை. பயணிகளுக்கு பாதுகாப்புமிக்க சாலைகள், திருடர்கள் பயமின்மை போன்றவை குப்த ஆட்சிமுறையின் திறமைக்கு சான்று பகர்வதாகும்.

இலக்கியம்

  • வடமொழி குப்தர் காலத்தில் ஏற்றம் பெற்றது. பிரம்மி வரிவடிவத்திலிருந்து நாகிரி வரிவடிவம் வளர்ச்சி பெற்றது. காவியம், கவிதை, நாடகம், உரைநடை என பல்வேறு வடிவங்களிலான வடமொழி இலக்கியங்கள் எழுதப்பட்டன.
  • வடமொழி இலக்கியங்களிலேயே மிகச்சிறந்தவை குப்தர் காலத்தைச் சேர்ந்தவையாகும்.
  • ஒரு சிறந்த கவிஞராகவும் திகழ்ந்த சமுத்திரகுப்தர் ஹரிசேனர் உள்ளிட்ட பல அறிஞர்களை ஆதரித்தார்.
  • புகழ்மிக்க ‘நவரத்தினங்கள்’ இரண்டாம் சந்திரகுப்தரின் அவையை அலங்கரித்தனர். அவர்களில் முதன்மையானவர் காளிதாசர்.
  • ‘சாகுந்தலம்’ என்ற சிறப்பான வடமொழி காவியத்தை அவர் படைத்தார். அது உலகின் தலைசிறந்த நூறு புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • மாளவிகாக்னிமித்ரம், விக்ரமூர்வசியம் என்ற மேலும் இரண்டு நாடகங்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் படைத்த இரு காப்பியங்கள் ரகுவம்சம் மற்றும் குமாரசம்பவம்.
  • ரிது சம்ஹாரம்,  மேகதூதம் என்ற கவிதை நூல்களையும் அவர் இயற்றியுள்ளார்.
  • இக்காலத்தில் வாழ்ந்த மற்றொரு படைப்பாளி விசாகதத்தர். முத்ராராட்சசம், தேவிசந்திரகுப்தம் என்ற இரண்டு நாடகங்களை அவர் எழுதியுள்ளார்.
  • அக்காலத்தின் புகழ் வாய்ந்த கவிஞர் சூத்ரகர். அவர் எழுதிய மிருச்சகடிகம் நகைச்சுவைக்கும் சோகத்திற்கும் பெயர்பெற்றது.
  • அர்ச்சுனனுக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடைபெற்ற மோதலைக் கூறும் கதையான கிருமார்ஜீன்யம் என்ற நூலைப் படைத்தவர் பாரவி. காவியதரிசனம், தசகுமாரசரிதம் ஆகிய நூல்களை தண்டின் எழுதியுள்ளார்.
  • சுபந்து எழுதிய வாசவதத்தை மற்றொரு முக்கிய படைப்பாகும். குப்தர் காலத்தில்தான் பஞ்சதந்திரக் கதைகள், விஷ்ணு சர்மா என்பவரால் தொகுக்கப்பட்டன.
  • அமரசிம்ஹர் என்ற புத்தசமய அறிஞர் அமரகோசம் என்ற அகராதியைப் படைத்தார். தற்போது காணப்படும் புராணங்கள் குப்தர்கள் காலத்தில் தொகுப்பட்டதாகும்.
  • அவற்றில் குறிப்பிடத்தக்கவை பாகவத புராணம், விஷ்ணுபுராணம், வாயு புராணம், மத்சய புராணம் என்பவையாகும். தற்காலத்தில் அறியப்படும் இராமாயணம், மகாபாரத நூல்களுக்கு இறுதிவடிவம் குப்தர் காலத்திலேயே அளிக்கப்பட்டது.

அறிவியல்

  • கணிதம், வானஇயல், ஜோதிடம், மருத்துவம் போன்ற துறைகளில் குப்தர்காலத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது.
  • இக்காலத்தில் வாழ்ந்த ஆரியபட்டர் சிறந்த கணிதமேதை மற்றும் வான இயல் அறிஞர். கி.பி. 499 ஆம் ஆண்டு அவர் ஆரியபைட்டியம் என்ற நூலை எழுதினார்.
  • அது கணிதம், வானநூல் தொடர்புடையது சூரிய மற்றும் சந்;திர கிரகணம் ஏற்படுவதை அறிவியல் அடிப்படையில் இந்நூல் விளக்குகிறது.
  • பூமி உருண்டை வடிவிலானது என்றும் அது தன்னைத்தானே சுற்றிவருகிறது என்றும் முதன்முதலில் அறிவித்தவர் ஆரியபட்டரேயாவார்.
  • ஆனால் இக்கருத்துக்களை அவருக்குப்பின் வந்த வராஹமிகிரரும், பிரம்மகுப்தரும் நிராகரித்தனர்.
  • வராஹமிகிரர் ஐந்து வானஇயல் அமைப்புகளைக் கூறும் பஞ்ச சித்தாந்திகா என்ற நூலைப் படைத்தார்.
  • ஜோதிடக் கலையில் சிறந்த புலமையுடையவராகவும் அவர் திகழ்ந்தார். அவரது படைப்பான பிருகத்சம்ஹிதை வடமொழி இலக்கியத்தில் சிறந்த நூலாகப் போற்றப்படுகிறது.
  • வான இயல், ஜோதிடம், புவியியல், கட்டிடக் கலை, வானிலை, விலங்குகள்,  மணமுறைகள், சகுனங்கள் என பல்வேறு தலைப்புகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
  • அவர் எழுதிய பிருகத்ஜாதகம் என்ற நூல் ஜோதிடக் கலைக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது மருத்துவத்துறையில் சிறந்த மேதையான வாக்பதர் குப்தர் காலத்தில் வாழ்ந்தவர்.
  • பண்டைய இந்தியாவின் மருத்துவ மும்மணிகளில் அவரும் ஒருவர். குப்தர் காலத்திற்கு முன்பு வாழ்ந்த மற்ற இருவர் சரகரும், சூஸ்ருதரும்.
  • ‘அஷ்டாங்க சம்கிரஹம்’ அல்லது மருத்துவத்தின் எட்டு பிரிவுகள் என்ற நூலை வாக்பதர் எழுதியுள்ளார்.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!