22 ஜனவரி நடப்பு நிகழ்வுகள்

0

22 ஜனவரி நடப்பு நிகழ்வுகள்

உலகம்

1. அமேசான் புதுமுயற்சி : பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்

 • சூப்பர்மார்க்கெட்டில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் அமேசான் நிறுவனம் புதிய புரட்சியே செய்துள்ளது. பணியாளர்கள் இல்லாமல், பில் போட க்யூவில் நிற்காமல் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்க அமேசான் வகை செய்துள்ளது.
 • ஷாப்பிங் ஆரம்பிப்பதற்கு முன் அமேசான் கோ (Amazon Go)  என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்கான் செய்து கொள்ள வேண்டும். பொருட்கள் இருக்கும் அலமாரிகளில் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். அவை வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் பொருள் என்ன என்பதை அடையாளம் கண்டு அதை பட்டியலில் சேர்க்கும். பொருளை திரும்ப வைத்துவிட்டால் பட்டியலிலிருந்தும் அந்தப் பெயர் நீங்கும்.

2. மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்: பிலிப்பைன்ஸ் எச்சரிக்கை

 • மேயான் எரிமலை 2,640 மீட்டர் உயரமுடையது. தலைநகர் மணி லாவில் இருந்து தென்மேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக அச்சத்தை ஏற்படுத்தி வந்த மேயான் எரிமலை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.
 • பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், “மேயான் எரிமலை கடந்த சில நாட்களாக லாவா குழம்பையும், சாம்பலையும் வெளியேற்றி வந்தது. இதனால் அருகிலுள்ள கிராமங்களில் இருள் சூழ்ந்துள்ளது. மேயான் எரிமலை எப்போது வேண்டுமானலும் வெடிக்கலாம் என்பதால் சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறுவுறுத்தப்பட்டுள்ளன” கூறியுள்ளனர்.

இந்தியா

1. இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரைபோர்க்களமாக மாற்றிவிட வேண்டாம்: முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள்:

 • ‘‘இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீர் மாநிலத்தை போர்க் களமாக மாற்றிவிடக் கூடாது’’ என்று காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள் விடுத்தார்.ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய காவலர்களின் பயிற்சி நிறைவு விழா பாரமுல்லாவில் நேற்று நடந்தது. இதில் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் மெகபூபா முப்தி ஏற்றுக் கொண்டார். பின்னர் மெகபூபா பேசியதாவது:
 • ஒட்டுமொத்த இந்தியாவும் புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், காஷ்மீர் மட்டும் அதற்கு எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறது. காஷ்மீர் எல்லையில் ஏராளமாக ரத்தம் சிந்தப்படுகிறது. நாடு புதிய உயரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, காஷ்மீரை மட்டும் போர்க்களமாக மாற்றிவிட வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் பாகிஸ்தானையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன். இரு நாடுகளும் நட்பு ரீதியிலான உறவை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

2. காச நோயை முற்றிலும் ஒழிக்க இயக்கமாக செயல்பட வேண்டும்: மாநில முதல்வர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்

 • காச நோயை முற்றிலும் ஒழிக்க இயக்கமாக செயல்பட வேண்டும் என்று மாநில முதல்வர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
 • தொற்று நோய்களில் மிகப்பெரிய ஆட்கொல்லியாக காச நோய் (டியூபர்குளோசிஸ்) விளங்குகிறது. ஆண்டுதோறும் சுமார் 29 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் இந்த நோய்க்கு 4.2 லட்சம் பேர் பலியாகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஏழைகள். லட்சக் கணக்கான குழந்தைகள் அனாதைகளாகின்றனர். நம் நாட்டில் காச நோய் காரணமாக ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது
 • இந்த நோயைக் கண்டறிந்து குணப்படுத்துவதற்கான வசதிகள் நம் நாட்டில் உள்ளன. எனவே, இந்த நோயால் மிகப்பெரிய அளவில் மனித உயிர் பலியாக அனுமதிக்கக் கூடாது. காச நோயை ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தப்பட்ட தேசிய காச நோய் கட்டுப்பாடு திட்டத்தை (ஆர்என்டிசிபி) முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

1. தமிழகத்தில் பஸ் கட்டண உயர்வால் ஒரே நாளில் கூடுதலாக ரூ.8 கோடி வசூல்: வருவாய் இன்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு

 • தமிழகத்தில் அரசு பஸ் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நாளன்று மட்டும் சுமார் ரூ.8 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது. இன்று அலுவலக நாள் என்பதால், வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கூறினர்.
 • தமிழகத்தில் 6 ஆண்டு களுக்குப் பிறகு அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சராசரியாக 55 முதல் 60 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வால், பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளும் போராட்டங்களை அறிவித்துள்ளன. இதற்கிடையில், பஸ் கட்டண உயர்வால், கடந்த 20-ம் தேதி ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.8 கோடி கூடுதலாக வசூலாகியுள்ளது
 • அரசு போக்குவரத்துக் கழகங்களில் தினமும் சராசரியாக ரூ.20 கோடி வசூலாகிறது. இதனால், வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளி நாளொன்றுக்கு ரூ.9 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த 20-ம் தேதி மொத்த வசூல் ரூ.28 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, கட்டண உயர்வால் வசூல் தொகை ரூ.8 கோடி அதிகரித்துள்ளது.

2. அம்மா இருசக்கர வாகன திட்டம்: வேலைக்கு செல்லும் பெண்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

 • பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கு உதவியாக அம்மா இருசக்கர வாகன திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் எளிதாக இயக்கக்கூடிய இருசக்கர வாகனங்கள், மாற்றுத்திறனாளிகளுக்காக பொருத்தப்பட்ட சக்கரங்கள் உடைய இருசக்கர வாகனங்கள் வாங்கலாம். அதிகபட்சமாக வாகனத்தின் விலையில் 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம், இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும்.
 • இத்திட்டத்தால் பயனடையும் பெண்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவராகவும், தமிழகத்தில் வசிப்பவராகவும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராகவும், ஓட்டுனர் உரிமம் பெற்றவராகவும் இருக்க வேண்டும். அவர்களின் தனி ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
 • இதற்கான விண்ணப்பங் களை அருகில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இன்று (திங்கட்கிழமை) முதல் பிப்ரவரி 5-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.

வணிகம்

1. ரூபாய் மதிப்பு சரிவு

 • அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று சரிந்து 63.94 ரூபாயாக இருந்தது
 • அமெரிக்க வங்கிகள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் அமெரிக்க டாலர்களை அதிகஅளவு வாங்கியதால் அதன் மதிப்பு உயர்ந்தது. இதன் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு கண்டது.
 • இன்றைய காலை நேர வர்த்தகத்தின்படி, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் சரிந்து 63.94 ரூபாயாக இருந்தது.

2. நடப்பாண்டில் உலகின் வேகமான வளர்ச்சி அடையும் நாடு     இந்தியா: சேங்டம் வெல்த் மேனேஜ்மென்ட் எதிர்பார்ப்பு

 • நடப்பாண்டில் உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடாக இந்தியா இருக்கும். சீனாவின் வளர்ச்சியை விட இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதே போல இந்திய பங்குச்சந்தையும் உலகின் ஐந்தாவது பெரிய பங்குச்சந்தையாக இருக்கும் என ‘சேங்டம் (Sanctum) வெல்த் மேனேஜ்மென்ட்’ நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
 • இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் முக்கியமான நாடுகளில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் ஏதும் நடக்கவில்லை. அதனால் இந்த நாடுகளில் குறைவான வளர்ச்சியே இருக்கும். மாறாக இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்கள் நடந்து வருகிறது. இதனால் நீண்ட கால வளர்ச்சி இருக்கும். சீனாவை பின்னுக்கு தள்ளி உலகின் அதிக வளர்ச்சி அடையும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும். உலகின் ஐந்தாவது பெரிய பங்குச்சந்தையாக இந்தியா இருக்கும்

விளையாட்டு

1. 4-வது டி20 சதம் அடித்தார் ரெய்னா: 49 பந்துகளில் அதிரடி; உ.பி. வெற்றி!

 • கொல்கத்தாவில் நடைபெறும் சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டில் உத்தரப் பிரதேச அணி கேப்டன் சுரேஷ் ரெய்னா பெங்காள் அணிக்கு எதிராக 49 பந்துகளில் சதம் கண்டு தனது 4-வது டி20 சத எடுத்தார்.
 • ரெய்னா மொத்தத்தில் 13 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 59 பந்துகளில் 126 ரன்கள் விளாசி நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

2.பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ பிரதமர் மோடி வாழ்த்து

 • 6 அணிகள் இடையிலான பார்வையற்றோருக்கான 5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வந்தது. இதில் சார்ஜாவில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்தது. அடுத்து களம் புகுந்த இந்திய அணி 38.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 309 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றதோடு, சாம்பியன் பட்டத்தையும் தட்டிச்சென்றது. இந்திய வீரர்கள் சுனில் ரமேஷ் 93 ரன்களும், கேப்டன் அஜய் திவாரி 62 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்த உலக கோப்பையில் இந்திய அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 • 2-வது முறையாக வாகை சூடிய இந்திய அணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இந்த வெற்றியின் மூலம் அவர்கள் நமது தேசத்தை பெருமைப்பட வைத்துள்ளார்கள். தங்களது ஆட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்தியருக்கும் உந்துசக்தியாக இருக்கிறார்கள்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

3.ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: ஸ்பெயின் வீராங்கனை நவரோ கால் இறுதிக்கு தகுதி

 • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் வருட தொடக்கத்தில் நடைபெறும் கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டியாகும்.  இந்த போட்டியில் இன்று நடைபெற்ற ஒற்றையர் மகளிர் பிரிவு ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை சுவாரேஸ் நவரோ மற்றும் எஸ்தோனியா நாட்டின் ஆனெட் கொண்டாவெய்ட் ஆகியோர் விளையாடினர்.
 • முதல் செட்டை கைப்பற்றிய 22 வயது நிறைந்த கொண்டாவெய்ட் அடுத்த செட்டில் 4-1 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றார்.
 • இந்த நிலையில், கொண்டாவெய்ட் 2 முறை செய்த தவறால் 29 வயது நிறைந்த நவரோ 2வது செட்டை கைப்பற்றினார்.  அதனை தொடர்ந்து 3வது செட்டையும் அவர் கைப்பற்றினார்.  இதனால் 4-6, 6-4, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு நவரோ தகுதி பெற்றுள்ளார்.

ஜனவரி 22 நடப்பு நிகழ்வுகள் PDF வடிவம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here