மகதத்தின் எழுச்சியும், அலெக்சாந்தரின் படையெடுப்பும்

0
மகதத்தின் எழுச்சியும், அலெக்சாந்தரின் படையெடுப்பும்

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வடஇந்தியாவில் எண்ணற்ற தனி அரசுகள் இருந்தன. சிலவற்றில் முடியாட்சிமுறை வழக்கிலிருந்தது. சில குடியரசுகளாகவும் திகழ்ந்தன. கங்கைச் சமவெளியில் முடியாட்சிகள் இருந்தன. வடமேற்கு இந்தியாவிலும், இமயமலைகளின் அடிவாரத்திலும் குடியாட்சிகள் இருந்தன. சாக்கியர்கள், லிச்சாவிகள், மல்லர்கள் போன்ற ஒருசில ஒரே குலத்தைச் சேர்ந்த குடியாட்சிகள் சிலவும் காணப்பட்டன. குடியாட்சிகளில் அரசின் முக்கிய முடிவுகளை பொது அவை எடுத்தது. அதில் குடும்பத் தலைவர்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் அங்கம் வகித்தனர். பெரும்பான்மை வாக்கு அடிப்படையிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன.பதினாறு மகாஜனபதங்கள் என்றழைக்கப்படும் பதினாறு பெரும் அரசுகள் பற்றி புத்த இலக்கியமான “அங்குத்தார நிகயம்” விவரங்களை குறிப்பிடுகிறது. அவை யாவன: அங்கம், மகதம், காசி, கோசலம், வஜ்ஜி, மல்லம்,  சேதி, வத்சம், குரு, பாஞ்சாலம், மத்ச்யம், சூரசேனம், அஸ்மகம், அவந்தி, காந்தாரம் மற்றும் காம்போஜம். பதினாறு அரசுகள் பற்றி சமண நூல்களும் குறிப்பிடுகின்றன. காலப் போக்கில், சிறிய அரசுகள் வலிமையான ஆட்சியாளர்களுக்கு அடிபணிந்தன: அல்லது அழிக்கப்பட்டன. இறுதியாக கி.மு.ஆறாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் நான்கு அரசுகள் மட்டுமே எஞ்சியிருந்தன – அவை வத்சம், அவந்தி, கோசலம், மகதம் என்பனவாகும்.

வத்சம்

  • வத்சம் என்ற அரசு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்தது. தற்கால அலகாபாத்துக்கு அருகிலுள்ள கோசாம்பி அதன் தலைநகரம்.
  • அதன் புகழ்மிக்க அரசர் உதயணன். அவந்தி, அங்கம், மகதம் ஆகிய அரசுகளுடன் மண உறவுகளை வைத்துக் கொண்டதன்மூலம் அவர் தமது வலிமையைப் பெருக்கிக் கொண்டார்.
  • அவரது மறைவுக்குப் பிறகு,  வத்சம் அவந்தி அரசுடன் இணைத்துக் கொள்ளப்பட்டது.

அவந்தி

  • அவந்தி அரசின் தலைநகரம் உஜ்ஜயினி. இதன் மிகச்சிறப்பு வாய்ந்த அரசர் பிரயோதித்யன்.
  • ஊதயணன் மகளான வாசவத்தத்தையை மணந்தபின் வலிமைமிக்க ஆட்சியாளரானார்.
  • இவர் புத்தசமயத்தை ஆதரித்தார். பிரயோதித்தயனுக்குப்பின் வந்தோர் திறமையற்றவர்கள்.
  • பின்னர் அவந்தியை மகதத்தின் ஆட்சியாளர்கள் இணைத்துக் கொண்டனர்.

கோசலம்

  • கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி – இதன் புகழ்வாய்ந்த அரசர் பிரசேனஜித். கல்வியில் சிறந்தவர்.
  • மகதத்தோடு மணவுறவு கொண்டபின் அவரது செல்வாக்கு மேலும் அதிகரித்தது. தனது தந்தையை பிம்பிசாரனுக்கு மணமுடித்து, காசியை மணப் பரிசாகவும் கொடுத்தார்.
  • பின்னர், அஜாதசத்ருவுடன் மோதல் ஏற்பட்டது. இறுதியில், பிரசேனஜித், பிம்பிசாரனின் மகளை மணம்புரிந்து கொண்டார். அரசரது மறைவுக்குப்பின் கோசலம் மகதத்தின் ஒரு பகுதியாயிற்று.
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

மகதம்

  • வடஇந்திய அரசுகளிலேயே, மகதம் வலிமையாகவும் வளமையாகவும் எழுச்சி பெற்றது. வடஇந்திய அரசியல் நடவடிக்கைகளின் மையமாக அது திகழ்ந்தது.
  • மகதத்தின் புவியியல் அமைப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் பெற்ற அமைவிடம் இயற்கை மகதத்திற்கு அளித்த கொடை எனலாம். கங்கை சமவெளியின் இடைப்பட்ட பகுதியில் மகதம் அமைந்திருந்தது சாதகமாகவே காணப்பட்டது.
  • வளமான விளைநிலங்கள், ராஜ்கீருக்கருகில் இருந்த இரும்புக்கனிவளம், கயாவுக்கு அருகிலிருந்த இரும்புப் படிமங்கள் ஆகியன இயற்கை அளித்தவரமாகும்.
  • அக்காலத்தில் வாணிக வழித்தடத்தின் மையத்திலும் மகதம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும். மகதத்தின் தலைநகரம் ராஜகிருஹம், பிம்பிசாரன்,  அஜாதசத்ரு ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் மகதத்தின் செல்வம் அதன் உச்சி அளவை எட்டியது.

பிம்பிசாரன் (கி.மு. 546 – கி.மு. 494)

  • பிம்பிசாரன் ஹர்யாங்க வம்சத்தை சேர்ந்தவர். மணவுறவுகள் மூலம் தனது வலிமையை அவர் பெருக்கிக் கொண்டார். கோசல நாட்டு அரச குடும்பத்தில் அவர் முதலாவது மணஉறவை ஏற்படுத்திக் கொண்டார்.
  • அதனால், அதிக வருவாய் தரக் கூடிய காசி அவருக்கு மணப்பரிசாக கிடைத்தது. பின்னர், பிம்பிசாரன் வைசாலிiயை ஆண்ட லிச்சாவி குடும்பத்தைச் சேர்ந்த செல்லண்ணா என்ற இளவரசியை மணந்து கொண்டார்.
  • இந்த மண உறவினால் மகதத்தின் வடக்கு எல்லையின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும், நேபாள எல்லை வரை மகதம் விரிவடையவும் இது வழிவகுத்தது.
  • மத்திய பஞ்சாபிலிருந்த மத்ரா அரச குடும்பத்தைச் சேர்ந்த கேமா என்ற இளவரசியையும் அவர் மணந்து கொண்டார்.
  • பல்வேறு படையெடுப்புகளை மேற்கொண்ட பிம்பிசாரர் தனது பேரரசை மேலும் விரிவுபடுத்தினார். அவந்தி நாட்டோடு நட்புறவை மேற்கொண்டார். தனது அரசில் ஆட்சி முறையையும் செம்மையாக சீரமைத்தார்.
  • வர்த்தமான மகாவீரர், கௌதம புத்தர் ஆகிய இருவருக்கும் பிம்பிசாரர் சமகாலத்தவர். இருப்பினும், இவ்விரு சமயங்களும் பிம்பிசாரரை தத்தம் ஆதரவாளர் என்று கோருகின்றன. புத்த சங்கத்திற்கு எண்ணற்ற பரிசுகளை அவர் வழங்கியதாகத் தெரிகிறது.

அஜாதசத்ரு (கி.மு.494 – கி.மு. 462)

  • அஜாத சத்ருவின் ஆட்சி படையெடுப்புகளுக்கு பெயர் பெற்றதாகும். கோசலம்,  வைசாலி ஆகிய அரசுகளுக்கெதிராக அவர் போரிட்டார்.
  • வைசாலியைச் சேர்ந்த லிச்சாவிகள் தரைமையிலான மாபெரும் கூட்டிணைவை எதிர்த்து பெரும் வெற்றி கண்டார். இதனால், அவரது புகழும் பெருமையும் அதிகரித்தன.
  • இப்போர் பதினாறு ஆண்டுகள் நீடித்தது. இப்போரின்போதுதான், அஜாதசத்ரு பாடலிகிராமம் (பிற்காலத்தில் பாடலிபுத்திரம்) என்ற சிறு கிராமத்தின் ராணுவ முக்கியத்துவத்தை பெரிதும் உணர்ந்தார்.
  • வைசாலிக்கெதிரான படையெடுப்புகளுக்காக, அங்கு கோட்டைகள் அமைத்து வலிமையை பெருக்கிக் கொண்டார்.
  • புத்த, சமண சமயங்கள் அஜாதசத்ருவை தத்தம் சமயத்தவர் என்று கூறிக்கொள்கின்றன. அவர் தொடக்கத்தில் சமணராகவும், பின்னர் புத்த சமயத்தையும் தழுவினார் என்றும் பொதுவாக நம்ப்ப்படுகிறது.
  • கௌதம புத்தரை அவர் சந்தித்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த காட்சி பார்ஹத் ஸ்தூபியில் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மகாவம்சத்தின் கூற்றுப்படி அவர் பல சைத்தியங்களையும் விகாரங்களையும் அமைத்தார் என அறிகிறோம்.
  • புத்தரின் மறைவுக்குப் பிறகு, ராஜகிருஹத்தில் முதல் புத்தசமய மாநாடு கூட்டப்படுவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தார்.
  • அஜாதசத்ருவைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் உதயின் கங்கை நதியுடன் சோன் ஆறு கலக்குமிடத்தில் பாடலிபுத்திரம் என்ற புதிய தலைநகரை அவர் நிர்மாணித்தார்.
  • பின்னர், மௌரியப் பேரரசின் தலைநகராக பாடலிபுத்திரம் புகழ்பெற்றது. உதயினுக்குப் பின் வந்தோர் வலிமை குறைந்தவர்கள். எனவே, மகதம் சிசுநாகர்களால் கைப்பற்றப்பட்டது. ஹர்யாங்கவம்சம் முடிவுக்கு வந்து சிசுநாகவம்சம் ஆட்சிக்கு வந்தது.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

சிசுநாக வம்சம்

  • சிசுநாகர்களின் வம்சாவளியும், காலக்கணிப்பும் தெளிவாக இல்லை.
  • அவந்தி நாட்டு அரசனை முறியடித்த சிசுநாகன் அதனை மகதத்துடன் இணைத்துக் கொண்டார்.
  • சிசுநாகனுக்குப் பிறகு மகதப் பேரரசு சீர்குலையத் தொடங்கியது. தொடர்ந்து ஆட்சிக்கு வந்தவர் காகவர்மன் அல்லது காலசோகன் என்பவர்.
  • இவரது ஆட்சிக்காலத்தில் வைசாலியில் இரண்டாவது புத்த சமய மாநாடு கூடியது. நந்தவம்சத்தை நிறுவியவரால் காலசோகன் கொல்லப்பட்டார்.

நந்தர்கள்

  • நந்தவம்ச ஆட்சியில் மகதத்தின் புகழ் அதன் உச்சிக்கு சென்றது. அவர்கள் பெற்ற வெற்றிகள் கங்கைச் சமவெளிக்கு அப்பாலும் சென்றது.
  • வடஇந்தியா முழுவதையும் உள்ளடக்கிய ஒரு பெரும் பேரரசை நந்தர்கள் உருவாக்கினர்.
  • நந்தவம்சத்தின் வலிமைமிக்க ஆட்சியாளர் மகாபத்மநந்தர். வடஇந்தியாவிலிருந்த ஷத்திரிய வம்சத்தவர்களை முறியடித்த அவர் ஏகரதன் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டார்.
  • மகாபத்ம நந்தரின் வரிவான படையெடுப்புகள் பற்றி புராணங்கள் குறிப்பிடுகின்றன. நந்தர்கள் கலிங்க நாட்டை கைப்பற்றியதாக காரவேலனின் ஹதிகும்பா கல்வெட்டு குறிப்பிடுகிறது.
  • தக்காணத்தின் பெரும்பகுதி நந்தர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என பல வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். எனவே, மகாபத்ம நந்தர் ஒரு பரந்த பேரரசை உருவாக்கினார் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை
  • புத்த சமய சான்றுகள்படி மகாபத்ம நந்தர் பத்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரைத் தொடர்ந்து அவரது எட்டு புலவர்களும் ஒருவர்பின் ஒருவராக மகதத்தை ஆட்சி செய்தனர்.
  • நந்தவம்சத்தின் கடைசி அரசர் தனநந்தர். மகத பேரரசை கட்டுக்குலையாமல் அவர் காப்பாற்றினார். ஏராளமான செல்வத்தையும், வலிமைமிக்க படையையும் அவர் வைத்திருந்தார்.
  • நந்தர்களின் செல்வச் செழிப்பு பற்றி சங்க இலக்கியமான அகநானூற்றில் மாமூலனார் பாடியுள்ளார். நந்தர்களின் ஆட்சிப் பகுதியில் நிலவிய வளமான வேளாண்மையும், பொதுவான செல்வச் செழிப்பும் அரசுக் கருவூலத்தை நிரப்பியிருந்திருக்க வேண்டும்.
  • தனநந்தன் பின்பற்றிய கடுமையான வரிவசூல் முறையை மக்கள் எதிர்த்தனர். இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சந்திரகுப்த மௌரியனும்,  கௌடில்யரும் நந்தர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு மக்கள் எழுச்சியை தோற்றுவித்தனர். இக்காலத்தில்தான் அலெக்சாந்தர் இந்தியாவின்மீது படையெடுத்தார்.

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!