மௌரியப் பேரரசு

0

மௌரியப் பேரரசு

மௌரியப் பேரரசு நிறுவப்பட்டதிலிருந்து இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத் தொடங்குகிறது. முதன்முறையாக, இந்தியாவில் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டது. வரலாற்றுக்கான சான்றுகளும் காலக்கணிப்பும் துல்லியமாக இருப்பதால் வரலாறு எழுதுவதிலும் தெளிவு பிறந்தது. ஏராளமான உள்நாட்டு, அயல்நாட்டு இலக்கிய ஆதாரங்களோடு, கல்வெட்டு தகவல்களும் இக்காலத்திய வரலாற்றை எழுதுவதற்கு பயன்படுகின்றன.

இலக்கிய சான்றுகள்

கௌடில்யரின் அர்த்த சாஸ்திரம்

  • வடமொழி நூலான அர்த்த சாஸ்திரத்தை எழுதியவர் கௌடில்யர். இவர் சந்திரகுப்தமௌரியரின் சம காலத்தவர். கௌடில்யர் ‘இந்திய மாக்கியவல்லி’ என்றும் அழைக்கப்படுகிறார்.
  • 1904 ஆம் ஆண்டுதான் ஆர்.சாமாசாஸ்திரி என்பவரால் அர்த்த சாஸ்திரத்தின் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன.
  • அர்த்த சாஸ்திரம் 15 புத்தகங்களையும் 180 அத்தியாயங்களையும் கொண்;டது. இதனை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
  • முதல் பகுதி அரசன், அரசவை அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் பற்றிக் கூறுகிறது.
  • இரண்டாம் பகுதி உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களையும்,
  • மூன்றாம் பகுதி அரசியல் வெல்திறன், போர் ஆகியவற்றையும் எடுத்துரைக்கிறது.
  • மௌரியர் வரலாற்றுக்கு முக்கிய இலக்கிய சான்றாக இந்த நூல் திகழ்கிறது.

விசாகதத்தரின் முத்ராராட்சகம்

விசாகத்தரால் இயற்றப்பட்ட முத்ராராட்சகம் ஒரு வடமொழி நாடக நூலாகும். குப்தர் காலத்தில் இந்த நூல் எழுதப்பட்டாலும், கௌடில்யரின் துணையோடு சந்திரகுப்தன் நந்தர்களை முறியடித்து மௌரிய ஆட்சியை எப்படி நிறுவினான் என்பதை இது விவரிக்கிறது. மௌரியர்கால சமூக, பொருளாதார நிலைமைகளையும் எடுத்துக் கூறுகிறது.

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா

  • சந்திரகுப்த மௌரியரின் அவையில் கிரேக்கத் தூதராக இருந்தவர் மெகஸ்தனிஸ். அவர் எழுதிய நூலான இண்டிகா முழுமையாக கிடைக்கவில்லை.
  • இருப்பினும், மௌரியர் ஆட்சிமுறை, குறிப்பாக பாடலிபுத்திர நகராட்சி, படைத்துறை நிர்வாகம் குறித்த தகவல்களை இந்த நூல் தருகிறது.
  • மௌரியர்கால சமூகம் குறித்த அவரது வர்ணனை குறிப்பிடத்தக்கது. அவர் கூறும் ஒரு சில நம்ப இயலாத தகவல்களை மிகுந்த எச்சரிக்கையுடனேயே கணக்கில்; கொள்ள வேண்டும்.

பிற இலக்கியங்கள்

மேற்கூறிய மூன்று நூல்கள் தவிர, புராணங்களும், ஜாதகக் கதைகள் போன்ற புத்த சமய இலக்கியங்களும் மௌரியர் வரலாறு குறித்த தகவல்களைத் தருகின்றன. இலங்கை நூல்களான மகாவம்சம், தீபவம்சம் இரண்டும் இலங்கையில் அசோகரது முயற்சியால் புத்தசமயம் பரவிய வரலாற்றைக் கூறுகின்றன.

தொல்லியல் சான்றுகள்

அசோகரது ஆணைகள்

  • 1837 ஆம் ஆண்டு ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் முதன்முதலில் அசோகரது கல்வெட்டுகள் படித்தறியப்பட்டன.
  • பாலிமொழியினும், ஒரு சில இடங்களில் பிராகிருத மொழியிலும் அவை எழுதப்பட்டுள்ளன. பிரம்மி வரிவடிவத்தில் அவை அமைந்துள்ளன.
  • வடமேற்கு இந்தியாவிலுள்;ள அசோகரது கல்வெட்டுக்கள் கரோஷ்தி வரிவடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
  • மொத்தம் பதினான்கு பெரிய பாறைக் கல்வெட்டுக்கள் உள்ளன. அவரால்; புதியதாக கைப்பற்றப்பட்ட பகுதியில் இரண்டு கலிங்கக் கல்;வெட்டுக்கள் கிடைத்துள்ளன.
  • முக்கிய நகரங்களில் பெரிய தூண் கல்வெட்டுக்கள் நிறுவப்பட்டுமுள்ளன. இவை தவிர, சிறிய பாறை மற்றும் தூண் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
  • அசோகரது ஆணைகளான இவையனைத்தும்; அசோகரின் தர்மம் பற்றியும், தனது அதிகாரிகளுக்கு அசோகர் பிறப்பிக்க ஆணைகள் பற்றியும் கூறுகின்றன.
  • பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு அசோகரது கலிங்கப் போரைப்பற்றி குறிப்பிடுகிறது. தனது பேரரசில் தர்மத்தை பரப்புவதற்காக அசோகர் மேற்கொண்ட முயற்சிகளை ஏழாவது தூண் கல்வெட்டு விவரிக்கிறது.

எனவே, அசோகரது கல்வெட்டுக்கள் அசோகரைப் பற்றியும், மௌரியப் பேரரசு குறித்தும் அறிந்து கொள்ள முக்;கிய சான்றுகளாகப் பயன்படுகின்றன.

மௌரியர்களின் அரசியல் வரலாறு

சந்திரகுப்த மௌரியர் (கி.மு. 322 – கி.மு. 298)

  • மௌரியப் பேரரசை நிறுவியவர் சந்திரகுப்த மௌரியர். அவர் தனது இருபத்தி ஐந்தாவது வயதில் நந்தவம்சத்தின் கடைசி அரசன் தனநந்தனிடமிருந்து பாடலிபுத்திரத்தைக் கைப்பற்றினார்.
  • இதற்கு கௌடில்யர் அவருக்கு உறுதுணையாக இருந்தார். கௌடில்யரை சாணக்கியர் என்றும் விஷ்ணுகுப்தர் என்றும் அழைப்பர்.
  • கங்கைச் சமவெளியில் தனது நிலையை வலுப்படுத்தக் கொண்டபின், சந்திரகுப்த மௌரியர் வடமேற்கில் படையெடுத்துச்சென்று சிந்து நதி வரையிலான பகுதிகளைக் கைப்பற்றினார்.
  • பின்னர் மத்திய இந்தியாவில் நர்மதை நதிக்கு வடக்கிலிருந்த பகுதிகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டார்.
  • கி.மு. 305 ஆம் ஆண்டு வடமேற்கு இந்தியாவை ஆட்சிபுரிந்த அலெக்சாந்தரின் படைத் தளபதியான செலூகஸ் நிகேடருக்கு எதிராக படையெடுத்தார்.
  • அவரை முறியடித்த சந்திரகுப்த மௌரியர், அவரோடு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டார். அதன்படி, செலூகஸ் நிகேடர் சிந்துநதிக்கு அப்பாலிருந்த பகுதிகளான அரியா, அரகோஷியா, கெட்ரோஷியா போன்றவற்றை மௌரியப் பேரரசுடன் இணைத்துக்கொள்ள சம்மதித்தார்.
  • தனது மகளையும் மௌரிய இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். சந்திரகுப்த மௌரியரும் செலூகஸ் நிகேடருக்கு பரிசாக 500 யானைகளை அளித்தார். கிரேக்க நாட்டின் தூதராக மெகஸ்தனிஸ் மௌரிய அரசவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • சந்திரகுப்த மௌரியர் தனது ஆட்சிக் காலத்தின் முடிவில் சமணசமயத்தை தழுவினார். தனது மகன் பிந்துசாரனுக்கான அரியாணையைத் துறந்த அவர், பத்ரபாகு தலைமையிலான சமணத்துறவிகள் புடைசூழ மைசூருக்கு அருகிலுள்ள சிரவணபெல்கோலாவை வந்தடைந்தார். அங்கு உண்ணாநோன்பிருந்து உயிர் துறந்தார்.

பிந்துசாரன் (கி.மு. 298 – கி.மு. 273)

  • கிரேக்க நாட்டு ஆசிரியர்களால் ‘அமித்ரகாதன்’ என்று குறிக்கப்படுபவர் பிந்துசாரன். இதற்கு எதிரிகளை அழிப்பவன் என்று பொருள்.
  • அவர் மைசூர்வரை படையெடுத்து சென்று தக்காணத்தை கைப்பற்றினார். இரண்டு கடல்களுக்கும் இடையிலிருந்த பதினாறு நாடுகளை பிந்துசாரன் கைப்பற்றியதாக திபெத் அறிஞர் தாரநாதர் குறிப்பிட்டுள்ளார்.
  • சங்க காலத்து தமிழ் இலகியங்களும் மௌரியர்களின் தெற்கத்திய படையெடுப்பு பற்றி குறிப்பிடுகின்றன. எனவே, பிந்;துசாரன் ஆட்சிக் காலத்தில் மௌரியப் பேரரசு மைசூர் வரை பரவியிருந்தது என்று கூறலாம்.
  • சிரியா நாட்டு அரசன் முதலாம் ஆன்டியோகஸ் தனது தூதுவராக டைமக்கஸ் என்பவரை பிந்துசாரன் அவைக்கு அனுப்பிவைத்தார்.
  • பிந்துசாரன், முதலாம் ஆன்டியோகசிடம், இனிப்பான மது, உலர்ந்த அத்திப்பழம், போன்றவற்றையும் ஒரு தத்துவ ஞானியையும் அனுப்பி வைக்குமாறு கோரினார்.
  • பொருட்களை அனுப்பிவைத்த சிரியா அரசன், கிரேக்க நாட்டு சட்டப்படி தத்துவஞானியை அனுப்ப இயலாது என்றும் தெரிவித்தான்.
  • அஜிவிகர்கள் என்ற சமயப் பிரிவினரை பிந்துசாரன் ஆதரித்தார். தனது மகன் அசோகரை உஜ்ஜியினியின் ஆளுநராக பிந்துசாரன் நியமித்தார்.

மகா அசோகர் (கி.மு. 273 – கி.மு. 232)

  • அசோகரின் இளமைக்காலம் பற்றி சொற்ப செய்திகளே உள்ளன. தனது தந்தை பிந்துசாரன் ஆட்சிக்காலத்தில் உஜ்ஜயினியின் ஆளுநராக அசோகர் பணியாற்;றினர்.
  • தட்சசீலத்தில் நடைபெற்ற கலகத்தை ஒடுக்கினார். அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிற்கும் (கி.மு.273) முடிசூட்டிக் கொண்டதற்கும் (கி.மு.269) இடையே நான்கு ஆண்டுகள் இடை வெளியிருந்தது.
  • எனவே, பிந்துசாரனின் மறைவுக்குப்பின் அரியணைக்குப் போட்டி இருந்திருக்கும் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இலங்கை நூல்களான மகாவம்சமும், தீபவம்சமும் அசோகர் தனது மூத்த சகோதரர் சுசிமா உள்ளிட்ட தொண்ணூற்று ஒன்பது சகோதரர்களை கொன்றுவிட்டு ஆட்சியைக் கைப்பற்றியதாகக் கூறுகின்றன.
  • இளைய சகோதரன் திசா மட்டும் உயிரோடு விடப்பட்டான். ஆனால், திபெத் அறிஞர் தாரநாதர் அசோகர் தனது ஆறு சகோதரர்களை மட்டுமே கொன்றதாகக் கூறினார்.
  • அசோகரது சகோதரர்கள் பலர் ஆட்சித் துறையில் பணியாற்றியதாக அவரது கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. எப்படியிருப்பினும், அசோகர் ஆட்சிக்கு வந்தபோது அரியணைக்குப் போட்டி இருந்தது தெளிவாகிறது.
  • அசோகரது ஆட்சியில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு கி.மு. 261 ஆம் ஆண்டு அவர் கலிங்கப்போரில் பெற்ற வெற்றியாகும். அப்போரின் காரணம் மற்றும் போக்கு பற்றி விவரங்கள் இல்லையென்றாலும், விளைவுகள் பற்றி அசோகர் தாம் வெளியிட்ட பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளார்.
  • “ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டனர், அதைப்போல் பன்மடங்கு மக்கள் துன்புற்றனர்” போருக்குப்பின் அசோகர் கலிங்கத்தை மௌரியப் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
  • கலிங்கப் போரின் மற்றொரு முக்கிய விளைவு அசோகர் புத்த சமயத்iதை தழுவியதாகும். புத்தபிக்கு உபகுப்தர் அவரை மனமாற்றம் செய்து புத்தசமயத்தை தழுவச் செய்தார்.

அசோகரும் புத்த சமயமும்

  • சில அறிஞர்களின் கருத்துப்படி அசோகர் உடனடியாக புத்த சமயத்துக்கு மாறிவிடவில்லை என்றும் படிப்படியாகவே புத்த சமயத்தை தழுவினார் என்றும் கருதுகின்றனர்.
  • போருக்குப்பின் அவர் ஒரு சாக்கிய உபாசகரானார் (சாதாரண சீடர்). இரண்டரை ஆண்டகள் கழித்து ஒரு புத்தபிக்கு (துறவி) வாக மாறினார்.
  • பின்னர் வேட்டையாடுதலை கைவிட்டார். புத்தகயாவிற்கு புனிதப்பயணம் மேற்கொண்டனர். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக தூதுக்குழுக்களை அனுப்பினார்.
  • தர்மத்தை விரைவாக பரப்பும் பொருட்டு தர்ம மகாமாத்திரர்கள் என்ற சிறப்பு அலுவலர்களை நியமித்தார். கி.மு.241 ஆம் ஆண்டு புத்தர் பிறந்த இடமான கபிலவஸ்துவுக்கு அருகிலுள்ள லும்பினி வனத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
  • மேலும், புத்தசமய புனித இடங்களான சாரநாத், ஸ்ராவஸ்தி, குசிநகரம் போன்ற இடங்களுக்கும் சென்றார். தனது மகன் மகேந்திரன், மகள் சங்கமித்திரை ஆகியோரின் தலைமையில் சமயப் பரப்புக்குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
  • அவர்கள் அங்கு போதிமரத்தின் கிளையை நட்டனர். புத்த சங்கத்தை வலிமைப்படுத்துவதற்காக அசோகர் கி.மு.240 ஆம் ஆண்டு பாடலிபுத்திரத்தில் மூன்றாவது புத்தசமய மாநாட்டைக் கூட்டினார். மொக்கலிபுத்த திசா அம்மாநாட்டுக்கு தலைமை வகித்தார்.

அசோகரது பேரரசுப் பரப்பு

  • சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகியோர் எல்லைப்புறத்திலிருந்த தென்னிந்திய அரசுகள் என அசோகரது கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
  • எனவே, இவை மௌரியப் பேரரசுக்கு வெளியே அமைந்திருந்தன என்;பது தெளிவாகிறது. காஷ்மீர் மௌரியப் பேரரசுக்கு உட்பட்டது என ராஜகாங்கிணி குறிப்பிடுகிறது.
  • நேபாளமும் மௌரியப் போரரசின் ஒரு பகுதியாகும். வடமேற்கு எல்லையை ஏற்கனவே சந்திரகுப்த மௌரியர் நிர்ணயம் செய்திருந்தார்.

அசோகரது தர்மம்

அசோகர் புத்த சமயத்தை தழுவி, அதனைப் பரப்புவதற்கு முயற்சிகளை எடுத்தபோதிலும், அவரது தர்மக் கொள்கை மேலும் உயரிய கருத்தாகும். அது ஒரு வாழ்க்கை நெறி: ஒழுக்க விதி: அனைத்து மக்களும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய கோட்பாடுகள் என்று கூறலாம். அசோகரது தர்மக் கோட்பாடுகள் அவரது கல்வெட்டுக்களில் தெளிவாக குறிக்கப்;பட்டுள்ளன. அவற்றின் பொதுவான சிறப்புக்கூறுகளை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம

  1. தாய், தந்தைக்குப் பணிவிடை செய்தல், அஹிம்சையைக் கடைப்பிடித்தல், உண்மையை நேசித்தல், ஆசிரியர்களைப்; போற்றுதல் மற்றும் உறவினரை நன்றாக நடத்துதல்
  2. திருவிழாக் கூட்டங்களையும் விலங்குகளை பலியிடுதலையும் தடை செய்தல்: பொருட் செலவுமிக்க மற்றும் பொருளற்ற சடங்குகளையும் வழக்கங்களையும் தவிர்த்தல்
  3. சமூக நலனைக் குறிக்கோளாகக் கொண்டு ஆட்சிமுறையை செம்மையாக திறம்பட சீரமைத்தல்: மக்களுடன் நேரடித் தொடர்பை எப்போதும் வைத்திருக்கும் பொருட்டு தர்ம யாத்திரைகளை மேற்கொள்ளுதல்
  4. பணியாளர்களை எஜமானர்களும், கைதிகளை அரசாங்க அதிகாரிகளும் மனித நேயத்துடன் நடத்துதல்
  5. விலங்குகள்மீது கருணைகாட்டி அஹிம்சையைக் கடைப்பிடித்தல்: உறவினரை மதித்தல்: பிராமணர்களுக்கு கொடையளித்தல்
  6. அனைத்து சமயப் பிரிவுகளுக்கிடையே சகிப்புத் தன்மையை வலியுறத்தல்
  7. போர் செய்வதை தவிர்த்து தர்மத்தின்வழி வெற்றி கொள்ளுதல்;

அஹிம்சை கோட்பாடும், அசோகரது தர்ம கருத்துக்களும் புத்தரின் போதனைகளை ஒட்டியே அமைந்துள்ளன. ஆனால், அசோகர் தனது தர்மக்கோட்பாடுகளை புத்தரின் போதனை களுடன் தொடர்புப்;படுத்தவில்லை. புத்த சமயம் அவரது தனிப்பட்ட நம்பிக்கையாகும். அவர் கூறிய தர்மம் ஒரு பொதுவான ஒழுக்கநெறியாகும். சமூகத்தின் அனைத்து தரப்பிற்கும் தனது தர்மக்கோட்பாடுகள் சென்றடைய வேண்டும் என அசோகர் விரும்பினார்.

அசோகர் பற்றிய ஒரு மதிப்பீடு

  • அசோகர் “அரசர்களிலேயே தலைசிறந்தவராக” விளங்கினார். மகா அலெக்சாந்தர், ஜீலியஸ் சீசர் போன்ற உலகின் தலைசிறந்த பேரரசர்களையும் அசோகர் விஞ்சி நின்றார்.
  • எச்.ஜி. வெல்ஸ் என்பவரது கூற்றுப்படி: “வரலாற்றின் பட்டியலில் குவிந்திருக்கும் ஆயிரக்கணக்கான அரசர்களில் அசோகரின் பெயர் மட்டும் தன்னந்தனி நட்சத்திரமாக ஒளிவீசுகிறது.”
  • அசோகர் தமது கோட்பாடுகளுக்கு உண்மையானவராகத் திகழ்ந்து அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகினார். அவர் கனவு காண்பவரல்ல: மாறாக ஒரு நடைமுறை மேதை.
  • அவரது தர்மக் கொள்கை உலகம் அனைத்திற்கும் பொதுவானது. முனித குலமனைத்திற்கும் இன்றைக்கும் பொருந்தவல்லது.
  • கருணைமிக்க ஆட்சிக்கும், போரில் வெற்றி பெற்ற பிறகும் போரைத் துறந்து அமைதிக்கொள்கைகைக் கடைப்பிடித்தமைக்கும் அசோகர் வரலாற்றில் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என்று கூறலாம். அவரது கோட்பாட்டின் மையக்கருத்து மனித குலத்தின் நலனையே வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

பிற்கால மௌரியர்கள்

  • கி.மு. 232ம் ஆண்டு அசோகர் மறைந்தபின் மௌரியப் பேரரசு இரண்டுபகுதிகளாகப் பிரிக்கப் பட்டது மேற்குப் பகுதியில் அசோகரின் புதல்வர் குணாளன் ஆட்சிபுரிந்தார்.
  • கிழக்குப் பகுதியில் அசோகரது பேரன்களில் ஒருவரான தசரதன் அரசராக இருந்தார். பாக்டிரிய படையெடுப்புகளின் விளைவாக பேரரசின் மேற்குப் பகுதி சீர்குலைந்தது.
  • தசரதனின் புதல்வர் சாம்பிரதி என்பவரது ஆட்சியில் கிழக்குப் பகுதி மட்டும் கட்டுக்கோப்பாக இருந்தது. மௌரிய வம்சத்தின் கடைசி அரசரான பிருகத்ரதன் என்பவரை அவரது படைத்தளபதி புஷ்யமித்திர சுங்கன்படுகொலை செய்தார்.
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

மௌரியர் ஆட்சிமுறை

மத்திய அரசாங்கம்

  • மௌரியர் ஆட்சி தொடங்கி இந்தியாவில் முடியாட்சி முறை பெரும் வெற்றிபெற்றது. மௌரியருக்கு முந்தைய கால இந்தியாவிலிருந்த குடியரசு மற்றும் சிறுகுழு ஆட்சிமுறைகள் சீர்குலைந்தன.
  • பண்டைய இந்தியவின் முதன்மை அரசியல் கோட்பாட்டாளராக விளங்கிய கௌடில்யர் முடியாட்சி முறையை ஆதரித்தபோதிலும், வரம்பற்ற முடியாட்சியை அவர் விரும்பவில்லை.
  • அரசன் தனது நிர்வாகத்தை செம்மையாக நடத்துவதற்கு அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  • எனவே, அரசனது ஆட்சிக்கு உதவியாக மந்திரி பரிஷத் என்ற அமைச்சரவை செயல்பட்டது. அதில் புரோகிதர், மகாமந்திரி, சேனாபதி, யுவராஜன் ஆகியோர் இருந்தனர்.
  • அன்றாட அலுவல்களை நிறைவேற்ற அமாத்தியர்கள் என்றழைக்கப்பட்ட சிவில் பணியாளர்கள் இருந்தனர். இவர்களை தற்கால இந்தியாவில் பணியாற்றும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளோடு ஒப்பிடலாம்.
  • அமாத்தியர்களை தேர்வு செய்யும் முறை குறித்து கௌடில்யர் விவரமாகக் கூறியுள்ளார். தர்மக் கோட்பாடுகளைப் பரப்புவதற்காக அசோகர் தர்மமகாமாத்திரர்களை நியமித்தார். மௌரியர் ஆட்சியில் நன்கு சீரமைக்கப்பட்ட ஆட்சித்துறை செயல்பட்டது.

வருவாய் நிர்வாகம்

  • பேரரசின் அனைத்துவகை வருவாய்களையும் வசூலிக்கும் துறையான வருவாய்த்துறையின் தலைவர் சம்ஹர்த்தர் என்று அழைக்கப்பட்டார்.
  • நிலவரி, நீர்ப்பாசனவரி, சுங்கவரி, வணிகவரி, படகுவரி, வனவரி, சுரங்கவரி, புல்வெளிக்கான வரி, தொழில் வரி, நீதிமன்றங்களில் விதிக்கப்படும் தண்டனைக்கீடான கட்டணம் என பல்வகை வருவாய் அரசுக்குக் கிடைத்தது
  • பொதுவாக விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு நிலவரியாக வசூலிக்கப்பட்டது.
  • அரசரது அவை மற்றும் அவரது குடும்பச்செலவுகள், ராணுவம், அரசுப் பணியாளர்கள், பொதுப் பணிகள், ஏழைகளுக்கு நிவாரணம், சமயம் சார்ந்த செலவுகள் என்பன அரசாங்க செலவினங்களில் குறிப்பிடத்தக்கவை.

ராணுவம்

  • நன்கு சீரமைக்கப்பட்டிருந்த மௌரிய ராணுவத்துக்கு தலைவராக சேனாபதி இருந்தார். வீரர்களுக்கு ஊதியம் பணமாக வழங்கப்பட்டது.
  • ராணுவத்தின் பல்வேறு நிலையில் பணியாற்றிய அதிகாரிகளுக்கான ஊதிய விகிதம் குறித்து கௌடில்யர் கூறுகிறார்.
  • கிரேக்க நாட்டு அறிஞர் பிளினி என்பவரது கூற்றுப்படி மௌரியரது படையில் ஆறு லட்சம் காலாட்படை வீரர்களும், முப்பதாயிரம் குதிரைப்படை வீரர்களும், ஒன்பதாயிரம் யானைகளும், எட்டாயிரம் தேர்களும் இருந்தன என்பது தெரிகிறது.
  • இந்த நான்கு பிரிவுகளைத் தவிர, கடற்படை மற்றும் போக்குவரத்து பிரிவுகளும் ராணுவத்தில் இருந்தன. ஒவ்வொரு பிரிவும் அத்யட்சகர்கள் என்ற மேற்பார்வையாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
  • தலா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஆறு குழுக்கள் அடங்கிய படைவாரியம் படைநிர்வாகத்தை மேற்கொண்டதாக மெகஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வாணிகம் மற்றும் தொழில்துறை

  • இத்துறையின் அலுவலர்கள் அத்யட்சகர்கள் எனப்பட்டனர்.
  • பொருட்களின் சில்லரை மற்றும் மொத்த விலைகளைக் கட்டுப்படுத்துவதும், தொடர்ந்து பொருட்களை மக்களுக்கு கிடைக்கச் செய்வதும் இந்த துறையின் பொறுப்பாகும்.
  • எடைகள், அளவுகள் ஆகியன முறைப்படுத்தப்பட்ன. சுங்க வரிகளை விதிப்பதும் அயல்நாட்டு வாணிகத்தை முறைப்படுத்துவதும் இதன் ஏனைய பணிகளாகும்.

மேலும் அறிய PDF பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்…

PDF Download

பண்டையக் கால இந்திய வரலாறு பாடக்குறிப்புகள்
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!