TNPSC அரசியலமைப்பு வகைகள் பாடக்குறிப்புகள்

0

அரசியலமைப்பு வகைகள்

அறிமுகம்

உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அரசியலமைப்பை பெற்றிருக்க வேண்டும் அரசியல் அமைப்பின்றி ஒரு நாட்டினை ஆட்சி செய்வது இயலாத காரியம். ஒரு சில விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் பல நாடுகளில் இருந்திருக்கின்றன என்பதனை வரலாறு மூலம் நாம அறிகிறோம். சீரான அமைதியான நாட்டினை உருவாக்க இவைகள் வேண்டும் என்பது தெரியவருகிறது.

குழப்பமின்றி சிறப்பாக ஆட்சி செய்ய அரசியலமைப்பு இன்றியமையாதது. ஜனநாயக நாடு அல்லது சர்வாதிகார நாடாக இருந்தாலும் அதை நிர்ணயிக்க ஒரு சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் அவசியம் என்பதை ஒவ்வொரு நாடும் ஏற்றுக் கொள்கிறது. தற்பொழுது விதிமுறைகள் எல்லாம் அரசியலமைப்பு என்ற அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் அறிதல் வேண்டும்.

அரசியலமைப்பின் பொருளும் விளக்கமும்

ஒரு நல்ல அரசாங்கத்தின் அமைப்பும் அதன் அதிகாரமும் அரசியலமைப்பின் நிலையை உணர்த்துவதாக அமையும். நற்குடிமகனின் உரிமைகளும், கடமைகளும் அரசியலமைப்பை உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலவரையறையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் ஆவணம் என அரசியலமைப்பை கூறுகின்றனர். ஆனால் அது உண்மையல்ல. அரசியலமைப்பு என்பது எழுதப்பட்டிருக்கலாம் அல்லது எழுதப்படாமலும் செயல்படுத்தப்படலாம் என உணர வேண்டும்.

சில நேரங்களில் அரசியலமைப்பு நெடுங்காலமாக பின்பற்றப்படும் விதிகளும், பழமொழிகளும் நடைமுறைகளும் கொண்டு உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது என கருதப்படுகிறது.
ஒரு அரசியலமைப்பு என்பது:-

  •  நாட்டின் ஆதாரச்சட்டமாகும்.
  •  எழுதப்பட்டோ அல்லது எழுதப்படாமலோ இருக்கலாம்.
  •  அரசாங்கத்தின் அமைப்பு மற்றும் அதிகாரத்தை விவரிக்கின்றது.
  •  குடிமக்களின் உரிமையை கூறுகின்றது.
  •  ஆளப்படுவோருக்கும், அரசாங்கத்திற்கும் இடையே உள்ள உறவை பற்றிக் குறிப்பிடுகின்றது.
  •  இதுவே உயர்ந்த சட்டமாகும். இதைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
    அரசியலமைப்பின் தேவை
கீழே தரப்பட்டுள்ள காரணங்களுக்காக அரசியலமைப்பு தேவைப்படுகிறது.

1. அடிப்படை சட்டம் அரசாங்கத்திற்கு கடிவாளமாகும்.
2. தனி மனித உரிமையைப் பாதுகாக்கவும்.
3. சட்டத்தின் ஆட்சி நிலைக்கவும்.
4. குழப்ப நிலையிலிருந்து மீட்கவும்.
5. இறையாண்மை அதிகாரத்தை வரையறுக்கவும்.
6. நிகழ்கால மற்றும் வருங்கால சந்ததிகளின் விருப்பு வெறுப்புகளை கட்டுப்படுத்தவும்.

அரசியலமைப்பின் உள்ளடக்கங்கள்

1. நிர்வாக அமைப்பும், நிறுவனமும்.
2. அரசாங்க அங்கங்களின் செயல்பாடுகள், அதிகாரங்கள் மற்றும் இடையே உள்ள தொடர்புகள்
3. குடிமக்களின் அடிப்படை உரிமைகள்
4. மக்களுடன் அரசாங்கத்தின் உறவு
5. அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள்

அரசியலமைப்பு திருத்தமுறைகள்

  • அரசியலமைப்பு திருத்தம் செய்யும் முறைகள் சில சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எழுதப்பட்ட அரசியலமைப்பு ஒரு சில விதிமுறைகளைப் பின்பற்றுதல் வேண்டும். இவைகள் எழுதப்பட்ட அரசியலமைப்பிற்கு மிக அவசியம் என கருதப்படுகின்றன.
  • அரசியலமைப்பின் புனிதத் தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கின்றது. மேலும் தனிநபர் சுதந்திரத்திற்கும், அரசியலமைப்பைச் சார்ந்தவைகளுக்கு உத்திரவாதம் அளிப்பது சிறப்பிற்குரியதே. அரசியலமைப்பு திருத்தம் எளிதான முறையிலும் கடினமான முறையிலும் கையாளப்படுகின்றது. இருப்பினும் இவை எல்லாம் சாதாரணமானவை.
  • சாதாரண முறையில் திருத்தம் மேற்கொண்டால் அரசாங்கம் நிலையற்ற தன்மையை அடையலாம். மேலும் கடினமான முறையில் திருத்தம் மேற்கொண்டால் இரண்டு வகையான விளைவுகள் ஏற்படலாம்.
  • முதலில் பொதுக்கருத்து அடிப்படையில் சட்டரீதியில் அல்லாத நிறுவனங்கள் ஏற்படும்.
  • இரண்டாவதாக இது போன்ற நிறுவனங்கள் உருவாக இடம் தராவிட்டால் கலகம் அல்லது புரட்சி ஏற்பட வாய்ப்பு உண்டாகலாம். எனவே, புரட்சி அல்லது நிலையற்ற தன்மையை ஏற்படுத்துகிற மாதிரி அரசியலமைப்பு திருத்த முறைகள் இருக்கக் கூடாது.

தற்கால அரசியலமைப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

1. இயல்பாக மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்புகள்
2. எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்புகள்
3. நெகிழா மற்றும் நெகிழும் அரசியலமைப்புகள்

இயல்பா மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்பு

  • விதிமுறைகளின் வளர்ச்சி, தேவை இலைகளில் அடிப்படையில் உருவானதுதான் இயல்பான மற்றும் பரிணாம வளர்ச்சியினால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு.
  • பரிணாமத்தின் உச்சகட்டமாக நாட்டில் உள்ள அரசியலமைப்பிற்கு வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புகள் தயாரிக்கப்படவில்லை.
  • ஆனால் கடந்த காலத்தில் ஏற்பட்டு தொடர்ந்து வளர்ந்த பழக்கவழக்கங்களும், நடைமுறைகளும், மரபுகளும் பஞ்சாயத்துகளில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் விதிமுறைகளும் தான் அரசியலமைப்பு ஏற்பட காரணங்களாக இருந்திருக்கின்றன.
  • இயற்றப்பட்ட அரசியலமைப்பு முழுக்க மனிதனின் முழு முயற்சியினால் இயற்றப்பட்டதே ஆகும்.
  • மனசாட்சிப்படி உருவாக்கப்பட்டதன் அரசியலமைப்புகள். பெரும்பாலும் அரசர்களாலும், பாராளுமன்றத்தாலும், உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாலும் ஏன் அரசியலமைப்பு பேரவையினாலும் இயற்றப்பட்டவையே.
  • இயற்றப்பட்ட அரசியலமைப்பின் கூறுகள் அனைத்தும் ஏதேனும் ஒரு ஆவணத்திலோ அல்லது பல ஆவணங்களிலோ எழுதப்பட்டிருக்கும்.
  • இயல்பான மற்றும் இயற்றப்பட்ட அரசியலமைப்புகள் தற்காலத்தில் எழுதப்பட்ட மற்றும் எழுதப்படாத அரசியலமைப்பு என பிரிக்கப்பட்டுள்ளன.

எழுதப்பட்ட அரசியலமைப்பு

  •  எழுதப்பட்ட அரசியலமைப்பு ஆவண வடிவில் அல்லது நூல் வடிவில் அடிப்படை மற்றும் அரசாகங்களின் பல்வேறு அங்கங்களுக்கு தேவையான விதிமுறைகளின் தொகுப்பேயாகும். தீர்க்கமான முறையில் உருவாக்கப்பட்டதே.
  •  நேர்மையாக. மனசாட்சிப்படி திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. ஒரு சில நாடுகளிலன் அரசியலமைப்பு பேரவையினாலும், மரபுப்படியும் உருவாக்கப்பட்டிருக்கலாம். எழுதப்பட்ட அரசியலமைப்பு இந்திய நாட்டில் உருவாக்கப்பட்டு மற்றும் அரசியலமைப்பு பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் முகப்புரை பின்வரும் வாசகங்களோடு தொடங்குகிறது. இந்திய மக்களாகிய நாம் இந்திய நாட்டின் அரசியலமைப்பை ஏற்று இறையாண்மை நிறைந்த மக்களாட்சி குடியரசாக நிறுவுகிறோம்.
  • இந்தியா, மியான்மார் மற்றும் அமெரிக்காவின் அரசியலமைப்பு ஒரே தேதியில் உருவாக்கப்பட்ட தனி ஆவணமாக உள்ளது. ஆனால், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஒரு தொடரான சிறு சிறு துண்டுகளாக அரசியலமைப்பு ஆவணமாக்கப்பட்டுள்ளது.
  • எழுதப்பட்ட அரசியலமைப்பாக இருப்பதனால் சாதாரண சட்டங்களுக்கும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை தெளிவாக அறிய முடியும். அரசியலமைப்பு சட்டம் என்பது இன்றயாண்மை அதிகாரம் உள்ள ஆட்சியாளர்களால் இயற்றப்படுகிறது.

எழுதப்பட்ட அரசியலமைப்பின் நிறைகள்

  1. திடமானது நிலையானது. குழப்பத்திற்கு இடமில்லை. அடிப்படை விதிகள் எழுதப்பட்டிருப்பதால் விருப்பத்திற்கு ஏற்ப அறியலாம். அரசாங்க அங்கங்களின் அதிகாரம் மற்றும் நிர்வாக அமைப்பு முறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி அறிய குழப்பமோ தகராறோ ஏற்படாது. அவ்வாறு கருத்து வேறுபாடு நிலவினால் நீதிமன்றத்தை அணுகலாம்.
  2. மிகுந்த கவனத்துடன் நீண்ட பிரதிவாதத்திற்கு பிறகு எழுதப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நீண்ட அனுபவம் மற்றும் ஆழ்ந்த அறிவை புலப்படுத்துகிறது. தற்காலிக விருப்பு வெறுப்புகளுக்கும் விரைவான தீர்மானங்களுக்கும் இடமில்லை.
  3. எழுதப்பட்ட அரசியலமைப்பு தனி மனிதன் உரிமையை பாதுகாக்கிறது. அரசியலமைப்பில் உரிமைகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இவைகள் சாதாரண சட்டங்களை விட உயர்வாக கருதப்படுகின்றன. அவ்வாறு இருப்பதால் வௌ;வேறு அரசாங்கங்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றுவிதிலிருந்து உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன.
  4. அரசியலமைப்பை அவ்வப்போது உள்ள அரசாங்கங்கள் மாற்றும் போது மக்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப மாற்றப்படுவதினின்றும் அது பாதுகாக்கப்படுகிறது.
  5. நெருக்கடி காலத்திற்கு ஏற்றது. அசாதாரண நிலை ஏற்படும் போது எழுதப்பட்ட அரசியலமைப்பு நிலையாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.
  6. கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எழுதப்பட்ட அரசியலமைப்பு பொருத்தமானது. ஏனென்றால் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்கள் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளன.

எழுதப்பட்ட அரசியலமைப்பின் குறைகள்

1. திருத்தம் செய்ய கடினமான முறையை பின்பற்ற வேண்டும். நெகிழா தன்மையையும் பழமை வாதமும் பெற்றுள்ளது.
2. எழுதப்பட்ட அரசியலமைப்பில் நீதித்துறை பழமைவாதத்தை பின்பற்றும் அரசாங்கம் காலத்திற்கேற்ப சட்டம் கொண்டுவர நினைக்கும் போது, நீதிமன்றம் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதா என பார்க்க நேரிடும்.
3. நாட்டின் விதிமுறைகள் மற்றும் குறிக்கோள்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பதால் எல்லா காலத்திற்கும் இது பொருத்தமானதாக இருக்காது. இது பிற்காலத்தில் வளர்ச்சியைத் தடை செய்கிறது.
4. விரிவான விளக்கமுடையதாக இருப்பதால் சில சமயங்களில் மிகைப்படுத்தப்பட்ட சட்ட விளக்கத்திற்கு வழி ஏற்படுத்துகிறது.

எழுதப்படாத அரசியலமைப்பு

ஒரு நாட்டின் அரசியலமைப்பு உருவாவது அந்த நாட்டின் இயல்பான வளர்ச்சியையம் கட்டுப்பாடுகளையும் நடைமுறைகளையும் பொறுத்ததாகும். இது ஆவணங்களில் சொல்லப்பட்டிருக்க வேண்டியதில்லை. ஒரு சில எழுதப்பட்டிருந்தாலும் அவை எழுதப்படாத அம்சங்களை விட மிக குறைவா உள்ளதாக அறியலாம். இதற்கு உதாரணம் இங்கிலாந்து.

எழுதப்படாத அரசியலமைப்பின் நிறைகள்

  1. காலத்திற்கேற்ப சுழ்நிலைக்கேற்ப சட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். தேவைப்படும் பொழுது சட்டங்களை சேர்த்துக் கொள்ளலாம். வரையறை இல்லை. அங்கே வளர்ச்சி உண்டு.
  2. வளையும் தன்மையுடையது. பொதுமக்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வப்பொழுது மாற்றங்களைக் கொண்டு வரலாம். புரட்சிகள் தேவையில்லை.
  3. எழுதப்படாத அரசியலமைப்பில் மாற்றங்களை எளிதில் கொண்டு வரலாம். எதிர்பாராத நேரங்களில் மாற்றங்கள் செய்வது நன்மை தரும்.
  4. பண்பாடுகள் மற்றும் மரபுகளைக் காப்பாற்றுவதில் அவை சிறப்பானவை. பிரிட்டிஷ் அரசியலமைப்பு உடைபடாத வரலாற்றினைப் பெற்றுள்ளது. இவ்வளர்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதை வரலாறு மூலம் அறியலாம்.

எழுதப்படாத அரசியலமைப்பின் குறைகள்

1. முடிவற்றது. குழப்பம் ஏற்படுத்தக்கூடியது. விதிமுறைகளை சாதாரண மனிதன் அறிந்து கொள்ள வாய்ப்பு இல்லை. எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்த நேர்மையான மனப்பாங்கைப் பெற்றிருப்போரால் தான் செயல்படுத்த முடியும். அதன் தன்மை வேகம் ஆகியவற்றை புரிந்து கொள்ள அவர்களால் தான் முடியும். சாதாரணமானவர்களால் புரிந்து கொள்ளவோ பின்பற்றவோ இயலாது.
2. சில சமயங்களில் நிலையற்ற தன்மையுடையது.
3. அதிகாரம் வழங்கப்பட்ட நிலையைக் காட்டிலும் நீதிமன்றம் தன்னுடைய அதிகார எல்லையை நீட்டித்துக் கொள்ளும். நீதிமன்றம் தன் விருப்பம் போல சட்ட இயல் மற்றும் அதன் நுணுக்கங்கள் ஆகியவற்றை அதன் விருப்பப்படி எடுத்தாளும்.
4. எழுதப்படாத அரசியலமைப்பு மக்காளட்சிக்கு உகந்ததல்ல என்ற கருத்து வலிமையாக உள்ளது. மக்கள் வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளைத் தான் விரும்புவர். எழுதப்படாத அரசியலமைப்பு உயர்ந்தோர் குழு ஆட்சிக்குத்தான் பயன்படும்.

நெகிழும் அரசியலமைப்பு

நெகிழும் அரசியலமைப்பில் அரசியலமைப்பு சாதாரண சட்டத்திற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. இரண்டுமே ஒரே மாதிரியான முறைகளைப் பின்பற்றியே இயற்றப்படுகின்றன. அரசியலமைப்பு பொதுவாக மரபுகளின் அடிப்படையிலோ அல்லது எழுதப்பட்டோ இருக்கின்றது.
ஒரே மாதிரியாகவே திருத்தம் செய்யப்படுகின்றது. அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சாதாரண சட்டத்திற்கும் திருத்திற்கும் திருத்தம் செய்ய எவ்வித பிரத்தியேக நடைமுறையும் பின்பற்றப்படவில்லை.
நெகிழும் அரசியலமைப்பிற்கு சிறப்பான உதாரணமாக இங்கிலாந்து அரசமைப்பை கருதலாம். இங்கிலாந்து பாராளுமன்றமே உயர்நத அதிகாரம் அல்லது இறையாண்மை அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது.

நெகிழும் அரசியலமைப்பின் நிறைகள்

1. நெகிழும் அரசியலமைப்பை சாதாரண சட்டங்களைப் போல திருத்தம் செய்யலாம். காலத்திற்கேற்றாற் போல் புதிய முறைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
2. வளையும் தன்மை கொண்டுள்ளதால் சுலபமாக மக்களின் தேவைகளை நெகிழும் அரசியலமைப்பில் கொண்டு வரலாம். மக்களின் தேவை அவ்வப்பொழுது நிறைவேற்றப்பட்டுவிட்டால் புரட்சி ஏற்பட வாய்ப்பே கிடையாது. இந்நிலை தான் இங்கிலாந்தில். காரணம் அவ்வப்பொழுது மக்களின் தேவைப்கேற்ப சட்டங்களை இயற்றிக் கொள்வதே ஆகும்.
3. வளரும் நாடுகளுக்கு நெகிழும் அரசியலமைப்பு தேவை. வளர்ச்சி அரசியலமைப்பின் அடிப்படையை பாதிக்காத வண்ணம் அமைந்துள்ளது. மேலும் சமுதாய அரசியல் மாற்றம் சிறப்பாக அமைந்துள்ளது. நெகிழும் அரசியலமைப்பிற்கு வலுவட்டம் தருவதாக உள்ளது. அரசியல் மற்றும் சமுதாயத்தை சரியாக மாற்றம் செய்ய எப்பொழுதும் மிகச்சரியான அரசியலமைப்பு அமைய இயலாது.
4. தேசியமரபுகளின் அடிப்படையில் நெகிழும் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தேவையும் மாற்றமும் நெகிழும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. வரலாற்றில் தொடர்ச்சியாக காணப்படுவதாகும். நெகிழும் அரசிலயமைப்பு பொதுமக்கள் கருத்தை உணரக்கூடிய நாடித்துடிப்பாக உளதோடு மக்களின் எண்ணத்தையும் முன்வைக்கிறது.

நெகிழும் அரசியலமைப்பின் குறைகள்

1. மாறிக்கொண்டே இருப்பது மக்களைத் திருப்திபடுத்த பெரும்பான்மையோர், சிறுபான்மையோரின் கணக்கில் நன்மையை கொள்ளாமல் இருக்க வழிவகுக்கும். இத்தகைய அரசியலமைப்பு நிலையான சிறந்த நிர்வாகத்தை தர இயலாது.
2. திருத்தம் செய்யும் முறை சுலபமாக உள்ளதால் அரசியலமைப்பு சுலபமாகவும் எளிதாகவும் மாற்றப்படுகிறது. மாறும் தன்மையுடைய மக்களின் பெருவிருப்பத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது. தீர்மானங்கள் சில நேரங்களிலே ஆவேச உணர்ச்சிகள் அடிப்படையில் அமைதி மாற்றும் ஒற்றுமை பாதிப்புக்குள்ளாகும். ஸ்திர்த்தன்மைக்க தொல்லை தரும் நிலையும் ஏற்படலாம். நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் ஏற்பட்டு பிரிவினை ஏற்பட வழிவகுக்கலாம்.

நெகிழா அரசியலமைப்பு

நெகிழா அரசியலமைப்பில் திருத்தம் செய்ய சில பிரத்தியேக முறைகள் தேவைப்படுகின்றன. நெகிழா அரசியலமைப்பிற்கு உதாரணங்களாக. அமெரிக்கா. ஆஙஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை குறிப்பிடலாம். நெகிழா அரசியலமைப்பு சாதாரண சட்டங்களைவிட உயர்வானது. சாதாரண சட்டங்களை மாற்றுவது போல் இல்லாமல் சில குறிப்பிட்ட தனி வழிகள் மூலம் தான் நெகிழா அரசியலமைப்பிற்கு திருத்தம் மேற்கொள்ளலாம். இதனால் திருத்தம் செய்வது கடினமாகும். அரசின் இறையாண்மைக்கு உயர்வு அளிப்பதே நெகிழா அரசியலமைப்பின் நோக்கமாகும். இத்தன்மைக்கு புனிதத்துவம் வழங்குவது அரசியலமைப்பே ஆகும்.
இந்திய அரசியலமைப்பு இங்கிலாந்து அரசியலமைப்பு போல் நெறிழும் தன்மையும் அமெரிக்க அரசியலமைப்பு போல நெகிழாத்தன்மையும் பெற்றதல்ல. ஆங்கில அரசியலமைப்பு போல அதிகப்படியான நெகிழும் தன்மையையோ அமெரிக்க அரசியலமைப்பு போல அதிக நெகிழாத்தன்மையையோ பெற்றில்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்ட தன்மையை கொண்டுள்ளது.

நெகிழா அரசிலயமைப்பின் நிறைகள்

1. நிரந்தாரமானது, மாறாத தன்மையுடையது. அனுபவமும் அறிவாற்றல் பெற்றவர்களாலும் எழுதப்பட்டதாகும்.
2. சட்டமன்றத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து அரசியலமைப்பை பாதுகாக்கின்றது. அரசியலமைப்பு சட்டம், சட்ட மன்றங்களின் கைப்பாவையாக போய்விடக்சுடாது.
3. அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது இவ்வகை அரசியலமைப்பே. அடிப்படை உரிமைகள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாகும். இவைகளை எளிதில் மாற்றக்கூடாது.
4. சிறு பான்மையினரை பாதுகாப்பதே நெகிழா அரசியலமைப்பு, பெறும்பான்மையினர் எடுக்கும்நடவடிக்கைகள் சிறுபான்மையினரை பாதிக்கக்கூடாது. அவ்வாறு பாதிக்கும் போது நீதிமன்றம் அதனை பாதுகாக்க வேண்டும்.
5. நெகிழா அரசியலமைப்பு மக்களின் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டது. மக்களின் கொந்தளிப்பு உணர்வுகள் அரசியலமைப்பை மாற்றும் முறையை கைவிட்டுவிடக் கூடாது.
6. கூட்டாட்சி ஒற்றுமைக்கும், பலத்திற்கும் பாதுகாப்பிற்கும் நெகிழா அரசியலமைப்பு முக்கியமாக தேவைப்படுகிறது. நெகிழா அரசியலமைப்பில் தான் கூட்டாட்சிப் பகுதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறன்றன. ஒன்றின் மீது இன்னொன்று ஆதிக்கம் செலுத்த இயலாது. இது நெகிழா அரசியலமைப்பில் தான் சாத்தியமாகும்.

நெகிழா அரசியலமைப்பின் குறைகள்

1. சில நேரங்களில் அரசியலமைப்ப மாற்றம் தவிர்க்க இயலாதது. ஆனால் நெகிழா அரசியலமைப்பை சுலபமாக திருத்தம் செய்ய முடியாது.
2. நெகிழா அரசியலமைப்பை எழுதியவர்கள் எதிர்க்காலத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. வளரும் நாடுகளுக்கு இவ்வரசமைப்பு தகுந்தல்ல. மேலும் வளரும் நாடுகளில் அடிக்கடி மாற்றம்.
3. அரசியலமைப்புச் சட்டத்திற்குள் இயற்றப்பட்ட சட்டங்கள் வருகின்றனவா என உறுதி செய்து கொள்வதே நெகிழா அரசியலமைப்பில் நீதிமன்றத்தின் கவலையாக இருக்கும்.
குறைகளும் நிறைகளும் இருப்பினும் இன்றைய சு10ழ்நிலையில் நெகிழா மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்புதான் நல்லது என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது.
எழுதப்பட்ட அரசியலமைப்பில் எதிர்காலத்தில் நாம் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் நெகிழும் தன்மை பொருந்திய ஒரு சில அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது தான். இந்திய அரசியலமைப்பில் ஒரு சில நெகிழும் மற்றும் நெகிழா அம்சங்கள் இடம் பெற்றிரக்கின்றன. எனவே இந்திய அரசியலமைப்பு இதர நாடுகளுக்கு இவ்வகையில் வழிகாட்டியாக விளங்குகிறது.

PDF Download

TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள் Download

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!