தமிழகத்தில் வங்கிகளுக்கு செல்வோர் கவனத்திற்கு – இன்று முதல் புதிய தளர்வுகள்!
தமிழகத்தில் இன்று (ஜூன் 28) முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பாதிப்புகள் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் 100% ஊழியர்களுடன் வங்கிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
வங்கிகள்:
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வர தொடங்கிய காரணமாக மாநிலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழக மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இன்று (ஜூன் 28) காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. புதிய தளர்வுகள் படி தமிழகம் முழுவதும் வங்கிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இன்று முதல் பேருந்து சேவை – பொதுமக்கள் நிம்மதி!
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழுமம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியதாவது, தமிழகத்தில் வரும் ஜூலை 5ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாவட்டங்கள், குறைவான மாவட்டங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அனைத்து வங்கிகளும் 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வாடிக்கையாளர் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், வங்கி வேலை நேரம் மாலை 4 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தொற்று பரவல் குறைவாக காணப்படும் 27 மாவட்டங்களில் அனைத்து வங்கி கிளைகளும் 100% ஊழியர்களுடன் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையும், வங்கி வேலை நேரம் மாலை 5 மணி வரையும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும் நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட பிற அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் வழக்கம் போல் செயல்படும். ஆதார் சேவைகள், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் சுமார் 1 மாத காலத்திற்கு பின் 100% ஊழியர்களுடன் வங்கிகள் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.