தமிழகத்தில் தீவிரமாய் பரவும் டெங்கு காய்ச்சல் – பொதுமக்களே உஷார்!
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் வீரியம் அதிகமாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்
தமிழகத்தில் பருவமழை துவங்கியுள்ள நிலையில் டெங்கு காய்ச்சலின் பரவலும் அதிகரிக்க துவங்கிவிட்டது. நாளொன்றுக்கு மட்டுமே 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று மட்டுமே 18 பேருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து பொதுமக்களின் வீட்டிற்கும் நேரில் ஆய்வு செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எங்கெங்கெல்லாம் கொசுக்கள் தேங்கும் என்கிற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், பொதுமக்களும் வீட்டருகில் தேங்கியிருக்கும் நீரினை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படியும், டயர்கள், டிரம்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறப்பு வார்டுகளை உருவாக்க வேண்டும் எனவும், டெங்கு பரிசோதனைக்கான உபகரணங்கள் இருப்பதை உறுதி செய்யும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.