தமிழகம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகமும், கர்நாடகமும் இந்தியாவின் இரண்டு கண்கள் போன்றவை.
- வைகை அணை வரை கோதாவரி நீரை கொண்டு வருவதுதான் மத்திய அரசின் திட்டம் என சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
100 ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் பாம்பன் ரயில் பாலம்
- 1914-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்றது.
- இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் இதுதான். 2.3 கி.மீ. நீளமுள்ள இப்பாலத்தை கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.
1,000 வருடத்துக்கு முந்தைய சீன பானை ஓடுகள்: கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவர்கள்
- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேளானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் 1,000 ஆண்டுகள் முந்தைய பாசிகள், மணிகள், சீன நாட்டுப் பானை ஓடுகளை கண்டெடுத்துள்ளனர்.
- சீனநாட்டு போர்சலைன் வகை மண்பாண்டத்தில் வெள்ளை ஓட்டின் மேல் நீலநிறப்பூ போன்ற வடிவம் வரையப்பட்டுள்ளது. வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்படும் இது உப்புப்பூச்சு மூலம் பளபளப்பாக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாசிநிற களிமண்ணால் செய்யப்படும் செலடன் வகை மண்பாண்டங்களில் பச்சை, இளம்பச்சை, சாம்பல், பழுப்பு நிறங்கள் உண்டு. இதில் கிண்ணம், தட்டு போன்றவை செய்யப்படுகின்றன. இங்கு கிடைத்தது இளம்பச்சை நிறத்தில் உள்ள கிண்ணத்தின் அடிப்பகுதி ஆகும்.
இந்தியா
பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் மணிரத்னத்துக்கு வாழ்நாள் சாதனை விருது
- பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில்திரைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
- இதற்காக 13 பேர் கொண்ட நடுவர் குழு தேசிய அளவில் திரை ஆளுமைகளை ஆராய்ந்துவாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இயக்குநர் மணிரத்னத்தை தேர்வு செய்துள்ளது. மார்ச் 1-ம் தேதி நடக்கும் நிறைவு விழாவில், மணிரத்னத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா விருது வழங்கி கவுரவிக்கிறார்.
மாநிலத்தை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்றும் : கவர்னர் வித்யாசாகர் ராவ்
- மகாராஷ்டிரா ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக அரசு மாற்ற உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்தார்.
- விவசாயம், ஜவுளி, சுற்றுலாதுறைகளில் அதிகரித்துவரும் வளர்ச்சிக்கு இது உதவும் , உள்கட்டமைப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் அரசாங்கத்தின் முதலீடு அதிகரித்துள்ளது என்றும் ஜி.எஸ்.டி.பி ஆனது 2016-17-ல் 8.5 சதவீதம் மற்றும் 2015-16-ல் 9.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம்-2 ஆளில்லா விமானம் சோதனை வெற்றி
- இந்திய ராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டி ஆர் டி ஒ) சார்பில் தயாரிக்கப்பட்ட ருஸ்டம் 2 என்னும் கனரக ஆளில்லா விமானத்தின் சோதனை, கர்நாடகாவின் சித்ரதுர்கா என்னுமிடத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
- உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த விமானம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ஆளில்லா விமானங்களுக்கு இணையான திறன்களை பெற்றது.
உலகம்
“பொதுமக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தும் சிரியா”
- கிளர்ச்சியாளர்கள் பகுதியான கிழக்கு கவுடாவில் சிரியா அரசு ரசாயன தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய – ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
- இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள்.
வறுமை கோட்டுக்கு கீழே வாழும் குடும்பத்தினருக்கு இலவச பஸ் பயணம் – உ.பி. அரசு அதிரடி
- உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் வறுமை கோட்டுக்கு கீழே வாழும் சுமார் ஒரு கோடி குடும்பத்தினருக்கு இலவச பஸ் பயணச் சலுகை அளிக்க யோகி ஆதித்யாநாத் அரசு தீர்மானித்துள்ளது.
வணிகம்
5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்ற உதவுவோம்: மோடியை சந்தித்த உபெர் தலைமைச் செயல் அதிகாரி தகவல்
- இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை உபெர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தாரா கோஸ்ரோஷகி சந்தித்துப் பேசினார்.
- புதுடெல்லியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள்.
- இளம் குறுந்தொழில் முனைவோருக்கு பொருளாதார வாய்ப்புகள் ஏற்படுத்துதல் மற்றும் 2025-க்குள் 5 லட்சம் கோடி டாலர் அளவுக்கு இந்தியப் பொருளாதாரத்தை மாற்றுவதற்கு உபெர் நிறுவனம் பங்காற்றுதல் ஆகியவை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக உபெர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தை போல் கொல்கத்தாவிலும் மிதக்கும் சந்தை
- இந்தியாவிலேயே முதன்முறையாக மிதக்கும் சந்தையை உருவாக்கி இருக்கிறது கொல்கத்தா நகர்ப்புற வளர்ச்சிக் கழகம். இது உருவானதன் பின்னணியில் 228 வியாபாரிகளின் வாழ்வாதாரம் அடங்கி இருக்கிறது.
விளையாட்டு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரையும் வென்றது இந்தியா
- இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் வெற்றி கண்டது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் இந்தியா 5-1 என்ற கணக்கில் அபாரமாக ஆடி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் நியூசிலாந்து அணி திரில் வெற்றி
- நியூசிலாந்து அணி 49.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது.
சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் – இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார்
- சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் டென்மார்க் வீரரை வென்று இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.