தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் போதும்? கல்வித்துறை அமைச்சரின் விளக்கம்!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த நடைமுறை வரும் கல்வியாண்டிலும் தொடரப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதிலளித்தவை குறித்து விரிவாக பார்ப்போம்.
பொதுத்தேர்வு
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழித்தாள் தேர்வை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அத்துடன் பொதுத்தேர்வுக்கு வருகை புரியாத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைவரும் பொது தேர்வு எழுதிடும் வகையில் ஆண்டில் 2 அல்லது 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். இந்த முறை வரும் கல்வியாண்டிலும் பின்பற்றப்படுமா? என கேள்வி எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, தற்போது 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் கொரோனா பரவல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆல் பாஸ் செய்யப்பட்டவர்கள்.
கொரோனா பரவல் காரணமாக இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் தற்போது பொதுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு மட்டும் இந்த சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன் வரும் கல்வியாண்டில் இந்த விதிமுறை பின்பற்றப்படாது என்றும் அறிவித்துள்ளார். மேலும் வரும் கல்வியாண்டில் வழக்கம் போல் குறைந்தபட்ச வருகை பதிவு என்பது கட்டாயமாக கடைபிடிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.